வெள்ளி, 24 அக்டோபர், 2014

Crowd Funding for My son is Gay ! லோகேஷ் குமாரின் தன்பால் ஈர்ப்பு பற்றிய படம் முதலில் ஹிந்தியில் !

இந்திய சினிமாவில், ஏன் தமிழ் சினிமாவில்கூடத் தற்போது அதிகம் புழங்கப்படும் வார்த்தை – கிரவுட் ஃபண்டிங். ஆரோக்கியமான சினிமாவை எடுப்பதற்குத் தேச எல்லைகளைக் கடந்து கிடைக்கும் பண உதவி. இப்படி மக்களின் தயாரிப்பில், தன்பாலின ஈர்ப்புள்ள (ஹோமோ) ஒரு இளைஞனைப் பற்றி இந்தியில் உருவாகும் படம் ‘மை சன் இஸ் கே’. இயக்குநர், சென்னையைச் சேர்ந்த லோகேஷ் குமார்.
இவர் படத்திற்காக இதுவரை 11 லட்சம் நிதி குவிந்துவிட்டது. 25 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காகத் தயாராகிக்கொண்டிருந்த லோகேஷ், ‘தி இந்து’வுக்காகப் பேசியதிலிருந்து...
உங்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்?
படித்தது மெக்கானிக்கல் இன்ஜீனியரிங். அது தொடர்பாகக் கிடைத்த வேலையில் மனம் ஒட்டவில்லை. சில குறும்படங்களை இயக்கியிருக்கிறேன்.
அந்த அனுபவத்தோடு வெகுஜன சினிமாவை இயக்க வந்திருக்கிறேன்.
நமக்கு முன்னால் முக்கியப் பிரச்சினைகள் நிறைய இருக்கும்போது தன்பாலினப் பிரச்சினையை மையப்படுத்தி சினிமா எடுக்க என்ன காரணம்?
பாலினச் சிறுபான்மையினருக்கான குறும்பட விழாக்களின் படங்களில் அவர்களைப் பற்றிய சந்தேகங்கள், பயங்கள், தவறான புரிதல்கள் மைய நீரோட்டமாக இருக்கும். நிறைய வெகுஜன சினிமாக்களில், ஊடகங்களில் அவர்களைப் பற்றி நிறைய கேலியும் கிண்டலும்தான் காட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதத்தில் ஒரு வெகுஜனப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தே இதைப் படமாக எடுக்கிறேன்.
மைனாரிட்டி என்று பரவலாகச் சொல்லப்படும் LGBT -களைப் (L-லெஸ்பியன், G- கே, B-பைசெக் ஷுவல், T-டிரான்ஸ்ஜெண்டர்) பற்றிய சரியான புரிதல் நம்மிடையே இல்லை. பத்து பேரில் ஒருவருக்குத் தன்பாலின ஈர்ப்பு இருக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆனால் இவர்களைப் பற்றிய நிறைய கேள்விகளுக்கு இவர்களிடமே விடை இல்லை. இந்தப் படத்தில் நான் பெரிய பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் பேசவில்லை.
உங்கள் பிள்ளையின் பால் சார்ந்த விருப்பம் எதுவாக இருந்தாலும் சரி, அதற்காக உங்கள் பிள்ளையைத் தனிமைப்படுத்தாதீர்கள் என்பதைத்தான் படத்தில் அழுத்தமாகச் சொல்கிறேன். குடும்பத்தில் ஒருவரைத் தனிமைப் படுத்துவதைவிட மிகப் பெரிய வன்கொடுமை வேறு என்னவாக இருக்கமுடியும்?
இந்தப் படத்தை எடுக்க கிரவுட் ஃபண்டிங்கை நாடியது ஏன்?
தன்பாலின ஈர்ப்புள்ளவர்களும் நம்மில் ஒருவரே என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் இந்தப் படத்தைத் தயாரிப்பதற்குக் கண்டிப்பாக எந்தத் தயாரிப்பாளரும் முன்வர மாட்டார்கள். சினிமா என்பது ஒரு தொழில். அதில் எவ்வளவு முதலீடு போடுகிறோமோ அதற்கு எந்த அளவுக்கு லாபம் திரும்பக் கிடைக்கும் என்ற கணக்குகள் இல்லாமல் சினிமா இல்லை. அதேபோல இந்தப் படத்துக்கு மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தெரியாது. அதனால் மக்களையே தயாரிப்பாளர்களாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கிவருகிறேன்.
இதைத் தமிழிலேயே எடுத்திருக்கலாமே... ஏன் இந்தி?
தமிழில் எடுப்பதைவிட இந்தியில் எடுத்தால் பரவலாக வட இந்தியாவின் பல மாநில ரசிகர்களுக்குப் போய்ச் சேர்வதற்கான சூழல் இருப்பதால் இந்தியில் எடுக்கிறேன். தேவைப்பட்டால் இதைத் தமிழில் மொழிமாற்றம் செய்து கொள்ளலாம்.
ஒரு பேட்டியில் 40 லட்சத்தில் படத்தை முடிப்பதாகக் கூறி இருக்கிறீர்கள். இது சாத்தியமா?
அம்மாவும் பையனும்தான் இந்தப் படத்தின் பிரதான பாத்திரங்கள். பையனாக நடிப்பவர் தன்பாலின ஈர்ப்புள்ளவர். அவருடைய அம்மா பாத்திரத்தில் அனுபமா குமார் இலவசமாகவே நடிக்கிறார். இன்னும் பலர் இலவசமாகவே நடிக்கிறார்கள். என்னுடைய உதவி இயக்குநர்கள், சில டெக்னீஷியன்கள் இலவசமாக வேலை பார்க்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த ஸ்டார்லைட் ஹெர்பல் சலூன்காரர்கள் ஹேர்ஸ்டைல், மேக்கப் போன்றவற்றை இலவசமாகச் செய்கின்றனர்.
இப்படிப் பலரின் கூட்டு முயற்சியில் உருவாகும் படம் இது. லிட்டில்ஷோஸ் டாட் காம் படத்திற்குப் பெரிய உந்துதலாக இருக்கிறது. இவர்களின் உதவியால்தான் 40 லட்சத்தில் படம் பண்ண முடியும் என்று சொன்னேன். கண்டிப்பாக அதை எங்கள் குழுவால் சாதித்துக் காட்ட முடியும்.
தன்பாலின உறவுக்கு எதிரான 377 சட்டப் பிரிவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
377 போன்ற சட்டப் பிரிவுகள் மக்களின் தனிப்பட்ட உரிமையைப் பறிக்க வல்லவை என்பது என் கருத்து.
LGBT சமூகத்தைச் சேராத உங்களின் இந்த சினிமா முயற்சிக்கு அந்தக் குழுக்களிடையே வரவேற்பு இருக்கிறதா?
பல குழுக்களைச் சேர்ந்த தனிப்பட்டவர்களிடமிருந்து ஆதரவு கிடைத்துவருகிறது. அவர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் கிடைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இந்தப் படத்துக்குப் பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்திருக்கிறது. சுதந்திரமான கதைகளுக்கு அவர்கள் தயாராக இருப்பதையே இது காட்டுகிறது.
படத்தில் சமரசத்துக்கு வேலையே இல்லை. அப்படித்தானே…?
அப்படிச் சொல்ல முடியாது. தியேட்டர்களிலும் படம் ரிலீஸாக வேண்டும். உலகப் பட விழாக்களிலும் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். சென்ஸாருக்காக வேண்டி சில காட்சிகளை காம்ப்ரமைஸ் செய்துகொண்டுதான் படமாக்குகிறேன்.tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக