புதன், 19 நவம்பர், 2014

மேகேதாட்டு அணை திட்டத்தை நிறுத்தும்படி கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு

மேகேதாட்டு அணை திட்டத்தை நிறுத்தும்படி கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் இரண்டு நீர்மின் திட்டங்களை நிறைவேற்ற அம்மாநில அரசு முயற்சி எடுத்து வருவது குறித்து செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
காவிரி நதிநீரை பங்கிட்டுக் கொள்வது குறித்து காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வெளியிட்டது. இத்தீர்ப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. காவிரி நீரை நான்கு மாநிலங்களும் பங்கிட்டுக் கொள்வது குறித்த வழிமுறைகள் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளன.

தேசிய நீர்மின் கழகம்
இத்தீர்ப்பில் கடந்த 1998-ம் ஆண்டு கர்நாடக அரசு நிறைவேற்ற திட்டமிட்டிருந்த சிவசமுத்திரம், மேகேதாட்டு, ராசிமணல், ஒகேனக்கல் நீர் மின் திட்டங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் தேசிய நீர்மின் கழகத்தின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இத்தீர்ப்பு தமிழகம், கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களையும் கட்டுப்படுத்தும்.
இந்நிலையில், கர்நாடக எல்லையில் உள்ள மேகேதாட்டு என்ற இடத்தில் இரண்டு மின் திட்டங்களை நிறைவேற்ற அம்மாநில அரசு சர்வதேச அளவில் டெண்டர் கோரியுள்ளது.
இதுகுறித்த செய்தி ‘தி இந்து’ நாளிதழில் கடந்த 12-ம் தேதி வெளிவந்துள்ளது. கர்நாடக அரசின் இந்த முயற்சி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரானதாகும். இந்த நடவடிக்கை தமிழகத்துக்கு சேர வேண்டிய காவிரி நீரில் பாதிப்பை ஏற்படுத்தும். லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர். சுமார் 2,500 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
முதல்வர் கடிதம்
கர்நாடக அரசின் முயற்சியை தடுக்கக் கோரி, தமிழக முதல்வர் சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டு கர்நாடக அரசின் டெண்டரை வாபஸ் பெற உத்தரவிட வேண்டும். மேகேதாட்டு அணை திட்டம் உள்ளிட்ட எந்த திட்டத்தையும் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். காவிரி படுகையில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது./tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக