ஞாயிறு, 30 நவம்பர், 2014

அரசின் அநியாயம்! முதியோர் உதவி தொகை ரத்து! கொடுப்பதே 1,000 ரூபாய்தான் அதற்கும் அதிமுக கடிதம் தேவை.இப்போ அதுவும் கோவிந்தா!

 முதியோர் உதவித்தொகை பெற்ற பயனாளிகளின் உத்தரவு ரத்து செய்யப்பட்டதால், லட்சக்கணக்கானோர் அலைக்கழிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு விஷயத்தில், ஆளுங்கட்சியினரின் பரிந்துரையை ஏற்றதால், அதிகாரிகள், இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வறுமைக்கோட்டில் வசிக்கும் நலிந்த, ஏழை, எளிய மக்களுக்காக, இந்திராகாந்தி தேசிய முதியோர், மாற்றுத்திறனுடையோர், விதவைகள், ஆதரவற்ற மாற்றுத்திறனுடையோர், ஆதரவற்ற விதவைகள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு, கணவரால் கைவிடப்பட்ட பெண், உழைக்கும் திறனற்ற ஏழைப் பெண் ஆகியோருக்கு, ஓய்வூதியத் திட்டத்தில், மாதம் தோறும் தலா, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதில், அதிகளவில் முறைகேடு நடப்பதால், தகுதியான பயனாளிக்கு உரிய பயன் கிடைக்காமல் போகிறது.
தகுதியில்லாத மற்றும் வசதியுள்ள நபர்கள், ஓய்வூதியத் திட்டங்களை அனுபவித்து வருவதாக, பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதையடுத்து, மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பயனாளிகள் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். இதையடுத்து, கடந்த, ஆகஸ்ட், 15ம் தேதி நடந்த கிராம சபா கூட்டத்தில், தகுதியில்லா பயனாளிகள் பெயர்கள் தவிர, தகுதியான பயனாளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும், 15 முதல், 40 ஆயிரம் பேர் வரை, முதியோர் ஓய்வூதிய உத்தரவு பெற்றவரின், உத்தரவை சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் ரத்து செய்தனர்.

குறைதீர் கூட்டம்:

இதற்கு முக்கிய காரணமாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி., அமைச்சர், எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து, பரிந்துரை கடிதம் பெற்ற விண்ணப்பத்திற்கே, ஓய்வூதிய உத்தரவு வழங்கப்பட்டது. இதற்காக, உள்ளூர் ஆளுங்கட்சியினர் சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம், பணம் வசூல் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், முழுமையாக தணிக்கை செய்யாமல், அவசரகதியில் தகுதியில்லாத பயனாளிகள் என, அடையாளம் காணப்பட்டு, உத்தரவு ரத்தான பயனாளிகள், மாநிலம் முழுவதும், ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், நிறுத்தப்பட்ட ஓய்வூதியம் கேட்டு மனு கொடுத்து வருகின்றனர். இந்த பிரச்னை ஒரு பக்கம் இருந்தாலும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பை, அந்தந்த மாவட்ட அதிகாரிகள் உறுதி செய்வதில், இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

வாரிசுக்கு தண்டனை உண்டு:

மாவட்ட சமூக நல அலுவலர் ஒருவர் கூறியதாவது: முதியோர் ஓய்வூதிய பெற்று, தற்போது அதற்கான உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அலைக்கழிக்கப்படுபவர்கள், அவரவர் வாரிசுகளின் கவனிப்பு இல்லாதவர்களாக உள்ளனர். மாவட்டம் தோறும் இலக்கு நிர்ணயத்து, பயனாளிகளை ரத்து செய்ய வேண்டும் என, உத்தரவிட்டதால், தகுதியான பலர் உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. இதனால், தற்போது அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம், 2007ன்படி, அவரவர் வாரிசு பராமரிப்பு உதவித்தொகையாக, மாதம்தோறும்,10 ஆயிரம் ரூபாய் வரை, பெற்றோருக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பெற்றோரின் வாரிசுக்கு, அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்க முடியும். இதை நடைமுறைப்படுத்துவதில், மாவட்ட அதிகாரிகள், இரட்டை வேடம் போட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியினர் கொடுத்த சிபாரிசு அடிப்படையில் உத்தரவை போட்டுவிட்டு, பின்னர் அவர்களே அதை ரத்து செய்தது மிகப்பெரிய தவறு. எங்களது துறையில், மாநிலம் முழுவதும், 26 மூத்த குடிமக்கள் காப்பகம் உள்ளது. அதில், விருப்பமானவர்கள் பாதுகாப்பகாக தங்கிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- நமது சிறப்பு நிருபர் -தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக