செவ்வாய், 11 நவம்பர், 2014

சுரங்க ஊழல் வழக்கில் சி.பி.ஐ பல்டி: பிர்லாவுக்கு எதிராக போதிய ஆதாரம் உள்ளது!

புதுடில்லி:நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில், குமாரமங்கலம் பிர்லாவுக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக, முன்னர் தெரிவித்த சி.பி.ஐ., தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளது. பிர்லா, நிலக்கரி துறை முன்னாள் செயலர் பரேக் உட்பட, பலருக்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதாக தெரிவித்து உள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பரத் பராஷர் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, அரசு சிறப்பு வழக்கறிஞர் சீமா கூறியதாவது:
தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.பேரம் படியல்லையோ ?
இந்த விஷயத்தில், பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக, போதிய ஆதாரங்கள் உள்ளன.
முறைகேட்டில், இவர்கள் ஈடுபட்டது, ஆதாரங்களை மேலோட்டமாக பார்த்ததிலேயே தெரிவதால், அவர்களுக்கு எதிரான வழக்கை முடிக்கும்படி, சி.பி.ஐ., தாக்கல் செய்த அறிக்கையை, கவனமாக பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, சீமா கூறினார்.
இதன்பின், நீதிபதி பரத் பராஷர் கூறியதாவது:வழக்கின் உண்மை நிலவரங்கள் மற்றும் சூழ்நிலைகளை ஆராய்ந்த போது, குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக, போதிய ஆதாரங்கள் இருப்பதாக, அரசு சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதனால், வழக்கை முடிக்கும்படி, சி.பி.ஐ., தாக்கல் செய்த அறிக்கை, வரும், 25ம் தேதி, நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும். அதன்பின், முடிவை தெரிவிக்கும்.இவ்வாறு, நீதிபதி கூறினார்.
வழக்கு விவரம் என்ன?* முந்தைய ஐ.மு.கூ., ஆட்சியில், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், மத்திய அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்தது.* கடந்த, 2005ம் ஆண்டில், ஒடிசா மாநிலத்தில், தலபிராவில் உள்ள, இரண்டு நிலக்கரி சுரங்கங்கள், குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான, ஹிண்டால் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டன. இதில், முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.* இதையடுத்து, பிர்லா, நிலக்கரி துறை முன்னாள் செயலர் பரேக் உட்பட, சிலர் மீது, கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சி.பி.ஐ., விசாரணையை துவக்கியது.* ஹிண்டால் நிறுவனத்திற்கு முதலில், நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்க மறுத்த பரேக், அடுத்த சில நாட்களிலேயே தன் முடிவை மாற்றி, இரண்டு நிலக்கரி சுரங்கங்களையும், அந்த நிறுவனத்திற்கே ஒதுக்கி உள்ளார்.* குமாரமங்கலம் பிர்லாவை, செயலராக இருந்த பரேக், தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசிய பின், இந்த ஒதுக்கீடு நடைபெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.* இதன்பின், விசாரணை நடத்திய சி.பி.ஐ., பிர்லா, பரேக் மற்றும் சிலருக்கு எதிரான, நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கை கைவிடுவதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக