சனி, 18 அக்டோபர், 2014

பரப்பன அக்ஹாராவில் நடந்தது என்ன? ப்ளாஷ் பேக் டீடெயில் !

பெங்களூரு அலைச்சல் அ.தி.மு.க-வினரை ரொம்பவே களைப்பாக்கி​விட்டது. எல்லோரும் சோர்ந்து போய்விட்டார்கள். பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் இப்போது அ.தி.மு.க-வினரின் பழைய பாய்ச்சலைப் பார்க்க முடியவில்லை. எல்லோரும் இயல்பு நிலைக்கு மாறுவது தெரிகிறது. தங்களது ஆற்றாமையை சிலர், பத்திரிகைகள் மீது வெளிப்படுத்துகிறார்கள்'' என்றபடியே நம்முன் ஆஜரானார் கழுகார்.
''ஜெயலலிதா கைது பரபரப்பில், பரப்பன அக்ரஹாரா பகுதி மக்களுடைய சுதந்திரம் பறி போய்விட்டது. அந்தச் சிறைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சிறைக்குச் செல்லும் சாலையைத்தான் அவர்களும் பயன்படுத்தியாக வேண்டும். ஆனால், பரப்பன அக்ரஹாரா நுழைவுப் பகுதியிலேயே செக் போஸ்ட் அமைத்து வழியை மறித்துவிட்டார்கள். செக் போஸ்ட்டில் சோதனைக்கு நிற்கும் போலீஸ்காரர்களை அ.தி.மு.க-வினர் அட்ஜெஸ்ட் செய்து உரிமையோடு உள்ளே செல்கிறார்கள். ஆனால், அங்கேயே வசிக்கும் மக்களை அத்தனைச் சாதாரணமாக உள்ளே அனுமதிப்பது இல்லை. கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். அந்தப் பகுதிக்கு வரும் விருந்தினர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது.
'உங்கள் சொந்தக்காரரை போன் செய்து இங்கே வரச்சொல்லுங்கள்’ என்று கெடுபிடி செய்கிறார்கள் போலீஸார். இதனால் ஏகத்துக்கும் எரிச்சல் அடையும் அந்தப் பகுதி மக்கள், 'அந்த அம்மா ஆட்களை உள்ளே விடுறீங்க, எங்களை விடமாட்டேன்றீங்க, நாங்க என்ன தப்பு செய்தோம்?’ என்று கொந்தளிக்கிறார்கள்.''
''ராஜீவ் கொலை வழக்கு விசாரணை பூந்தமல்லியில் நடந்தபோதும், அந்தப் பகுதி மக்களும் இந்த மாதிரி கொந்தளிக்கத்தான் செய்தார்கள்.''
''மூன்று வேளையும் ஜெயலலிதாவுக்கு வெளியில் இருந்து சாப்பாடு போகிறது; அதற்காக போயஸ் கார்டனில் இருந்து அவருடைய ஆஸ்தான சமையல்காரர் ராமு வரவழைக்கப்பட்டார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதை சிறை நிர்வாகம் அடியோடு மறுத்திருந்தது. 'ஜெயலலிதாவுக்கு சிறையில் தயாரிக்கப்படும் உணவுகள்தான் கொடுக்கப்படுகின்றன. அவரும் வெளியில் இருந்து சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்’ என்று சொன்னார்கள். அந்த வளாகத்துக்கு வந்த பழைய கைதி ஒருவரிடம் இதைச் சொல்லிக் கேட்டபோது,  '10 ஆண்டுகள் நான் சிறையில் இருந்திருக்கிறேன். மோசமான சாப்பாடுதான் சிறையில் போடப்படுகிறது. அந்த சாப்பாட்டை வாயில் வைக்கவே முடியாது. அந்த அம்மா அதைச் சாப்பிடுகிறார்கள் என்று சொல்வது எல்லாம் சுத்தப் பொய்’ என்று உறுதியாகச் சொல்கிறார்.''    
''அப்படியானால் என்னதான் சாப்பிடுகிறார் ஜெயலலிதா?''
''சிறையில் 27-ம் தேதி அடைத்ததில் இருந்து தொடர்ந்து 10 நாட்கள் பெங்களூரு மாநகராட்சியின் உயர் பொறுப்பில் இருக்கும் தமிழகத்​தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் இருந்து உணவு சென்றதாகச் சொல்கிறார்கள். சம்பந்தப்பட்டவருக்கு நெருக்கமானவரைப் பிடித்துப் பேசினேன். 'ஒரு முக்கியமான நபர் அவரிடம் கேட்டுக்கொண்டதால் முதல் இரண்டு நாட்கள் அவரது மனைவி​தான் சமையல்செய்து கொடுத்து அனுப்பினார். இரண்டு பொறியல், கூட்டு, சாம்பார், ரசம், அப்பளம் எனச் செய்து அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், அது எதுவும் மேடம் எடுத்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அவருடைய சமையல்காரர்கள் 2 பேரும், உதவியாளர்கள் 2 பேரும் வந்தார்கள். அவர்களிடம் அந்த நபர் தனது புது வீட்டை கொடுத்துள்ளார். அதில்தான் சமையல் செய்தார்கள். ஒரு குழந்தைக்குச் செய்வதைப்போல செய்தார்கள். காலையில் 3 இட்லி, 2 பிரெட் சான்ட்விச். இவ்வளவுதான் உணவு.  இட்லி, மிகமிக சிறியது. மதியம் ஒரு சின்ன கப் அளவு தயிர் சாதம். இல்லை என்றால் கையளவு ரசம் சாதம். இரவு இரண்டு இட்லி, ஒரு பிரெட் சான்ட்விச்... டெய்லி மெனு இவ்வளவுதான். மற்றபடி, எதுவும் எடுத்துக் கொள்ளுவது இல்லை’ என்று அவர் சொல்கிறார். இதற்காக சிறைக்கு அருகே ஒரு பெரிய வீடு வாடகைக்கு எடுத்துவிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்''
''ம்!''
''எவ்வளவு விரைவில் முடியு​மோ அவ்வளவு விரைவாக ஜெயலலிதாவை போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்பதில் கவலையோடு இருக்கிறாராம் சசிகலா. ஜெயலலிதா மீதான ஜாமீன் மனு இப்போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அங்கு மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்ட  தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் சிக்ரி, லோகூர் ஆகியோர் அடங்கிய அமர்வு,  'விசாரணை 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும்’ என்று அறிவித்தனர். இந்த இதழ் உமது வாசகர்கள் கையில் இருக்கும்போது முடிவு தெரிந்திருக்கும். அன்றைய தினம் ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் சிக்கல் தொடரும். அதற்கு அடுத்த நாள் 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் விடுமுறை. இந்த இக்கட்டான சூழலில் வழக்கு விசாரணக்கு வருகிறது. தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அதைப்பற்றிய அப்டேட்கள் எதுவும் இருக்கிறதா, ஜாமீன் கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டிருக்கிறாராம் ஜெயலலிதா. 'கட்டாயம் ஜாமீன் கிடைத்துவிடும். கவலைப்படாதீங்க. ஆண்டவன் என்றைக்கும் நம்ம பக்கம்தான் இருக்கான். நிச்சயம் ஜாமீன் கிடைத்துவிடும்’ என்று ஆறுதல் சொல்லி வருகிறாராம் சசிகலா. ஆனாலும், ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையாம். இரண்டு மூன்று நாட்களாக ஏதோ ஆழ்ந்த யோசனையிலேயே இருந்து வருகிறாராம்.''
''ஓஹோ?''
''சுதாகரனை அவரின் நண்பர்கள் சிலர் அடிக்கடி சந்தித்து தைரியம் சொல்லி வருகிறார்களாம். சில நாட்கள் முன்புதான் அவரின் மனைவி குழந்தைகள் எனக் குடும்பத்தோடு சுதா​கரனைச் சந்தித்தார்கள். அதற்குப் பிறகு அவரின் நெருங்கிய நண்பர்கள் சிலர் சென்று அவரைச் சந்தித்திருக்கிறார்கள். அப்போது, 'எனக்கு சிறைக்குள் இருப்பது அதிக​மான மன உளைச்​சலை ஏற்படுத்துகிறது, உங்களிடம் பேசினால் கொஞ்சம் ரிலாக்​ஸாக இருக்கிறது, நான் வெளியில் வரும்வரை பெங்களூரைவிட்டுப் போய்விடாதீர்கள்’ என்று கேட்டுக்கொண்டாராம். சுதாகரனின் உத்தரவை ஏற்று காலையிலிருந்து மாலை 7 மணி வரை சிறை வளாகத்தில் காரிலேயே காத்துக்​கிடக்கிறார்கள் அவரின் நண்பர்கள்.''
''ம்!''
''சுதாகரன் இருக்கும் அறைக்குப் பக்கத்து அறையில் இருப்பவர் ஹரிஸ். இவர் கர்நாடக மாநிலம் நெல்மங்கா சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான கிருஷ்ணப்பாவை கொலை செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர். அந்த வழக்கில் மொத்தம் 40 பேர் சிக்கி உள்ளனர். இதில் ஒருவர்தான் ஹரிஸ். அவரிடம் பகல் நேரத்தில் கதை கேட்கிறாராம் சுதாகரன். அதே போல் ரெட்டி பிரதர்ஸும் ஃபிரெண்ட் ஆகிவிட்டார்களாம். கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளின் மகன்கள்தான் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோம்மன்ன ரெட்டி, பாஸ்கர ரெட்டி ஆகியோர். இவர்கள் அரசிடம் பர்மிஷன் வாங்காமல் குவாரிகளை நடத்தி கோடி கோடியாகப் பணம் சேர்த்ததாகக் குற்றச்சாட்டு உள்ளது. கடந்த பி.ஜே.பி ஆட்சியில் ஸீட் வாங்கி கர்நாடக மாநிலத்தின் சுற்றுலாத் துறை அமைச்சரானார் ஜனார்த்தன ரெட்டி. அதன் பிறகு, தன் தொழிலை விரிவாக்கி தனி ஹெலிகாப்டர் வாங்கும் அளவுக்கு வளர்ந்தார். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டின் கனிம வளங்களைக் கொள்ளையடித்ததால் மூன்று வருடங்களாகச் சிறைக்குள் சிக்குண்டு கிடக்கிறார். இவரின் ப்ளாஷ் பேக்-கைப் பற்றி கேட்டிருக்கிறார் சுதாகரன். பிறப்பு முதல் சிறை கைதி ஆனது வரை ஒன்றுவிடாமல் சொல்லியிருக்கிறார் ஜனார்த்தன ரெட்டி. அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட சுதாகரன், 'நாட்டின் வளத்தை கொள்ளையடிக்கலாமா?’ என்று கேட்டிருக்கிறார். 'என்னுடைய குவாரி பார்ட்னர்கள் தமிழகத்திலும் ஏராளமான பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்னைவிட தமிழ்நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்துக் கொழுத்துப் போய் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி அப்போது மதுரை கலெக்டராக இருந்த சகாயம் என்பவர் சொன்னதும் அவரை மாற்றியது ஏன்? சென்னை உயர் நீதிமன்றம் அவரைப்பற்றி விசாரிக்க சகாயத்தை நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது ஏன்?’ என்று அவர் திருப்பிக் கேட்டாராம். அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டதும் பயந்து போய், 'எனக்கும் அரசியலுக்கு சம்பந்தம் இல்லை’ என்று ஜகா வாங்கி இருக்கிறார் சுதாகரன். ஜனார்த்தன ரெட்டி சிரித்துக்கொண்டே, 'எனக்கு எல்லா அரசியல்வாதிகளையும் தெரியும்’ என்றாராம்.''
''சுதாகரனுக்கு ஜெயிலில் அரசியல் பாடம் நடக்கிறது என்று சொல்லும்!''
''ஆந்திரத்தில் வீசிய ஹுட் ஹுட் புயலால் பெங்களூரு சீதோஷ்ண நிலை அடியோடு மாறிவிட்டது. பகலிலும் இரவிலும் கடுமையான காற்று வீசுகிறது. சிறை வளாகத்துக்குள் அதிகமான மரங்கள் இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் சிறைக்குள் குளிர் வாட்டி எடுக்கிறது. இந்த சீதோஷ்ண நிலை சிறையில் இருக்கும் பலருக்கும் சேராததால் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இந்தக் காற்றின் தாக்கத்தால் சசிலாவுக்கு ஜலதோஷம் பிடித்து தலைவலியும் அதிகரித்து இருக்கிறது. இளவரசிக்கு இடைவிடாது இருமல் வந்துகொண்டே இருக்கிறதாம். சிறைத் துறை டாக்டர்கள் பரிசோதனை செய்து மாத்திரைகள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த மாத்திரைகளை சாப்பிட முடியாது என்றதால், அந்த மெடிக்கல் சம்மரியை வாங்கி அப்போலோ டாக்டர்களிடம் கொடுத்து அதற்கான மாத்திரைகள் வெளியில் இருந்து வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளன'' என்ற கழுகார் பெங்களூரு டாபிக்குக்கு இப்போதைக்கு ஒரு கமா போட்டுவிட்டு, சென்னை விவகாரங்களுக்கு வந்தார்.
''திடீர் பயணமாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை வந்து சென்றதைவைத்து ஏராளமான வதந்திகள். தனது சென்னை வீட்டில் இருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளார். அவை அனைத்தும் தி.மு.க வட்டாரம் சம்பந்தப்பட்டவை என்கிறார்கள். ஒரே நேரத்தில் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் சிம்ம சொப்பனமாக மாறி வருகிறார் சுவாமி. ஏற்கெனவே சோனியா மீது, நேஷனல் ஹெரால்டு நில அபகரிப்பு வழக்கு போட்டுள்ளார். காங்கிரஸ் எம்.பி-யான சசிதரூரின் மனைவி கொலை செய்யப்பட்டதாக ஆரம்பத்தில் இருந்தே சுவாமி சொல்லிவருகிறார். தற்போது அதனையும் கையில் எடுத்துள்ளார். இப்படி சுவாமியின் அதிரடி தற்போதைக்கு பி.ஜே.பி-க்குத் தேவைப்படுகிறது. ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, வழக்கின் பிரதிவாதி என்ற வகையில் தன்னையும் இணைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சுவாமி சொல்லிவருவது அ.தி.மு.க வட்டாரத்தில் கிலியை உண்டாக்கியுள்ளது. தமிழக சட்டம் -  ஒழுங்கு விவகாரங்களை தினமும் கேட்டு வாங்கி ஃபைல் செய்து வரும் சுவாமி, '356-வது பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.'' விகடன்.com
''இதற்கு தமிழக கவர்னர் ரோசய்யா ஒத்துழைப்​பாரா? அவர்தான் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியாக இருப்பதாக சொல்லியிருக்​கிறாரே?''
''அதைத்தான் கருணாநிதி கடுமையாகச் சாடியிருக்கிறாரே. 'ஆளுநரின் பாராட்டுக்குக் கிடைத்த பரிசு என்னவோ?' என்றெல்லாம் பொடிவைத்து அறிக்கைவிட்டிருக்கிறாரே கருணாநிதி. கிட்டதட்ட இதே ரேஞ்சில் சுவாமியும் தமிழக கவர்னர் ரோசய்யா மீது கோபத்தில் இருக்கிறார். ஜெயலலிதா கடந்தமுறை டெல்லி வந்தபோது, ரோசய்யாவுக்காக லாபி செய்துவிட்டுப் போனதாகவும் அதனால்தான், மத்திய அரசு ரோசய்யாவை மாற்றாமல் விட்டுவைத்திருப்பதாகவும் சுவாமி நினைக்கிறார். இப்போது, தமிழக சட்டம் - ஒழுங்கு சீர்கேடு பற்றி ரோசய்யா சாட்டையைச் சொடுக்காமல் பாராட்டுப் பத்திரம் வாசித்து வருவதைக் காரணம் காட்டி, அவருக்கு உடனடியாக கல்தா தரவேண்டும் என்று மத்திய அரசுக்கு பிரஷர் கொடுக்கிறாராம் சுவாமி.''
''சட்டம் - ஒழுங்கு விவகாரத்தைப் பொறுத்த​வரையில், தமிழக உயர் அதிகாரிகள் லெவலில் என்ன நினைக்கிறார்கள்?''
''செப்டம்பர் 27-ம் தேதி முதல் 10 நாட்கள் வரை தமிழகத்தில் நடந்த வன்முறைகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதுதொடர்பாக  மத்திய அரசின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள். இதெல்லாமே மத்திய உள்துறை அமைச்சகம் சாட்டையை எடுத்தபிறகு தான். தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரத்தை முக்கியக் கட்சிகள்  ஆதாரங்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பி வருகிறார்கள். குறிப்பாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவை விமர்சித்து அ.தி.மு.க-வினர் தமிழகத்தின் சில இடங்களில் ஒட்டிய போஸ்டர்கள், அவரின் கொடும்பாவி எரிக்கப்பட்ட காட்சிகள்... ராஜ்நாத்துக்கு அனுப்பியது போலவே, நீதித்துறை வி.ஐ.பி-களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள். அந்த விவரங்களை டேபிளில் வைத்துக்கொண்டு, தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பலவித வினாக்களை எழுப்பியது. 'தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி போன்ற பிஸியான ஏரியாக்களில் இடம் அனுமதி வழங்கியது எப்படி? அதனால், மக்கள் சிரமத்துக்கு ஆளானார்களாமே?' என்று விளக்கம் கேட்டிருக்கிறது. இதற்கு முன்பு, இதுமாதிரி மற்ற கட்சியினர் நடத்தியபோதெல்லாம் ஊருக்கு வெளியே எங்காவது இடம் தருவார்கள். இப்போது சிறப்பு சலுகை காட்டப்பட்டிருக்கிறது எந்தவகையில் என்பதுதான் உள்துறையின் கேள்வி.''
''ஓ... அப்படியா?''
''அதுமட்டுமல்ல... இதற்கு முன்பு, பா.ம.க. தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டபோது, நடந்த வன்முறை சம்பவங்களைப் பட்டியலிட்டு அப்போது எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கைகளும் இப்போது ஜெயலலிதா ஜெயிலுக்கு போனபோது நடந்த வன்முறை சம்பவங்களின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைளின் விவரங்களை உள்துறை அமைச்சகம் கேட்டிருக்கிறது. 'ராமதாஸ் கைது செய்யப்பட்டபோது நடந்த வன்முறையுடன் ஒப்பிடும்போது ஜெயலலிதா ஜெயிலுக்கு போனபோது நடந்த வன்முறைகள் குறைவுதான்’ என்பது தமிழக போலீஸின் வாதம். ஆனால், இதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கவில்லை. 7 ஆயிரம் பேரை முன்னெச்சரிக்கையாக கைது செய்தோம் என்று தமிழக போலீஸ் சொல்வதையும் அவர்கள் ஏற்கவில்லை.''
''இது எதில்போய் முடியும்?''
''தமிழகத்தில் ஆர்டிக்கிள் 356-ஐ பயன்படுத்தும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சூழ்நிலை சீரியஸாகிக் கொண்டிருக்கிறது என்கிற ரீதியில் ஆவணங்ளை தயார் செய்து வருகிறது மத்திய உள்துறை அமைச்சகம். மாநில அரசின் உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் யாரும் அ.தி.மு.க வி.ஐ.பி-கள் வாய்மொழி உத்தரவாக சொல்வதை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறது மத்திய அரசு. தமிழகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகளை மாற்றிவிட்டு புதியவர்களை நியமிக்கச் சொல்லி ரோசய்யா மூலம் மாநில அரசுக்கு உத்தரவுகள் வந்திருக்கிறதாம். தமிழக அரசின் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டவர்கள் அந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். விரைவில் மாற்றங்கள் நடக்கலாம்'' என்று சொல்லிவிட்டு பறந்தார் கழுகார்.
அட்டை மற்றும் படங்கள்: ரமேஷ் கந்தசாமி
 தொடரும் பயம்!
இங்கிலாந்து வர்த்தகம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் வின்ஸ் கேபில்ஸ் தலைமையிலான குழுவினர் கடந்த 15-ம் தேதி கோட்டையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். அந்த சந்திப்பில், நடுநாயகமாக இருக்கும் முதல்வர் நாற்காலியில் பன்னீர்​செல்வம் அமராமல், பத்தோடு பதினொன்றாக அதிகாரிகள் வரிசையில் அமர்ந்திருந்தார். அவ்வளவு பயம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக