சனி, 29 நவம்பர், 2014

வருமானவரி துறை ஜெயலலிதா சசிகலாவோடு சமரசம்! எழும்பூர் நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வருகிறது!

சென்னை: ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் 1991-92, 1992-93ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யாதது தொடர்பாக, வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு, எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் கடந்த 7ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆஜராகி, வருமான வரி துறையிடம் கொடுத்த சமரச மனு மீது நடவடிக்கை எடுக்கும் கால அவகாசம் நவம்பர் 28ம் தேதி வரை உள்ளது. எனவே, இந்த விசாரணையை டிசம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி ஒரு மனு தாக்கல் செய்தார்.


சசிகலா சார்பில் வக்கீல் செந்தில் ஆஜராகி, விசாரணையை தள்ளிவைக்க கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை பரிசீலித்த நீதிபதி, விசாரணையை வரும் டிசம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார். ஜெயலலிதா மற்றும் சசிகலா சார்பில் வருமானவரி துறையிடம் கொடுத்த சமரச மனு வருமான வரித்துறை குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்த மனு மீதான ஆய்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு சாதகமாக வருமானவரித்துறையின் முடிவு இருக்கும் என்று சம்பந்தப்பட்ட துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஏற்கனவே, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு இந்த வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ஏற்கனவே, கடந்த 3 மாதங்களாக இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் வருமானவரித் துறையின் வக்கீல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க வேண்டும் என்று வாதிட்டார். இந்த எதிர்ப்பு வாதங்கள் வருமானவரித் துறையின் முடிவு ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு எதிராக வரும் என்றே காட்டியது. ஆனால், அதற்கு மாறாக தற்போது, ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு வருமானவரித் துறையின் முடிவு சாதகமாக உள்ளது என்று கூறப்படுவதால் அவர்கள் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக