வெள்ளி, 10 அக்டோபர், 2014

கூடுதல் சாட்சிகளை சேர்க்க கனிமொழி எதிர்ப்பு

புதுடில்லி:'2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், கூடுதலாக சில சாட்சிகளை சேர்க்க அனுமதி வேண்டி, சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
கூடுதல் ஆவணங்கள்:2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த ஊழல் வழக்கை விசாரித்த சி.பி.ஐ., சார்பில், சமீபத்தில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'வழக்கில் கூடுதல் சாட்சிகளாக, அமலாக்கத் துறை இயக்குனரகத்தின் துணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங், உதவி இயக்குனர் சத்தியேந்திர சிங், தகவல் ஒலிபரப்புத் துறை சார்பு செயலர் கபூர் உட்பட, சிலரைச் சேர்க்க அனுமதிக்க வேண்டும். அத்துடன் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யவும் வாய்ப்பு அளிக்க வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி தாக்கல் செய்துள்ள மனு விவரம்:2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்யும் பணி ஏற்கனவே முடிந்து விட்டது. இந்நிலையில், மிகவும் தாமதமாக கூடுதல் சாட்சியங்களை சேர்க்க, அனுமதி வேண்டி, சி.பி.ஐ., மனு செய்துள்ளது சரியல்ல. எனவே, சி.பி.ஐ.,யின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல; அதை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, கனிமொழி தெரிவித்துள்ளார்.
அதேபோல், கலைஞர் 'டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலும், 'சி.பி.ஐ., மிகவும் தாமதமாக, கூடுதல் சாட்சிகளை சேர்க்க அனுமதி கோரியுள்ளதால், அதை ஏற்கக் கூடாது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற சிலரோ, 'சி.பி.ஐ.,யின் மனு தொடர்பாக, பதில் தாக்கல் செய்யப் போவதில்லை. அதற்கு பதிலாக, தங்களின் வழக்கறிஞர்கள் வாதத்தை முன் வைப்பர்' என, கூறினர். ஆனால், அவர்களை எல்லாம், வரும் 14ம் தேதிக்குள் பதில் தாக்குதல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும், 27ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.
அனைவருக்கும் நோட்டீஸ்:வழக்கில் கூடுதல் சாட்சிகளை சேர்க்க அனுமதி கோரி, சி.பி.ஐ., தாக்கல் செய்த மனு, முன்னர் விசாரணைக்கு வந்த போது, அதற்கு பதில் அளிக்கும்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலான வாதத்தை கேட்ட பின்னரே, சி.பி.ஐ., மனு மீது முடிவு எடுக்கப் படும் என்றும் நீதிபதி தெரிவித்தார் தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக