வியாழன், 13 நவம்பர், 2014

தமிழகமெங்கும் சகாயத்தின் அலை! கூட்டமாக திரளும் ஆதரவாளர்கள் ! Next CM ? why not?

சகாயத்துக்கு தமிழக அரசு தடைகள் போடப்போட அவருக்கான ஆதரவு மாநிலம் முழுவதும் பெருகிவருகிறது. தமிழகத்தின் கிரானைட், தாது மணல் கொள்ளைகளைப் பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டு இரண்டு மாதங்கள் நெருங்கிவிட்டன. தமிழக அரசு சகாயத்தை இன்னமும் வேலை செய்யவிடாமல் நீதிமன்ற மேல்முறையீடு, நியமனத்தில் தாமதம் என்று பல்வேறு வழிகளில் முட்டுக்கட்டை போட்டு வந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பைத் தாண்டி தண்டனைத் தொகையான 10 ஆயிரம் ரூபாயையும் கட்டி ஓ.பன்னீர்செல்வத்தின் அரசு சாதனை(?) புரிந்துள்ளது.
இந்த நிலையில் புதிதாக சர்ச்சை ஒன்று எழுந்து உள்ளது. ''சகாயம் தலைமையிலான குழு மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட், தாது மணல் கொள்ளைகளை மட்டும் விசாரித்தால்போதும். மற்ற மாவட்டங்களில் விசாரிக்கத் தேவை இல்லை'' என்ற சூழலை அரசு உண்டாக்கியது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள், விவசாய - தொழிலாளர் சங்கங்கள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து சகாயத்துக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ளனர். மதுரையில் திரும்பிய பக்கமெல்லாம் சகாயத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் பளிச்சிடுகின்றன.

சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் ஆதரவுக் கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், ''தமிழகத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர், வேலூர் என்று பல்வேறு பகுதிகளில் நாங்கள் ஆய்வுக்குச் சென்றபோது, மதுரையைவிட அதிகமாக பல இடங்களில் கனிமவள கொள்ளைகள் நடந்துள்ளதைக் கண்டுபிடித்தோம். ராதாபுரம் என்ற ஒரு பகுதியில் மட்டுமே 55 குவாரிகள் உள்ளன. இந்தக் கொள்ளைகள் எல்லாம் வெளியே தெரிந்துவிடும் என்பதால் சகாயத்தை மதுரையோடு நிறுத்த நினைக்கிறார்கள். இதை முறியடிப்பது நமது ஒற்றுமையில் இருக்கிறது'' என்று பேசினார்.
மதுரையைச் சேர்ந்த நீர்வள பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த சோமசுந்தரம், ''மதுரையில் பி.ஆர்.பி நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம் மிகவும் குறைவு. சகாயம், அன்சுரல் மிஸ்ரா ஆகியோர் மாவட்ட ஆட்சியர்களாக இருந்த காலத்தில் கனிமவளத் துறை, வருவாய் துறை, போலீஸ் அதிகாரிகள் என்று பி.ஆர்.பி தரப்புக்கு நெருக்கமான பலர் மாற்றப்பட்டனர். இன்று மறுபடியும் அவர்கள் எல்லாம் இங்கு வந்துவிட்டனர். சகாயம் குழுதான் இதற்கு முடிவுகட்ட வேண்டும். சத்தியத்தின் பிள்ளை சகாயம்... அதனால் நிச்சயம் இதற்கு அவர் முடிவுகட்டுவார்!'' என்றார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் முகிலன், ''இதுவரை நடந்த கனிமவள ஊழலில் சுமார் 30 லட்சம்  கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. இந்தத் தொகை நமது  நாட்டில் 67 ஆண்டுகளாக பட்ஜெட்டில் போட்ட பணத்தைவிட அதிகம். சகாயம் வந்தால் பல அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், வி.ஏ.ஓ-க்கள் சிக்குவார்கள். அவர்கள் மறைமுகக் கூட்டணி அமைத்து சகாயத்தை முடக்கப் பார்க்கிறார்கள்'' என்று கொந்தளித்தார்.
தமிழகம் முழுவதும் சகாயம் அலை அடிக்க ஆரம்பித்துள்ளதன் அடையாளம் இது!
- சண்.சரவணக்குமார், சி.ஆனந்தகுமார்
படங்கள்: பா.காளிமுத்து, ப.சரவணக்குமார் விகடன்,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக