வெள்ளி, 21 நவம்பர், 2014

சென்னை:.3,627 கோடியில் மோனோ ரயில்! மத்திய அரசு ஒப்புதல்

சென்னை மோனோ ரயில் திட்டத்தின் முதல்கட்ட பணிகளை மேற்கொள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ரூ.3,627 கோடியில் பூந்தமல்லி கத்திபாரா இடையே, போரூரில் இருந்து வடபழனி வரையிலான இணைப்புடன் மொத்தம் 20.68 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் சேவை செயல்படுத்தப்படவுள்ளது.
சென்னையில் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப வாகனங்கள் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து வருகிறது. சென்னை மாநகரின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களின் போக்குவரத்து தேவை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.
வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல், கிண்டி வழியாக விமான நிலையம் வரை ஒரு தடத்திலும், சென்ட்ரலில் இருந்து எழும்பூர், கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை ஒரு தடத்திலும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்துவருகின்றன.
இதேபோல, சென்னையில் ஒருங்கிணைந்த பன்முறை நகர்ப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் ரூ.16,650 கோடியில் மோனோ ரயில் திட்டத்தை தமிழக அரசு 2011-ம் ஆண்டு அறிவித்தது. இத்திட்டத்தை மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டு சுமார் 3 ஆண்டுகள் ஆகியும் மோனோ ரயில் திட்டம் தொடங்கப்படவில்லை. டெண்டர் விடப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணிகள் முன்னேற்றமின்றி இருந்தது மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை மோனோ ரயில் திட்டத்தின் முதல்கட்ட பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக பத்திரிகைத் தகவல் அலுவலகம் நேற்று வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
20.68 கி.மீ. தூரத்துக்கு..
சென்னை மோனோ ரயில் திட்டத்தின் முதல்கட்ட பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பூந்தமல்லி கத்திபாரா இடையே, போரூரில் இருந்து வடபழனி வரையிலான இணைப்புடன் மொத்தம் 20.68 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் சேவை செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.3,627 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்துள்ள ஒப்புதலின்படி, ‘வடிவமைப்பு கட்டுமானம் செய்தல் ஒப்படைப்பு’ முறையில் இத்திட்டம் தமிழக அரசு மற்றும் மாநில அரசு முகமைகளின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளது.
மோனோ ரயில்களில் கட்டணத்துக்கு ஏற்ப பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டண முறையை அவ்வப்போது மாற்றி அமைப்பதற்கான சிறப்பு அமைப்பு, ஒருங்கிணைந்த பெரு நகர போக்குவரத்து ஆணையம் அமைப் பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனை களுடன் மத்திய அரசு இத்திட்டத் துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக