செவ்வாய், 18 நவம்பர், 2014

மோடி அலை என்ற வெங்காயம் !

மகாராஷ்டிராவில் கடந்த 15 ஆண்டுகளாக நீடித்தவந்த காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசு கூட்டணி ஆட்சியும், அரியானாவில் கடந்த பத்தாண்டுகளாக நீடித்துவந்த காங்கிரசு ஆட்சியும் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தப்பட்டுள்ளதைக் காட்டி மீண்டும் மோடி அலை சுழன்றடிப்பதாகப் பார்ப்பன ஊடகங்கள் குதூகலிக்கின்றன. அரியானாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள அதேசமயம், மகாராஷ்டிராவில் அதிக இடங்களைக் கைப்பற்றி தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஆட்சியை பா.ஜ.க. அமைத்துள்ளது. இதைக் காட்டி நாடாளுமன்றத் தேர்தலின் போது வீசிய மோடி அலையானது இப்போது சுனாமியாகச் சுழன்றடித்துள்ளது என்றும், அமித் ஷாவை பா.ஜ.க. தலைவராக்கியதன் மூலம் தான் நினைத்ததை மோடி சாதித்துவருகிறார் என்றும், அமித்ஷாவின் சாணக்கியத்தனத்தை இச்சட்டமன்றத் தேர்தல்கள் நிரூபித்துக் காட்டிவிட்டன என்றும் ஆளும் வர்க்க ஊடகங்கள் துதிபாடுகின்றன.

மனோகர்லால் கட்டார்
அரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார்
மகாராஷ்டிராவில் கடந்த 2009-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசுக் கட்சியும் கூட்டணி சேர்ந்து 37 சதவீத வாக்குகளைப் பெற்றன. இம்முறை இவ்விரு கட்சிகளும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிட்டதால் கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட இவ்விரு கட்சிகள் பெற்ற வாக்குகள் ஏறத்தாழ 3 சதவீதம் குறைந்துள்ளது. இந்த 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூடுதலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த 3 சதவீத வாக்கு வித்தியாசமும்கூட, அதிகாரத்திலிருந்த காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசின் கூட்டணி ஆட்சியில் நடந்த லவாசா மற்றும் ஆதர்ஷ் ஊழல் கொள்ளைகள் அம்பலப்பட்டு நாறியதாலும், தொடர்ந்து 15 ஆண்டுகளாக நீடித்த இக்கூட்டணி ஆட்சி மீதான மக்களின் அதிருப்தியாலும் பா.ஜ.க.வுக்கு எதிர்மறையில் கிடைத்த வாக்குகளேயன்றி, மோடி முன்வைக்கும் வளர்ச்சிப் பாதையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து அளித்த வாக்குகள் அல்ல. மோடி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் முதலான முக்கிய தலைவர்கள் மூன்று மாதங்களாக முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு பிரம்மாண்ட பேரணிகளை நடத்தியபோதிலும், வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தைத் தான் ஏற்படுத்த முடிந்துள்ளதேயன்றி, மற்றபடி மோடி அலையுமில்லை, சுனாமியுமில்லை.
அரியானாவின் 90 தொகுதிகளில், 47 எம்.எல்.ஏ.க்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் அம்மாநிலத்தில் முதன் முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும், அரியானாவில் கடந்த மே மாதத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 34.7 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த பா.ஜ.க, இப்போது அம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் 33.2 சதவீதம்தான் பெற்றுள்ளது. மோடியின் வளர்ச்சிப்பாதை என்று ஊதிப் பெருக்கப்பட்ட பலூன் காற்றுப் போன நிலையிலும் அரியானாவில் இந்த வெற்றியை பா.ஜ.க.வால் எப்படி சாதிக்க முடிந்தது?
விதர்பா விவசாயி தற்கொலை
மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தின் தீராத அவலம் : கடன் சுமை தாளாமல் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட விவசாயி (கோப்புப் படம்)
அரியானாவில் ஜாட் சாதியத் தலைவரும் லோக்தளக் கட்சியின் தலைவருமான சவுதாலா, ஆசிரியர் நியமன ஊழலில் சிக்கி அம்பலப்பட்டதாலும், காங்கிரசு தலைவியான சோனியாவின் மருமகன் ராபர்ட் வதோராவுக்கு ஆதரவாக டி.எல்.எஃப்.  என்ற கட்டுமான நிறுவனத்துக்கு நிலம் கையளித்ததில் நடந்த ஊழல் முறைகேடுகள் அம்பலப்பட்டுள்ளதாலும், இவ்விரு கட்சிகளுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை பா.ஜ.க. அறுவடை செய்து கொண்டது. மறுபுறம், ஏறத்தாழ 27 சதவீதமாக உள்ள ஜாட் சாதியினர் தொடர்ந்து அரியானா அரசியலில் செல்வாக்கு செலுத்தி வந்த நிலையில், பிராமணர்கள், குஜ்ஜார், காம்போஜ், சீக்கியர், ஜாட், பனியா, யாதவா, ராஜபுத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முதலான சாதிகளை ஈர்த்து, அந்தந்த வட்டாரத்துக்கேற்ப மெகா சாதிக் கூட்டணி கட்டிக்கொண்டு மேற்படி சாதிகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு விலைபேசியும் பதவி வாக்குறுதிகள் கொடுத்தும் ஓட்டுப் பொறுக்கியது.
காங்கிரசுக்கு ஆதரவாக இருந்துவந்த தாழ்த்தப்பட்ட வால்மீகி சாதியினரின் வாக்குகளை ஈர்க்க, டெல்லியில் வால்மீகி சாதியினர் நிறைந்துள்ள பகுதியில், கையில் துடப்பத்தை ஏந்தி தெருவைக் கூட்டுவதாக நிழற்படத்துக்குக் காட்சியளிக்கும் நாடகத்தை தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரால் மோடி நடத்தினார். குறிப்பாக கன்ஷிராமால் தொடங்கப்பட்ட பிற்பட்ட- சிறுபான்மையின அரசு ஊழியர் சங்கத்தை உடைத்து, அதன் முக்கிய தலைவர்களை பா.ஜ.க.வுக்கு இழுத்துக் கொண்டும், சீக்கியர்களில் ஒரு பிரிவினரைத் தன்பக்கம் வளைத்துப் போட்டுக் கொண்டும் தனக்குச் சாதகமான சாதிய முனைவாக்கத்தைக் கட்டிக் கொண்டு, மோடி-அமித் ஷா கும்பல் இந்த வெற்றியைச் சாதித்துள்ளது. படுகேவலமான இச்சாதிய முனைவாக்கத்தைத்தான் அமித் ஷாவின் சாணக்கியத்தனம் என்றும் மோடி அலை என்றும் பார்ப்பன ஊடகங்கள் ஊதிப் பெருக்குகின்றன.
அரியானாவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்ததும் மோடி, சுஷ்மா கோஷ்டிகளுக்கிடையே முதல்வர் பதவிக்கும் அமைச்சர்கள் பதவிக்குமான நாய்சண்டை முற்றி சந்தி சிரித்தது. பேரங்கள் – சமரசங்களுக்குப் பிறகு, “பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு பெண்கள்தான் காரணம், இந்தியாவின் பாரம்பரியமிக்க ‘காப்’ பஞ்சாயத்துகளின் தீர்ப்புகள் நியாயமானவை” என்றெல்லாம் பேசிவரும் அப்பட்டமான இந்துத்துவ வெறிபிடித்த பிற்போக்குத் தலைவரும் மோடியின் விசுவாசியுமான மனோகர்லால் கட்டார் இப்போது முதல்வராக்கப்பட்டுள்ளார்.
தேவேந்திர ஃபட்னாவிஸ்
மகாராஷ்டிராவின் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.க., தேர்தலுக்குப்பின் சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளது. பேரங்கள் படியாமல் முறுக்கிக் கொண்டிருந்த சிவசேனாவுக்கு அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அமைச்சர் பதவி வழங்கவும், துணை முதல்வர் பதவி வழங்கவும் பா.ஜ.க. ஒப்புக் கொண்டுள்ளதையடுத்து இக்கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளன. இங்கேயும் மோடி, நிதின் கட்காரி கோஷ்டிகளுக்கிடையே முதல்வர் பதவிக்கும் அமைச்சர்கள் பதவிக்குமான நாய்ச்சண்டை தொடர்ந்ததால், யார் முதல்வர் என்று தீர்மானிக்க முடியாமல் இழுபறி நீடித்து, தற்போது மோடியின் விசுவாசியும், ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரைச் சேர்ந்த சித்பவன பார்ப்பனருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக்கப்பட்டுள்ளார். மொத்தத்தில் இவ்விரு மாநிலங்களிலும் இதர கோஷ்டிகள் ஓரங்கட்டப்பட்டு, மோடி-அமித்ஷா கும்பலின் விசுவாசிகளே முதல்வர்களாகவும் முக்கிய அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மறுகாலனியாக்கத்தின் கீழ் விவசாயமும் விவசாயிகளும் நாசமாக்கப்பட்டுள்ளதற்கும், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்குமுறைகள் தொடர்வதற்குமான அடையாளக் குறியீடாக உள்ள மாநிலங்கள்தான் மகாராஷ்டிராவும், அரியானாவும். பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள மகாராஷ்டிராவின் தீராத அவலமாக விவசாயிகள் தற்கொலைச் சாவுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2001 முதல் இதுவரை 11,029 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த தீபாவளியன்று கடன் சுமை தாளாமல் 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளதையும் சேர்த்து நடப்பு 2014-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 906 பேர் மாண்டு போயுள்ளனர்.
பன்னாட்டு நிறுவனங்களின் மனங்கவர்ந்த மாநிலமான அரியானாவில் அமைந்துள்ள குர்கான் தொழிற்பேட்டையானது, முதலாளித்துவப் பயங்கரவாதத்தின் தலைமையகமாகத் திகழ்கிறது. மறுகாலனியாக்கத்தின் கீழ் தொழிலாளர்களின் உரிமை பறிப்பும், கொடூரமான சுரண்டலும் முதலாளித்துவ பயங்கரவாதமும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள முதன்மை மாநிலம்தான் அரியானா என்பதை மாருதி மற்றும் ஹோண்டா தொழிலாளர்களின் மீதான அடக்குமுறையும், அதற்கெதிரான தொழிலாளர்களின் போராட்டமும் நிரூபித்துக் காட்டியது. ஆனாலும் மறுகாலனியாக்கத்தின் குறியீடாக உள்ள இவ்விரு மாநிலங்களில் அவலத்திலும் அடக்குமுறையிலும் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த ஓட்டுக் கட்சியும் எந்தத் திட்டத்தையும் இத்தேர்தலில் முன்வைக்கவில்லை.
மாருதி தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
மாருதி நிறுவனத்தின் அடக்குமுறைக்கு எதிராகப் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இணைந்து குர்கானில் நடத்திய ஆர்ப்பாட்டம்.
இவ்விரு மாநிலங்களிலும் மறுகாலனியச் சூறையாடலையும் இந்துவெறி பாசிசத் தாக்குதலையும் மேலும் தீவிரப்படுத்தும் வகையில் இந்துவெறி பாசிச கும்பல் அதிகாரத்துக்கு வந்திருப்பதும், மோடியின் விசுவாச பார்ப்பன பாசிசத் தளபதிகளாக உள்ள கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகளே முதல்வராக்கப்பட்டிருப்பதும் பேரபாயமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஓட்டுக்கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரமும் அமைய வேண்டுமென்றும், இதற்கேற்ப தேர்தல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் சுடுகாட்டில் உட்கார்ந்து கொண்டு சாம்பிராணி புகையை எழுப்பிக் கொண்டிருக்கிறது, மார்க்சிஸ்ட் கட்சி.
- குமார் vinavu.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக