வெள்ளி, 14 நவம்பர், 2014

சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐ முடிவு! 2ஜி: ஸ்வான் டெலிகாம்- எடிசலாட் விவகாரம்?

டெல்லி: ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனம் அபுதாபியின் எடிசலாட் நிறுவனத்துக்கு தனது நிறுவன பங்குகளை விற்பனை செய்ததற்கு அனுமதி அளித்தது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது
ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஏற்கெனவே ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த இருப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. அதாவது தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அவர் கொடுத்த நெருக்கடியால் ஏர்செல் நிறுவனம் தனது பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றது
சன் டைரக்ட்.. இதனைத் தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்தகிருஷ்ணன், சில துணை நிறுவனங்கள் மூலம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தார்.
ரூ. 600 கோடிக்கு மேல்... இந்தியாவில் தொலைத் தொடர்புத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் செய்யும் ரூ.600 கோடி அளவிலான முதலீடுகளுக்கு மட்டுமே அன்னிய நேரடி முதலீட்டு வாரியம் எனப்படும் எஃப்ஐபிபி அனுமதி அளிக்க முடியும். அதற்கு மேற்பட்ட முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைதான் அனுமதி வழங்க முடியும். ஆனால் சன் டைரக்ட் நிறுவனத்தில் சுமார் ரூ. 3,500 கோடி அளவுக்கு மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய அன்னிய நேரடி முதலீட்டு வாரியமே அனுமதி அளித்தது. இந்த அன்னிய நேரடி முதலீட்டு வாரியத்துக்கு நிதி அமைச்சர் என்கிற வகையில் ப. சிதம்பரம்தான் தலைவர்.
இதனால் 2006ம் ஆண்டு ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகையில் சிதம்பரத்தின் பெயரையும் சேர்த்தது சிபிஐ. மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய சிபிஐ வழக்கறிஞர் கோயல், மேக்சிஸ் தொடர்பான கோப்பு அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்ட போது, "அமைச்சர்' என்ற முறையில் அதில் இடம் பெற்றுள்ள விவரங்களை சரிபார்த்த பிறகே அவர் அனுமதி அளித்திருக்க வேண்டும். "அமைச்சருக்கான அதிகாரம்' இதைத்தான் தெளிவுபடுத்துகிறது. ஆனால், தனது பணியை சரிவர மேற்கொள்ளாமல் சிதம்பரம் தவறினாரா என்பது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. எனவே, ஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் விற்பனை விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், சிபிஐ விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இதேபோல் மற்றொரு வழக்கிலும் சிதம்பரம் சிக்கியுள்ளார். 2008ம் ஆண்டு ஷாகித் பால்வாவுக்கு சொந்தமான ஸ்வான் டெலிகாம் ரூ.1,650 கோடிக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்றது. பின்னர் தனது நிறுவனத்தின் பங்குகளில் மூன்றில் 2 பங்கை ரூ.3,500 கோடிக்கு அபுதாபியைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது ஸ்வான் நிறுவனம். எடிசலாட் நிறுவனத்தில் பாகிஸ்தான் அரசு பிரதிநிதிகளும் இயக்குநர்களாகக் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு ஸ்வான் நிறுவனம் பங்குகளை விற்க எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் அனுப்பியிருந்தார்.
தாவூத் இப்ராகிம்... சுவாமியின் கடிதத்தில், ஸ்வான்- எடிசலாட் ஒப்பந்தத்தில் சட்ட மீறல்கள் இருப்பதாகக் கூறி அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஸ்வான் நிறுவனத்துக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு இருக்கிறது. எடிசலாட்டுக்கு பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கிறது என்று உளவுத்துறை தானாகவே நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்துக்கு கடிதமும் அனுப்பி வைத்தது. ஆனால் பாதுகாப்புத் துறையின் எச்சரிக்கையையும் மீறி ப. சிதம்பரம் ஸ்வான் - எடிசலாட் ஒப்பந்தத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை ஒப்புதல் அவசியம் என்ற நிலையிலும் கூட ப. சிதம்பரம் அனுமதி வழங்கியிருக்கிறார்
எடிசலாட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை பாகிஸ்தான் தொலைத் தொடர்பு நிறுவனம் மற்றும் துரய சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் வைத்திருக்கிறது. இதனால் ஸ்வான்- எடிசலாட் ஒப்பந்தத்துக்கு உளவுத்துறை, 'ரா' அமைப்பு ஆகியவை ஆட்சேபனையும் தெரிவித்திருந்தன. இவை அனைத்தையும் அறிந்திருந்த போதும் ப.சிதம்பரமும் ஆ. ராசாவும் எடிசலாட், இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி அளித்திருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக