வெள்ளி, 3 அக்டோபர், 2014

பன்னீர்செல்வத்துக்கு தினமணி வைத்தி கடும் சவால் ? ஜெயா விசுவாசம் ! நீயா நானா ?

வைத்தி - ஜெயா ஒரு குற்றவாளி குற்றம் செய்து பதவி இழந்து ஒரு அடிமை மூலம் ஆட்சி நடத்தலாம் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் எழுதுகிறார் என்றால் அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்குமா, பாசிசம் பூக்குமா?
ம்மா’வின் அடிமைகள் அமைச்சர்கள் என்ற பெயரில் இடுப்பு வளைந்து, தலை தாழ்ந்து, கண்கள் பனிக்க, இதயம் துடிக்க ஜெயலலிதாவின் வீட்டு வாயிலில், கோட்டையின் முகப்பில், விமான நிலைய ஓடுகளத்தில் தவித்திருப்பது உலகப் பிரசித்தம். அப்பேற்பட்ட அடிமைகளில் ஏக், தோ, தீன் என்ற எண் படி பேதம் இல்லை.
அடிமைத்தனம் ஒன்றென்றாலும் அமைச்சர்கள் என்று வரும் போது தர வரிசை இருந்தாக வேண்டும். இந்த மரபு இல்லையென்றால் ஓபியோ இல்லை, சொர்ணாக்கா வளர்மதியோ அனைவரும் முடுக்காமலே படியும் விளையாட்டு பொம்மைகள்தான். அதிலும் அடிமைத்தனம் எனும் பாட்டரி சார்ஜர் காலியாகாமல் நீண்டகாலம் ஓடுபவர் ஓ. பன்னீர் செல்வம்.
சொத்துக் குவிப்பு வழக்கின் நெடிய பயணத்தில் சசிகலா நடராஜன் ஏதும் சதி செய்து கட்சியை உடைத்து ஆட்சியை கைப்பற்றி விடுவாரா எனும் பயம் ஜெவுக்கு எப்போதும் உண்டு. மன்னார்குடி கும்பலின் மீது வழக்கு போட்டு அடக்கி வைத்த போது வேறு வழியின்றி ஓ. பன்னீர் செல்வம் நம்பிக்கை வாலாட்டுவதில் நம்பகமானவராக ஏற்கப்பட்டார்.

2001 டான்சி வழக்கு தீர்ப்பை ஒட்டி ஜெ பதவி விலகியுதும், அடுத்த ஆறு மாதங்களுக்கு ஓ.பி முதலமைச்சராக பதவியேற்று முடித்தார். அடிமைகள் ஆள்பவர்களாக நியமிக்கப்பட்டால் அதுவும் ஆண்டானின் காலத்திலேயே அரியணையில் அமர்ந்தால் அது அவர்களுக்கு தண்டனைக்காலமே ஒழிய பெருமைக்குரியது அல்ல.
தற்போதும் அந்த தண்டனைக் காலம் சீசன் 2 வாக வந்திருக்கிறது. அம்மா பரப்பன அக்ரகாரா சிறையில் சிக்கியிருக்கும் போது, அடிமை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.
நல்லது, இப்பேர்பட்ட ஓ.பிக்கு யாராவது வாழ்த்து சொன்னால் அதை என்ன சொல்வது?
ஆம், தினமணி ஆசிரியர் வைத்தி 29.09.2014 தேதியிட்ட தலையங்கத்தில் “விசுவாசமும் நம்பிக்கையும்” என்ற தலைப்பில் நாளிதழ் சார்பாக ஓபிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
ஓட்டப் பந்தயத்தில் ஒருவன் ஓடி வந்து வெற்றி பெற்றால் அதை வாழ்த்தலாம். மாறாக ஓட்டப் பந்தயத்திற்கு புரவலராக இருப்பவன் முடிவு செய்து ஓடாத ஒருவனை வெற்றி பெற்றவன் என்று நியமித்து அதையும் சிலர் பதக்கம் கொடுத்து பாராட்டினால் ஓட்டங்களை தாங்கும் பூமித்தாய் எரிமலையாக வெடிக்க மாட்டாளா?
ஓபி, மக்கள் செல்வாக்கிலோ இல்லை ஜனநாயக முறையிலோ முதலமைச்சராக பதவியேற்கவில்லை. இது வைத்திக்கும் தெரியும். அதனால்தான் ஜெயா வழிகாட்டுதல் படி ஆகியிருக்கிறார் என்று சொல்லி விட்டு, அத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கையை அம்மாவிடம் ஏற்படுத்தியிருக்கிறார் என்று வியக்கிறார். பாம்பின் கால் பாம்பறியும். என்ன முன்னது சாதா பாம்பு, பின்னது ஸ்பெசலான நல்ல பாம்பு!
ஆக, தினமணியின் தொலை நோக்கு நெறி முறைப்படி அம்மாவிடம் விசுவாசமாக இருப்பதே பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் போதுமானது. ஆனாலும் ஓபி போன்ற கட்சி அடிமைகளை விட வைத்தி போன்ற ஊடக அடிமைகளுக்குத்தான் ‘அம்மாவிடம்’ விசுவாசம் ஜாஸ்தி!
அந்த விசுவாசத்தை அடுத்து விளக்குகிறார் வைத்தி. சொத்துக் குவிப்பு வழக்கை 2 கோணங்களில் அணுக வேண்டுமாம். கோணம் ஒன்றின் படி, பொது வாழ்க்கையில் இருப்போர் நேர்மை, தூய்மை கடைபிடித்து சட்டத்தின் முன் சமமாக பார்க்கப்பட்டு, தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டுமாம். இதை தார்மீக கோணம் என்று யாருக்கும் நோகாமல் வகுப்பெடுக்கிறார் வைத்தி.
ஒருக்கால் இதன் உள்ளர்த்தம் பிடிபடாமல், அம்மாவை ‘கண்டிக்கிறாரோ’ என்று சந்தேகம் வந்தால் அடுத்து தெளிவாக்குகிறார். அதாவது இந்த வழக்கின் இறுதி முடிவு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தோடு முடியாதாம். உயர்-உச்சம் என்று டெல்லி வரை தீர்ப்பு வந்தால்தான் ஐயா கருத்து சொல்வாராம். ஒரு சாதாரண கீழ் கோர்ட்டு சொல்வதையெல்லாம் உயர்தரமான அறிஞர்கள் ஏற்பது அபச்சாரமில்லையா?
கீழ் கோர்ட்டை விடுங்கள், போலிசு ஒரு அப்பாவி முசுலீமை கைது செய்து பாக் சதி, ஐ.எஸ்.ஐ பீதி என்று சரடு விடும் போது இதே உச்சநீதிமன்ற அணுகுமுறையை கடைபிடிக்காமல் ஏட்டையாவின் எஃப்.ஐ.ஆர் கதையை ஏற்பது ஏன்? அல்லது ராஜபக்சேதான் சட்டப்படி குற்றவாளி என்று எங்காவது நிரூபிக்கப்பட்டிருக்கிறாரா? ஒரே குற்றத்திற்கு அவாளுக்கு பரிகாரம், மற்றவாளுக்கு தண்டனையென்ற நீதி மனுவின் காலத்தில் மட்டுமல்ல தினமணியின் தலையங்க ‘காலத்திலும்’ நீடிக்கிறது.
ஒருக்கால் உச்சநீதிமன்றமும் அப்படி முடிவெடுத்து விட்டால் என்ன செய்வது? அதையும் முன்யூகித்து இப்போதே தீர்ப்பை எழுதிவிட்டார் ஆசிரியர் வைத்தி. அதாவது குற்றங்கள் மிகைப்படுத்தப்பட்டு, சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டு, ஜெயாவின் அரசியல் வாழ்க்கையை முடிக்கும் முனைப்புடன் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாக ஜெயா தரப்பு வழக்கறிஞர்கள் கூறுவதை தள்ளிவிட முடியாதாம். இதயத்தில் உணர்ச்சியாகவும், சட்டைப் பையில் கருத்தாகவும் வைத்திருக்கும் இந்த நீதியை இவர் தள்ளுவார் என்று டாஸ்மாக்கில் தள்ளாடும் குடிமகன் கூட நம்பமாட்டானே?
அதாவது இந்த பொய்வழக்கின் செட்டப்புகளை நம்புமாறு நீதிபதி குன்ஹா நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். இல்லையென்றால் இப்படியொரு தீர்ப்பை எழுதும் நிலைக்கு அவர் வந்திருக்கமாட்டார். எந்த நீதிபதியாவது, “இந்த வழக்கில் குற்றவாளி குற்றம் செய்யவில்லை. ஆனால் சாட்சியங்கள், சூழல் காரணமாக அவர் குற்றம் செய்திருப்பார் என்று சொல்லியாக வேண்டியிருக்கிறது. அந்த சாட்சியங்களை பொய் சாட்சியங்கள் என்று விசாரித்து நிரூபிப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை. ஆகவே தண்டனை அளிக்கிறேன்” என்று சொல்லுவாரா?
இப்படி பினாத்துவதற்கு பதில் “எந்த விசாரணைக்கும் அப்பாற்ட்டவர் ஜெயா” என்று நேரடியாக சொல்லலாமே? இன்னும் சில நாட்களில் தீர்ப்பு மற்றும் தண்டனை மீது தடையுத்தரவு பெற்று பிணையில் ஜெயா வந்து விடுவார் என்று வைத்தி எதிர்பார்க்கிறாராம். ‘அம்மாவிற்கு’ வந்த சோதனைக்காலம் சடுதியில் போய்விடும் என்று இடுப்பொடிய வணங்கும் அதிமுக அடிமைகளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறாராம்.
ஒரு சிலநாட்களில் ஜெயா வந்துவிடுவார் என்று பெரிய அப்பாடக்கர் போல லா பாயிண்டு எடுத்து விடும் வைத்தி, இந்த வழக்கை 18 ஆண்டுகளாக வாய்தா ராணி பட்டமே வாங்கி இழுத்து இழுத்து நீதித்துறையை சித்ரவதை செய்ததை என்ன சொல்வார்? ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஒரு அப்பாவிப் பெண்ணின் உரிமைப் போராட்டம் என்று கவி பாடுவாரா?
ஒருக்கால் ஜெயா பிணையில் வந்தாலும், ஓபியின் தண்டனைக்கு பிணை இல்லை. அதனால் முதலமைச்சர் பதவியில் அம்மா அமர முடியாது. கட்சித் தலைவராக இருந்து கொண்டு அவரது வழிகாட்டுதலின் படி ஓ. பன்னீர் செல்வத்தின் மூலம் ஆட்சி நடத்தியாக வேண்டும் என்று புலம்புகிறார். நன்றாக கவனியுங்கள், ஓபி மூலம் ஆட்சி நடத்த வேண்டும் என்று இதே வைத்தி தனது கைப்பட எழுதியிருக்கிறார் என்றால் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி என்று இவர்கள் சோனியாவை கேள்வி கேட்டதும், மன்மோகனை கேலி செய்ததும் என்னய்யா நியாயம்?
ஆக, ஒரு குற்றவாளி குற்றம் செய்து பதவி இழந்து ஒரு அடிமை மூலம் ஆட்சி நடத்தலாம் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் எழுதுகிறார் என்றால் அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்குமா, பாசிசம் பூக்குமா?
அடுத்து, ஜெயாவின் இந்த விதிவசத்தால் மற்ற எதிர்க்கட்சிகளுக்கு பயனேதும் இல்லை, அதிமுகவிற்கு இது எந்த பின்னடைவையும் ஏற்படுத்தி விடாது என்று ஜால்ராவையே மாபெரும் அரசியல் ஆய்வாக முன்வைக்கிறார் வைத்தி.
சோற்றில் உப்பு போட்டு தின்பவராக இருந்தால், ஒரு ஊழல் குற்றவாளி தண்டிக்கப்பட்டிருந்தாலும் அந்த கட்சி, ஆட்சியை எதிர்த்து மக்களிடம் அரசியல் இயக்கம் நடத்த ஒரு எதிர்க்கட்சிக்கும் துப்பில்லை என்றாவது எழுதியிருக்க வேண்டும். போயஸ் தோட்டத்தின் வாயிற் கதவு அம்மாவுக்கு எதிரானவர்களை உள்ளே விடாதது போல வைத்தியின் மூளையிலும் அம்மாவுக்கு எதிரான எதுவும் இல்லை.
போபர்ஸ், 2ஜி, நிலக்கரி போன்ற பல லட்சம் கோடி ஊழல் வழக்குகளோடு ஒப்பிட்டால் இந்த 66 கோடி ஒரு பொருட்டே இல்லை என்று பொதுமக்கள் நினைப்பதால் ஜெயாவுக்கு அனுதாப அலை பொங்கி வழிகிறதாம். அதனால் மேல் முறையீட்டில் விடுவிக்கப்பட்டு அடுத்த முதல்வராகி, கருணாநிதி போல 5 முறை முதல்வராக இருக்கும் சாதனையை சமன் செய்வார் ஜெயா என்று ஆசீர்வாதமும் செய்கிறார் வைத்தி. ஜெயா சசி கும்பலின் இன்றைய சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடியில்லையா? தேர்தல் செலவுகளுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை அதிமுக பெற்றது ஏழை தொண்டனிடம் பெற்ற நன்கொடையிலா?
பரப்பன அக்ரஹாரத்தில் அமர்ந்து கொண்டு கட்சிக்காரர்களையும், ஓபி போன்ற ஸ்பெசல் அடிமைகளையும் தவிர்த்துவிட்டு அவருக்கு வழங்கப்படும் நாளிதழ்களை ஜெயா படிக்கிறாராம்.
அந்த நாளிதழ்களில் தினமணி கண்டிப்பாக இருக்கும். அம்மாவுக்கு எது நல்லதோ அதுவே உண்மையின் உரைகல் என்று வைத்தி விதி வைத்திருக்கும் போது, விதி வசத்தால் ஓபிக்கு போட்டியாக இவரே உருவெடுக்கலாம். vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக