ஞாயிறு, 23 நவம்பர், 2014

வேப்பேரி:பெண்கொலை கணவரே கொலையாளி ! ஹேமந்த் ராஜ் ஜெயின் (50) மனைவி மஞ்சு

சென்னை வேப்பேரி காளத்தியப்பன் தெருவில் 3 மாடி வீட்டில் வசிப்பவர் ஹேமந்த் ராஜ் ஜெயின் (50). இவரது மனைவி மஞ்சு (48). இவர்களுக்கு ஆசிஷ்குஞ்ச் (23) என்ற மகனும், பூஜா (21) என்ற மகளும் உள்ளனர்.
ஹேமந்த்ராஜ் சவுகார் பேட்டையில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஹேமந்த்ராஜ் கடைக்கு சென்று விட்டார். மகன் ஆசிஷ், மகள் பூஜா இருவரும் வெளியே சென்று விட்டனர். வீட்டில் மஞ்சு மட்டும் தனியாக இருந்தார். மாலை 5.30 மணியளவில் பூஜா வீட்டுக்கு வந்தார். அப்போது மஞ்சு கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்த தகவல் அறிந்ததும் கணவர் ஹேமந்த்ராஜ் கடையில் இருந்து வீட்டுக்கு வந்தார். இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராமகிருஷ்ணன், வேப்பேரி உதவி கமிஷனர் ரவிசங்கர், இன்ஸ்பெக்டர்கள் பிரபு, ரங்கசாமி ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து மஞ்சுவை கொலை செய்து விட்டு 1 கிலோ நகைகளுடன் தப்பி ஓடி விட்டதாக போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வீட்டுக்கு பூச்சி மருந்து அடிக்க 2 பேர் வந்ததாகவும் அவர்கள் மஞ்சுவை கொலை செய்து விட்டு நகைகளுடன் தப்பி சென்றிருக்கலாம் என்றும் கணவர் ஹேமந்த்ராஜ் போலீசாரிடம் தெரிவித்தார்.
விசாரணையின் போது எதிரே உள்ள பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதில் கொலையாளியின் உருவம் பதிந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.
கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது மாலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் ஒருவர் மஞ்சு வீட்டுக்கு வந்தது தெரிய வந்தது. அவர் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஆள் போல காணப்பட்டார். இதையடுத்து உறவினர்களை அழைத்து அந்த காட்சிகளை போலீசார் காட்டினார்கள். அப்போது வீடியோவில் பதிவாகி இருந்தது மஞ்சுவின் கணவர் ஹேமந்த்ராஜ் என்று தெரிய வந்தது. அதே நேரத்தில் ஹேமந்த் ராஜ் கடையில் இல்லை என்பதும் உறுதியானது.
இதையடுத்து ஹேமந்த்ராஜை பிடித்து போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினார்கள். இதில் மனைவியை அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
அவரே மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது. கொள்ளையர்கள் 1 கிலோ நகையுடன் தப்பி சென்றதாக ஹேமந்த்ராஜ் கூறி இருந்தார். ஆனால் 1 கிலோ நகை அங்கு இல்லை. 15 பவுன் நகையை ஹேமந்த் ராஜே எடுத்து படுக்கை அறையில் மனைவியின் புடவைக்குள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஹேமந்த் ராஜை போலீசார் கைது செய்தனர். நகையையும் பறிமுதல் செய்தனர்.
மனைவியை கொன்றது ஏன் என்பது குறித்து ஹேமந்த் ராஜ் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:–
எனது மனைவி மஞ்சுவுக்கும் எனக்கும் திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் பல நேரங்களில் எனது பேச்சை அவர் கேட்பதில்லை. அனைத்து விஷயங்களிலுமே எனது எண்ணங்களுக்கு எதிர்மாறாகவே செயல்பட்டு வந்தார்.
இதனால் எனது மகன் ஆஷிஷ்குஞ்ச் திருமணமும் தள்ளிக் கொண்டே சென்றது. பல இடங்களில் பெண் பார்த்தும் எனக்கு பிடித்திருந்தும் என் மனைவிக்கு பிடிக்க வில்லை.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் எனது மகனுக்கு ஒரு இடத்தில் பெண் பார்த்து திருமணமும் நிச்சயிக்கப்பட்டு விட்டது. பெண் வீட்டாருடன் சேர்ந்து கொல்கத்தாவுக்கு சென்று திருமணத்துக்கு தேவையான ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்க முடிவு செய்திருந்தேன். இதற்காக பெண் வீட்டாரும் நானும் செல்வதற்கு ரெயிலில் டிக்கெட் கூட எடுத்து விட்டோம். ஆனால் எனது மனைவி கொல்கத்தாவுக்கு செல்லக் கூடாது என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். இது தொடர்பாக கடந்த சில நாட்களாகவே எங்களுக்குள் வாக்கு வாதமும் ஏற்பட்டு வந்தது.
நேற்று காலையிலும் கொல்கத்தாவுக்கு போகக் கூடாது என்று என்னிடம் தகராறு செய்தார். நான் எதைச் செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த எனது மனைவி மஞ்சு திருமண விஷயத்திலும் இப்படி நடந்து கொள்கிறாரே என்று எனக்கு மிகவும் கோபமாக இருந்தது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுடனேயே நான் காலையில் கடைக்கு சென்றேன்.
பின்னர் மாலையில் கொல்கத்தா செல்வது சம்பந்தமாக அவரிடம் பேசுவதற்காக கடையில் இருந்து வீட்டுக்கு சென்றேன். அப்போது எனக்கும் மனைவிக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. கொல்கத்தாவுக்கு யாரும் செல்லக் கூடாது என்று கூறி என்னிடம் சண்டை போட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மஞ்சுவின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். பின்னர் எதுவும் தெரியாதது போல கதவை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டேன். சிறிது நேரத்தில் எனது மகன் ஆசிஷ் என்னிடம் வீட்டில் அம்மா இல்லையாம். கதவு பூட்டப்பட்டுள்ளதாக தங்கை பூஜா கூறுகிறாள். நீங்கள் வீட்டிற்கு சென்றீர்களா என்று கூறி சாவியை கேட்டான்.
அப்போதும் நான் எதுவும் தெரியாதது போலவே இருந்து விட்டேன். பின்னர் ஆசிஷ் கடையில் இருந்த வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான். அங்கிருந்து எனக்கு போன் செய்து தாய் மஞ்சுவை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று கூறினான்.
இதையடுத்து நான் எதுவும் தெரியாதது போல அலறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடினேன். அங்கு மஞ்சுவின் உடலை பார்த்து கதறி அழுதேன். போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக காலையில் பூச்சி மருந்து அடிப்பதற்கு 2 பேர் வந்ததாகவும் அவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்றும் கூறினேன். இதனை எல்லோருமே நம்பி விட்டனர்.
ஆனால் வீட்டுலேயே நான் பதித்து வைத்திருந்த நகையும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் தான் நான் கொலையாளி என்பதை காட்டிக் கொடுத்து விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக