வியாழன், 16 அக்டோபர், 2014

அதிமுக எம்எல்ஏக்கள் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் முடிவு

பஞ்சாயத்து இயக்கத்தின் செயலாளர் முகம்மது இலியாஸ் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,>முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலரலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.இத்தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தினர். இந்த போராட்டங்களில் பல அனுமதிக்கப்படாத இடங்களில், அனுமதி வாங்காமல் நடத்தினர். இவர்கள் மீது காவல்துறை எந்த பெரிய நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இது சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசிடம் கேள்வி கேட்டுள்ளது.


இந்த நிலையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சட்ட பேரவை உறுப்பினர்கள் இத்தீர்ப்பை எதிர்த்தும், ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தியும் அனுமதி மறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்படாத மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பு 05.10.2014 அன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கு பதிவு செய்யப்படவில்லை.,

இதேபோல், மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர். சமாதியில் 04.10.2014 அன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், 05.10.2014 அன்று சென்னை மேயர் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்களும் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் சட்ட விரோதமாக உண்ணாவிரதம் இருந்தனர். இதற்கும் எந்த நடவடிக்கையுமில்லை.

இந்திய அரசியலில் சாசனப்பிரிவு 14, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. ஆகவே, சட்டத்தை மீறிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மேயர், மாநகராட்சி கவுன்சிலர்கள் மீது சட்டத்தை மீறியதாக வழக்கு பதிவு செய்யக் கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கம் தமிழக டிஜிபிக்கும், சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளது. 

இந்த புகாரின் அடிப்படையில் அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டத்தை முறியதாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் அதிமுக எம்எல்ஏக்கள் மீது வழக்கு தொடரப்படும். இவ்வாறு தெரிவித்தனர். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக