திங்கள், 6 அக்டோபர், 2014

அடிமை கூட்டத்துக்கு புரியவில்லை....தமிழ்நாட்டு மானத்தை ஜெயலலிதா விற்றுவிட்டார் !

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் இருக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.ஜெயலலிதாவிற்கு விசுவாசத்தை காட்டுவதற்காக, இப்படி தொடர் போராட்டங்கள் நடத்தி தொந்தரவு செய்வதாக, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். ஜெயலலிதாவிற்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, கடந்த செப்., 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதன்பின் அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.அ.தி.மு.க.,வினர் தாக்குதல்: இதையடுத்து, தமிழகத்தில் வன்முறை வெடித்தது. கடைகளை அடைக்கச் செய்ததோடு, அரசு பஸ்கள், தனியார் லாரிகள் மற்றும் வாகனங்கள் மீது, அ.தி.மு.க.,வினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.காஞ்சிபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அரசு பஸ்கள், தீ வைத்து எரிக்கப்பட்டன; 63 அரசு பஸ்கள் கல்வீச்சில் சேதம்அடைந்தன.தொடர்ந்து, மறுநாளும் போராட்டங்கள் தொடர்ந்ததால், வாகன போக்குவரத்து சீரடையவே, இரண்டு நாட்கள் ஆகின. புதிய முதல்வராக, பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். அதன் பின், ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.மீனவர்கள் போராட்டம்:

*செப்., 30ம் தேதி, மதுரை, திருவாரூர், நாகை உள்ளிட்ட, ஏழு மாவட்டங்களில் கடையடைப்பு நடத்தப்பட்டது.
*சென்னையில், திரைப்பட சங்கங்கள் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தியேட்டர்கள் செயல்படவில்லை; படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. *மீனவர்கள் சார்பில், கடலோர மாவட்டங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
*அக்., 1ம் தேதி, மாநிலம் முழுவதும், அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதனால், அரசு பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. *அக்., 4ம் தேதி, சென்னையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரதம் இருந்தனர். 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள், ஒளிபரப்பை நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

மனித சங்கிலி:
*சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில், நேற்று கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். எம்.எல்.ஏ.,க்கள் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.
*தமிழகம் முழுவதும், தனியார் பஸ் உரிமையாளர்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர்; பல மாவட்டங்களில், தனியார் பஸ்கள் இயங்கவில்லை.
*நேற்று முன்தினம் முதல், அனைத்து மாவட்டங்களிலும், தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம், மவுன விரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள்
நடத்தப்படுகின்றன.
*இன்று, சென்னை தவிர பிற மாவட்டங்களில், தனியார் மினி பஸ் உரிமையாளர்கள் போராட்டத்தில் குதிக்கின்றனர்.
*நாளை, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால், பகல் வேளையில், ஆம்னி பஸ்கள் இயக்கம் இருக்காது.

இதுவரை ஜெ.,க்கு ஆதரவாக, கல்வி நிறுவனங்கள் போராட்டம் நடத்தவில்லை. அரசு சார்ந்த உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் சிலவற்றில் மாணவர்கள் மட்டுமே, போராட்டம் நடத்தினர்; அதுவும் ஒரு நாள் மட்டுமே.எனினும், தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாளை (7ம் தேதி) ஒரு நாள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது; அன்று பள்ளிகள் இயங்காது. அத்துடன், பெரும்பாலான கோவில்களில், சிறப்பு பூஜைகள், யாகங்கள்; மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தப்படுகின்றன.

உண்ணாவிரதம்:சென்னையில், வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை என, இரண்டு இடங்களில் மட்டுமே, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த, போலீஸ் அனுமதி உண்டு. ஆனால், ஆளுங்கட்சியினர், மெரீனா கடற்கரையில், எம்.ஜி.ஆர்., சமாதி முன், தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற பல்வேறு போராட்டங்களால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஆளுங்கட்சியினர் மற்றும் விசுவாசிகளின் இதுபோன்ற நடவடிக்கைகள், பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

'விடுவிக்காவிடில் கர்நாடகாவுக்கு முதல்வர்' :
தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் போஸ்டர்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
*தெய்வத்திற்கு மனிதன் தண்டனை தரலாமா?
*தெய்வம் ஜாமின் கேட்கலாமா?
*சக்கர வியூகத்தில் மாட்டிக் கொள்ள எங்கள் அம்மா என்ன அபிமன்யுவா?
*காவிரியை எடுத்துக் கொள்; எங்கள் அம்மாவை கொடுத்து விடு.
*விடுவித்தால், தமிழகத்திற்கு முதல்வர்; விடுவிக்காவிடில், கர்நாடகாவிற்கு முதல்வர்.இப்படி அதிர்ச்சி வாசகங்களுடன் பேனர்கள், போஸ்டர்கள் தென்படுகின்றன. மேலும், ஜெ.,க்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹாவை கடுமையாக விமர்சித்து, தமிழகத்தின் பல இடங்களில், போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக