வியாழன், 27 நவம்பர், 2014

குண்டர் சட்டத்திருத்தத்தை ரத்து செய்! – பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்

மக்கள் சொத்தை கொள்ளையடித்த ஜெயா, சசி கும்பல் மீது இயற்கை வளத்தை சூறையாடிய வைகுண்டராஜன், பி.ஆர்.பி மீதும் குண்டர் சட்டம் பாயவில்லை.
சுதந்திர போராட்ட காலத்தில் காலனிய ஆதிக்க பிரித்தானிய அரசு தனது மூலதனத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் பாதுகாக்கும் விதத்தில் தடுப்பு காவல் சட்டங்களை இயற்றி, போராட்டக்காரர்களை கடுமையாக ஒடுக்கியது. 1947-க்கு பின்பும், ‘சுதந்திர’ இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள் பாகிஸ்தான் பிரிவினையின் சூழலைக் காரணம் காட்டி, அதே ஒடுக்குமுறை ஆயுதத்தை தன் உறைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டார்கள். இந்திராகாந்தி எதிர்க்கட்சிகளையும், ஜனநாயக, புரட்சிகர சக்திகளையும் கடுமையாக ஒடுக்க ‘மிசா’ என்னும் த.கா.சட்டத்தினைத் தான் பயன்படுத்தினார். அதற்கு பிறகு, தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் என தடுப்பு காவல் சட்டங்களை அடுத்தடுத்து கொண்டுவந்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும், எதிர்கட்சிகளையும் எப்படி ஒடுக்கினார்கள் என்பது கடந்த கால வரலாறு!

இப்பொழுது நடைமுறையில் இருக்கும் குண்டர் தடுப்பு சட்டம் 1982-ல் அரசு கொண்டு வந்தது. தொழில்முறை திருடர்கள், ரவுடிகள், போதைப்பொருள் கடத்துபவர்கள் என சில பிரிவுகளில் துவங்கி, கடந்த 32 ஆண்டுகளில் நில அபகரிப்பு, மணல் கொள்ளை, திருட்டி விசிடி தயாரிப்பவர்கள் என பல பிரிவுகளையும் சேர்த்து பெரியதாய் ஊதிப்பெருக்கியுள்ளனர். வெளியில் இருந்தால், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள், அதனால் குற்றமிழைப்பதிலிருந்து தடுத்து வைப்பது என கூறிக்கொண்டு தான் பிணை ஏதுமின்றி ஓராண்டு தடுப்பு காவலில் வைப்பது என்பதை கொண்டுவந்தார்கள்.
சமீபத்தில் தமிழக அரசு குண்டர் சட்டத்தில் முதல்முறை குற்றம் செய்தவர்கள் மீதும் பயன்படுத்தலாம், இணையம் மற்றும் பாலியல் குற்றங்கள் செய்பவர்களும் கைது செய்யப்படலாம் என திருத்தியிருக்கிறது. இந்த சட்டத்தில் இதுவரை கைது செய்திருப்பது தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனையோ, கிரானைட் திருடன் பி.ஆர்.பியையோ கிடையாது. எதிர்கட்சிகாரர்களையும், புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் மீது தான் பொய்வழக்குகள் போட்டு கு.சட்டத்தில் அடைத்திருக்கிறார்கள்.
உதாரணமாய், சென்னை மதுரவாயலில் காவல்துறையின் அராஜகங்களை தொடர்ச்சியாய் அம்பலப்படுத்தி, உழைக்கும் மக்களை திரட்டி போராடியதால் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் இரண்டு முன்னணி தோழர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தார்கள்.
சென்னை சந்தோஷ் நகர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த அசோக் என்பவரை குண்டர் சட்டத்தில் அடைக்க முயன்றார்கள். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நீதிமன்றங்களில் போராடி காவல்துறையின் முயற்சியை முறியடித்தது. மக்களுக்காக போராடும் புரட்சிகர அமைப்பில் செயல்படும் தோழர்களை இழிவுப்படுத்தும்விதமாக கத்தியைக் காட்டி வழிப்பறித்தார்கள், பொதுமக்களை மிரட்டினார்கள் என பொய் வழக்கு போடுகிறார்கள்.
சமீபத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தொழிற்சங்க நிர்வாகியான தோழர் சிவாவை தொழிலாளர் நலத்துறை ஆணைய அதிகாரியை மிரட்டியதாய் பொய் வழக்கு ஒன்றை தொடுத்தார்கள். குண்டர் சட்டத்தில் போடக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கியதை கூட மதிக்காமல், கு.சட்டத்தில் அடைத்தார்கள். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் போராடி, இப்பொழுது தமிழக அரசின் உள்துறை செயலாளர் தோழர் சிவாவின் மீதான குண்டர் சட்டத்தை திரும்ப பெற்றிருக்கிறார். இது தமிழக குண்டர் சட்ட வரலாற்றில் முதன்முறையாக இப்படி நிறைவேற்றியிருக்கிறோம். 58 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு, தோழர் சிவா இப்பொழுது வெளியே வந்திருக்கிறார்.
இப்படி, காவல்துறை நினைத்தால் இனி யார் மீது வேண்டுமென்றாலும், பொய்வழக்கு ஒன்றைப் போட்டு, குண்டர் சட்டத்தில் தடுப்பு காவலில் அடைக்கலாம் என்ற பாசிச நிலை தான் நிலவுகிறது. இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 95%த்தினர் நீதிமன்றத்தினால் பொருத்தமில்லாத வழக்கு என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒருவருடத்திற்கு மேலாகவும் சிறையில் அவதிப்பட்டிருக்கிறார்கள். அதற்காக இதுவரை எந்த ஒரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.
மனித உரிமைப் பாதுகாப்புமையம் குண்டர் சட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தத்தை ரத்து செய்ய பொதுநலவழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் மாதம் தாக்கல் செய்திருக்கிறது. அரசு பதிலளிக்க நான்கு வார அவகாசம் கேட்டது. 24/11/2014 அன்று வழக்கு விசாரணை வந்த பொழுது, அரசு மீண்டும் இரண்டு வார கால அவகாசம் கேட்டுள்ளது!
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அடக்குமுறை சட்டங்களை எதிர்க்காவிட்டால், தனியார்மய, தாராளமய, உலகமய -மறுகாலனியாதிக்க கொள்கைகளின் விளைவாக பாதிப்பினால், போராடும் உழைக்கும் ஏழை மக்களும், மக்களின் உரிமைகளுக்காக போராடக்கூடிய புரட்சிகர, ஜனநாயக சக்திகள் தான் என்பதை புரிந்துகொண்டு, இந்த சட்டத்தை முறியடிக்க நாம் போராடவேண்டும் என்றும், குண்டர் சட்டத்தில் முதலில் அடைக்கப்பட வேண்டியவர் பொதுச்சொத்துக்களை திருடிய ஜெயலலிதாதான் என மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது. கடந்த வாரத்தில் குண்ட சட்டத்திருத்தத்தின் அபாயத்தை விளக்கி, பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியது
hrpc-gundas-demo-photoவழக்குரைஞர்கள் மத்தியில் தொடர்ந்து கையெழுத்து இயக்கமும் நடத்தி வருகிறது. நேற்று 25/11/2014 அன்று “குண்டர் சட்ட திருத்தத்தை திரும்ப பெறவேண்டும்” என தமிழக அரசை வலியுறுத்தி 25/11/2014 அன்று பகல் 1.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாக ஆவின் கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது!

சென்னை கிளை செயலர் வழக்குரைஞர் மில்ட்டன் தலைமை தாங்கினார். வழக்குரைஞர் பொற்கொடி சிறப்புரை ஆற்றினார். நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் நின்று உரையையும், முழக்கங்களையும் கவனித்தனர். விளக்க பிரசுரங்கங்களை கேட்டு வாங்கிப் படித்தனர். வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக