புதன், 26 நவம்பர், 2014

Admk யின் 37+11 எம்பிக்களும் நிருபர்களோடு அன்னம் தண்ணி கூடாது! ம.மு.ஜெயலலிதா கட்டளை

Poompattinaththaan - KaveriPoompattinam,
இந்த 37+11 மங்குனிகளும் தமிழ்நாட்டுக்கு ஒரு கிழியும் கிழிக்கப்போவதில்லை. அதுவும் டில்லி குளிரில் தினமும் பாராளுமன்ற செயல்பாடுகளை வேடிக்கை பார்த்துவிட்டு, தமிழ்நாடு இல்ல அறையில் தங்கி குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு, ஒரு மாத காலத்தையும் வீணடித்துவிட்டு ஹாயாக விமானத்தில் தமிழ்நாடு வந்து போயஸ் தோட்டத்தில் அங்கப்பிரதட்சணம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி விடுவர். இதைத் தவிர இந்த மங்குனி எம்பிக்களுக்கு என்ன தெரியும்? இவர்களைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மாக்களை(?) என்னவென்று சொல்வது? இந்த லட்சணத்தில் தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வந்தால் இவர்களது கட்சியான அதிமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று தற்போதைய கருத்துக்கணிப்பு ஒன்று பிரகடனம் செய்கிறது. தமிழன் மாயையில் மாண்டாலும் மாண்டுபோவானேதவிர மீண்டுவர ஒருபோதும் முயலமாட்டான். இதுகாறும் தெரிவிப்பது என்னவென்றால், 64 கோடி(இப்போது 3000 கோடி மதிப்பு) ஊழல் செய்வதெல்லாம் ஒரு பொருட்டல்ல... என்று தமக்குத்தாமே கருதிக்கொண்டு, தன் தலையில் தானே மண்ணை (அதுவும் கொள்ளைபோகும் ஆற்றுப்படுகை மண்) வாரித் தூற்றிக்கொண்டு இந்த செயலற்ற அதிமுக அரசாங்கத்தினால் மாண்டு வருகிறான். அரசாங்கமோ பால் விலை, இல்லாத மின்சாரத்திற்கு அதிகக் கட்டணம், மீனவர் பிரச்சினை, நீதிமன்றக் கண்டனங்கள் என எதைப்பற்றியும் சிந்திக்காமல், டாஸ்மாக்கே கருவூலம், போயஸ் கார்டனே புத்தபூமி என மூழ்கிக்கிடக்கிறது. ம்ம்ஹூம் இன்னும் 10 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு திருந்தாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீவிரமடைந்து உச்சத்துக்கு வரும் சமயம் தமிழ்நாடு தலைகீழ் மாநிலமாகத் தொங்கும் என்பதும் புலப்படுகிறது. அதிமுகவுக்கு சொம்படிக்கும் புண்ணியவான்களுக்கும், அந்தக்கட்சிக்கு வாக்களிக்கும் மாக்களுக்கும் இது ஒரு நாளும் விளங்காது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வரும்போதுதான் விளங்கும். அப்போது வலி முத்திப்போயிருக்கும் என்பதே நிதர்சனம். 


பார்லிமென்டில், அ.தி.மு.க.,வுக்கு, லோக்சபாவில், 37, ராஜ்யசபாவில், 11 பேர் என, மொத்தம், 48 எம்.பி.,க்கள் உள்ளனர். லோக்சபா எம்.பி.,க்களில், மூன்று பேரை தவிர, மற்றவர்கள் எல்லாம் புதியவர்கள். பார்லிமென்ட் நடைமுறைகளை நன்கு அறியாதவர்கள்.இந்நிலையில், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியதை அடுத்து, நேற்று மதியம், 1:30 மணிக்கு, அ.தி.மு.க., பார்லிமென்ட் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் பங்கேற்றனர்.அப்போது, அ.தி.மு.க.,வின் லோக்சபா தலைவர் வேணுகோபால், ராஜ்யசபா தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அமைதியாக அமர்ந்திருக்க, துணை சபாநாயகர் பதவி வகிக்கும் தம்பித்துரை பேசியுள்ளார்.

இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:பார்லிமென்டின் ஒவ்வொரு கூட்டத் தொடரின் போதும், அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படியே, நேற்றைய கூட்டமும் நடைபெற்றது. பொதுவாக, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியில் இருப்பவர்கள், கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாக, கருதப்படுவர்.கட்சி எம்.பி.,யாக இருந்தாலும், பார்லிமென்டை பொறுத்தவரையில், துணை சபாநாயகர் பதவியில் இருப்பவர், பொதுவானவர் என்பதால், கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பதே வழக்கம். ஆனாலும், நேற்றைய கூட்டத்தில், துணை சபாநாயகர் தம்பித்துரை பேசினார்.அதுவும், அவர் மட்டுமே பேசினார்.

அப்போது, கூறியதாவது:
அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பலரும், பத்திரிகைகளுக்கு செய்தி தந்து கொண்டிருப்பதாக கட்சி மேலிடத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கேற்ற வகையில், எம்.பி.,க்களின் செயல்பாடுகள் குறித்தும், கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும், டில்லியிலிருந்து நிறைய செய்திகள் வெளியாகின்றன. இது, தடுக்கப்பட வேண்டும்.அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் யாரும், பத்திரிகையாளர்களுடன் பேசக்கூடாது. அவர்களுடன், நேரடியாகவோ, மறைமுகமாவோ, எந்த விதத்திலும் தொடர்பில் இருக்கக் கூடாது. கட்சி மேலிடத்தின் இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை பாயும்.நாம், மத்திய அரசுக்கு எதிராகவும் இல்லை; அதே நேரத்தில் ஆதரவாகவும் இல்லை. நடுநிலைமையாக இருக்க வேண்டும். அதுவே, கட்சி மேலிடத்தின் நிலைப்பாடு.இவ்வாறு, தம்பித்துரை பேசினார். இதன்பின், எழுந்த நவநீதகிருஷ்ணன், அனைவருக்கும் நன்றி தெரிவிக்க, கூட்டம் முடிவுக்கு வந்தது.

தமிழ்நாடு இல்லத்திலேயே எம்.பி.,க்கள் வாசம்:

அ.தி.மு.க., - எம்.பி.,க்களில் பெரும்பாலானவர்களுக்கு, டில்லியில், அதிகாரபூர்வமாக அரசு வீடுகள் ஒதுக்கப்பட்டு விட்டாலும், முறையான அழுத்தம் கொடுத்து, அதை விரைவில் பெற முடியாமல் தவிக்கின்றனர். இதனால், பல எம்.பி.,க்கள், தமிழ்நாடு இல்லத்திலேயே தங்கி வருகின்றனர்.

- நமது டில்லி நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக