வெள்ளி, 14 நவம்பர், 2014

ராகுல் : மோடி துடைப்பத்துடன் போஸ் கொடுக்கிறார் ஆனால் மதவாத விஷத்தை பரப்புகிறார்!

தில்லியில் ஜவாஹர்லால் நேருவின் 125ஆவது பிறந்த தின விழாவில், உறுதிமொழி ஏற்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர்ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். பிரதமர் நரேந்திர மோடி மதவாத விஷத்தைப் பரப்புகிறார் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. ஜவாஹர்லால் நேருவின் சுதந்திர இந்தியாவை சீர்குலைக்க முயற்சிப்போரை எதிர்த்துப் போராடுமாறும் தனது கட்சியினரை காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 125ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லியில் வியாழக்கிழமை காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கட்சித் தலைவர் சோனியாவும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் உரையாற்றினர். அப்போது பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல், சோனியா பேசியதாவது:

நேருவின் கண்ணோட்டத்தை, கனவுகளை அழிக்க மிகப்பெரிய முயற்சிகள் நடைபெறுகின்றன. இதைச் செய்யும் சக்திகள், அவரைத் தனிப்பட்ட முறையில் குறிவைப்பதோடு, அவரது சித்தாந்தங்களையும், போராட்டத்தையும் குறிவைக்கின்றனர்.
நேரு தற்போது உயிரோடு இருந்திருந்தால், இந்தியாவின் ஆன்மைவைக் காப்பதற்காக மதச்சார்பற்ற படைவீரராக மாறி, மதவாதத்தை எதிர்த்துப் போராடுமாறு அனைத்து காங்கிரஸôரையும் கேட்டுக் கொண்டிருப்பார்.
காங்கிரஸ் கட்சியின் வரலாறு என்பது 129 ஆண்டுகள் பழைமையானதாகும். இந்தக் காலகட்டத்தில் அனைத்து விதமான கஷ்டங்களும் வந்தன. ஆனால், நாம் அவற்றைச் சமாளித்தோம். பல்வேறு சூறாவளிகளை நாம் சந்தித்தோம். ஒவ்வொரு நெருக்கடியும் நமக்கு புதிய பலத்தைக் கொடுத்தன. சவால்களை எவ்வாறு சந்திப்பது என்பதை நமது தலைவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொண்டோம்.
நீதியிலும் சுதந்திரத்திலும் தனக்கு இருந்த தீவிர நம்பிக்கை காரணமாக, தனிநபரை விட அமைப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் தரக்கூடிய பாதைக்கு அவர் நாட்டைக் கொண்டு சென்றார். அனைத்து விதமான சிந்தனைகளுக்கும் இடமளிக்கக் கூடிய அரசியலை அவர் நடத்தினார் என்றார் சோனியா காந்தி.

"சுயவிளம்பரம் தேடும் பாஜக'
விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது: தற்போது, சினம் கொண்டவர்கள் இந்த நாட்டை ஆள்கின்றனர். ஆங்கிலத்தை ஒதுக்குங்கள் என்றும், ஹிந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். சுதந்திரத்துக்குப் பிறகு நாம் இதைச் செய்திருந்தால், நமது இளைஞர்களால் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றிருக்க முடியாது.
அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படைகள் தரைமட்டமாக்கப்படுகின்றன. ஒருபுறம் வீடுகளுக்கு வர்ணம் பூசப்பட்டு, சாலைகள் சுத்தப்படுத்தப்படுகின்றன. தூய்மை என்ற பெயரில் புகைப்படங்களை எடுத்து சுயவிளம்பரம் தேடும் பணி நடைபெறுகிறது. கோப அரசியல் என்பது அன்பு அரசியலுக்கு எதிரானது. மத்தியில் தற்போதுள்ள அரசை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே எதிர்த்துப் போராட முடியும் என்றார் ராகுல் காந்தி.

பாஜக பதிலடி
காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறியதாவது:
சொந்த அரசியலை நடத்துவதற்காக நேருவின் பிறந்த தினத்தை காங்கிரஸ் பயன்படுத்துகிறது. சமூகத்தை ஒன்றுபடுத்தவும், சகோதரத்துவத்தை பரப்பவும் உறுதியேற்க வேண்டிய அவர்கள், அரசியல் ஆதாயத்துக்காக சமூகத்தைப் பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ்தான் வெறுப்பூட்டும் அரசியலில் ஈடுபடுகிறதே தவிர, பாஜக அல்ல. தூய்மையான இந்தியா என்ற மகாத்மாவின் லட்சியத்தை அமல்படுத்தவே மோடி முயற்சித்து வருகிறார் என்றார் ஷாநவாஸ்.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக