வெள்ளி, 10 அக்டோபர், 2014

இல .கணேசன் : ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் ! அதிமுக பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் !

அரசியல் பிரவேசம் குறித்து கேட்டு ரஜினிகாந்தை தர்மசங்கடத்துக்கு ஆளாக்காதீர்கள். அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று பா.ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தேசிய செயற்குழுவின் உறுப்பினருமான இல.கணேசன் ஈரோடு மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தனித்தன்மை பாரத பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பு ஏற்ற பின்னர் ஏராளமான சாதனைகளை செய்து உள்ளார். குறிப்பாக பிற பிரதமர்களை விட 2 விஷயங்களில் நரேந்திர மோடி தனித்தன்மையுடன் வேறுபட்டு நிற்கிறார். முதலாவது உலக நாடுகள் மத்தியில் பாரத நாட்டின் மரியாதை உயர்ந்து உள்ளது.


ஒரு பிரதமர் என்பவர் அலுவலகம் சார்ந்த நிகழ்ச்சிகள், சக அமைச்சர்களுடனான சம்பிரதாய நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்வது என்று அல்லாமல் ஒட்டுமொத்த மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் பிரதமராக உள்ளார்.

குற்றத்தின் தன்மையில் தீர்ப்பு

பிரபலமான நடிகர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்து இருந்தார். அவருக்கு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டபோது, அவரது குற்றம் மறைக்கப்பட்டு அவர் ஜெயிலுக்கு செல்லக்கூடாது என்று போராட்டம் நடந்தது. ஆனால் நீதிபதி என்பவர் குற்றம் செய்த நபர் யார் என்பது பற்றி பார்ப்பது இல்லை. குற்றத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறார்.

இதுபோலவே ஜெயலலிதாவை பொறுத்தவரை குற்றம்சாட்டப்பட்ட வழக்கு 18 ஆண்டுகள் நடந்தன. அவர் குற்றவாளி என்று நிரூபிக்க 18 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பிலும் இந்த காலத்தை குற்றமற்றவர் என்று நிரூபிக்க பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் நீதிபதி தன்முன்னால் இருக்கிற குற்றத்தின் தன்மையை பொறுத்து தண்டனை வழங்கி இருக்கிறார்.

தீர்ப்பு சரியில்லை என்று கருதினால் இதை கூறும் ஒரே இடம் கோர்ட்டுதான். வக்கீல்கள் தங்கள் வாதத்திறமையால், கூடுதல் ஆதாரங்களை சேர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்ய வேண்டும்.

பகிரங்க வருத்தம்

அ.தி.மு.க.வுக்கு பரிகாரம் வேண்டும் என்றால் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். மணல் விற்பனை முறைகேடுகள் களையப்பட வேண்டும். இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே மக்கள் மன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

காளையார் கோவில் கோபுரத்தில் தீப்பற்றிய சம்பவம் பக்தர்கள் மனதில் காயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். கோவில் திருப்பணியை முழுமையாக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் எனது நண்பர். ஆத்மார்த்தமான தேசிய எண்ணம் கொண்டவர். எங்கள் கட்சி தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி ஆகியோருடனும் நல்ல நட்புடன் இருந்தவர். யூகத்தின் பேரில் அவர் அரசியலுக்கு வருவார் என்று செய்திகள் வெளிவருகின்றன. இதுபோன்ற கேள்விகளால் அவரை தர்மசங்கடத்துக்கு ஆளாக்காதீர்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இல்லை. அவருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமும் இல்லை.

இவ்வாறு தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக