சனி, 22 நவம்பர், 2014

2ஜி: தலைமை விசாரணை அதிகாரியாக ஆர்.கே. தத்தா நியமனம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கின் தலைமை விசாரணை அதிகாரி பொறுப்பு சிபிஐ கூடுதல் இயக்குநர் ஆர்.கே. தத்தாவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் தத்தாவிடம் மட்டுமே இனி தங்கள் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் அளிப்பர். 2ஜி அலைக்கற்றை தொடர்புடைய வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் தலையிடாமல் இருக்க சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதன்படி, அந்தப் பொறுப்பில் இருந்து ரஞ்சித் சின்ஹா விலகினார். இதையடுத்து, 2ஜி அலைக்கற்றை விசாரணை நடவடிக்கைகளை அவருக்கு அடுத்த நிலையில் மேற்பார்வையிட்டு வந்த ஆர்.கே. தத்தா, இனி இந்த வழக்கை மேற்பார்வையிடும் தலைமை அதிகாரியாக செயல்படுவார் என்று சிபிஐ கூறியுள்ளது.

1981-ஆம் ஆண்டின் கர்நாடக மாநில பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.கே.தத்தா. சிபிஐயின் முக்கியமான பிரிவாக
கருதப்படும் லஞ்ச ஒழிப்பு, இவரது கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை இவர் நேரடியாகக் கவனித்து வந்தார். சிபிஐ அமைப்பில் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு அடுத்த நிலையில், சிறப்பு இயக்குநர் அனில் சின்ஹா உள்ளார். அவருக்கு அடுத்த நிலையில்தான் கூடுதல் இயக்குநராக
ஆர்.கே. தத்தா இருக்கிறார். இந்த நிலையில், 2ஜி வழக்கை மேற்பார்வையிட்ட மூத்த அதிகாரி என்ற வகையில், ஆர்.கே. தத்தாவிடம் அந்த வழக்கின் விசாரணையை மேற்பார்வையிடும் தலைமைப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமலாக்கத் துறை வழக்கில் சாட்சியம் பதிவு: இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக அந்தத் துறையின் இணை இயக்குநர் ஹிமான்ஷு குமார் லால் நான்காவது நாளாக தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, ஹிமான்ஷு குமார் லாலிடம், மத்திய அமலாக்கத் துறையின் வழக்குரைஞர்
என்.கே.மட்டா, "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், சில தனியார் நிறுவனங்கள் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி பணப் பரிவர்த்தனை செய்ததை எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்? இந்த வழக்கில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் கலைஞர் டிவிக்கும் உள்ள தொடர்புகள் என்ன?' என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு ஹிமான்ஷு குமார் லால், "குசேகான் ஃப்ரூட்ஸ் அன்ட் வெஜிடேபிள்ஸ், சினியூக் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி அளவுக்கு நிதி அளிக்கப்பட்டது. வங்கிப் பணப் பரிவர்த்தனை மூலம் இந்த நிதி வழங்கப்பட்டது. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடங்கிய சில மாதங்களில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய தொகையை மீண்டும் அதே நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் கலைஞர் டிவி செலுத்தியது. அப்போது, வாங்கிய தொகையை கடன் போல கணக்குக் காட்டி, வட்டியும் சேர்த்து மொத்தம் ரூ.214.86 கோடி செலுத்தப்பட்டது. இதன் மூலம் லஞ்சமாக வாங்கிய பணத்தை சட்டப்படி பெற்றது போல கலைஞர் டிவி கணக்குக் காட்டியுள்ளது. இது சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை சட்டப்படி தவறாகும்' என்றார்.
அவரது விளக்கத்தைப் பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி சைனி, மத்திய அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் டாக்டர் பிரபா காந்திடம் சாட்சியம் பதிவு செய்ய அனுமதி அளித்தார். அவரது சாட்சியம் மொத்தம் 45 நிமிடங்கள் வரை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு சிறப்பு நீதிபதி சைனி ஒத்திவைத்தார். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக