செவ்வாய், 18 நவம்பர், 2014

கலைஞர் டிவி அமலாக்க பிரிவு வழக்கை விசாரிக்க தடை கோரிய மனு- உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி பணம் கைமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவின் வழக்கை விசாரிக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனம் இதற்கு ஆதாயமாக கலைஞர் டிவிக்கு ரூ214 கோடி கொடுத்தது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சிபிஐ வழக்குப் பதிவு செய்த உடனேயே இந்தப் பணத்தை கடனாக பெற்றதாக கூறி உடனே ஸ்வானுக்கு கலைஞர் டிவி திருப்பிக் கொடுத்ததாக கூறப்பட்டது. இந்தப் பணப் பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி மோசடி நிகழ்ந்திருப்பதாகக் கூறி அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உட்பட 10 பேர் மீதும் 9 நிறுவன நிர்வாகிகள் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கின் அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை நேற்று தொடங்கியது. இந்த நிலையில் அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்ததை எதிர்த்து ஷாகித் பால்வா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் 5 பேரை சாட்சிகளாக சேர்க்க அனுமதி கோரிய சிபிஐ மனு மீது நாளை தீர்ப்பளிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக