புதன், 15 அக்டோபர், 2014

பக்தர்களே தீட்சிதன் தட்டில் காசு போடாதீர்கள்!

hundialசென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 2009–ல்தான் இந்து அறநிலையத்துறை சிதம்பரம் நடராசர் கோவிலில் முதன் முதலாக ஒன்பது உண்டியல்களை வைத்தது. அதற்கு முன்பு வரை தீட்சிதர்கள் உண்டியல் வைக்கவில்லை. தற்போது 2014–ல் உச்சநீதிமன்ற தீர்ப்பு தீட்சிதர்களுக்கு சாதகமாக வந்து விட்டது என இந்து அறநிலையத்துறை உண்டியலை அகற்றி உள்ளது. மேலும் இது வரை உண்டியல் மூலம் வசூலான தொகை ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றையும் தீட்சிதர்களிடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. அதற்காக அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டு தீட்சிதர்களின் கொள்ளையை சட்டபூர்வமாக்கியிருக்கிறது அம்மா அரசு..
தமிழ்பாடும் உரிமை போராட்டத்தை தொடர்ந்து தீட்சிதர்களின் தனிச் சொத்தாக இருந்த சிதம்பரம் நடராசர் கோவிலை 2009–ல் இந்து அறநிலையத்துறை ஏற்க வைத்தோம்.
இதற்காக பல ஆண்டுகள் இடைவிடாமல் நாம் நடத்திய மக்கள் போராட்டம், நீதிமன்ற போராட்டம் எண்ணிலடங்கா.
‘சிதம்பரம் நடராசர் கோவிலின் ஆண்டு வருமானம் ரூ 30,000 அதில் செலவு போக கையிறுப்பு 199 ரூபாய் மட்டுமே’ என பொய்க் கணக்கு காட்டி விட்டு கோவிலில் வருமானம் முழுவதையும் தீட்சிதர்களே தங்களுக்குள் ஏலம் விட்டு பங்கு பிரித்து கொண்டனர். கோவிலை பராமரிக்கவோ, பக்தர்களுக்கு வசதி செய்து கொடுக்கவோ இல்லை. அறநிலையத்துறை ஏற்ற பிறகுதான் ஆணையரின் பொது நிதியில் இருந்து ரூ 25 லட்சத்திற்கு ஹைமாஸ் லைட் போட்டார்கள். அது வரை சிதம்பரம் கோவில் இருட்டில்தான் இருந்தது. இந்த சூழலில் 5 ஆண்டுகளாக தில்லை நடராசனுக்காக பக்தர்கள் கொடுத்த கோடிக்கணக்கான ரூபாய் உண்டியல் காணிக்கையை தீட்சிதர்களின் சொத்தாக இன்று தாரை வார்த்திருக்கிறது அறநிலையத்துறை.
தீட்சிதர்கள் கோவில் வருமானத்தை வைத்து மது, மாமிசம், மங்கை என உல்லாச பேர்வழிகளாக இருந்தனர். அதற்கு கோவிலை பயன்படுத்தி வந்தனர் என்பதை நேரடியாக மக்கள் மத்தியில் பேசினோம். கோவில் சொத்தை விற்றதற்கு தீட்சிதர்கள் மீது கிரிமினல் வழக்கு, கோவிலில் நடந்த கொலைக்கு கிரிமினல் வழக்கு என நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உத்திரவு பெற்றோம். காவல்துறை மூலம் தீட்சிதர்கள் அதை முடக்கி விட்டனர்.
தில்லை கோயிலை தீட்சிதர்களுக்கு தாரை வார்க்கும் தமிழக அரசு உத்தரவு
[அரசு ஆணையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]
“2009 –ல் சிதம்பரம் நடராசர் கோவிலை அறநிலையத்துறை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என நீதியரசர் பானுமதி தீர்ப்பளித்தார். 2014 ஜனவரி மாதம் தற்போதைய தீர்ப்பு வரும் வரை தீட்சிதர்கள் கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவில்லை. மாறாக, தீட்சிதர்கள் வட இந்தியாவிலிருந்து விஸ்வ ஹிந்து பரிஷத்  தலைவர் அசோக் சிங்காலை காவிக் கொடியுடன் சிதம்பரம் கோவிலுக்குள் அழைத்து வந்து கூட்டம் போட்டார்கள். சுப்பிரமணிசாமியை அழைத்து வந்து சிறப்பு பூசை நடத்தினார்கள். அன்றைய எதிர்க்கட்சி தலைவர் அம்மாவிடம் சென்று முறையிட்டார்கள். இந்து ஆலயபாது காப்பு குழு என உருவாக்கி பிராமண சங்கத் தலைவர்களை அழைத்து பொதுக் கூட்டம் நடத்தினார்கள்.
சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் கோவில் வழக்கை தனது சொந்த வழக்காக கருதி வாதாடினார். ஜெயாவின் தமிழக அரசோ தீட்சிதர்களுக்கு சாதகமாக செயல்பட்டு, அரசுத் தரப்பை வாதாடாமல் இருந்தார். அதன் விளைவாக, இன்று கொத்துச் சாவியை மீண்டும் கொள்ளையர்கள் கையில் கொடுத்த நிலைதான். சட்டம், நீதிமன்றம், அறநிலையத்துறை, அரசு, அரசியல்வாதிகள் ஏன் தில்லை நடராசன் என அனைத்தும் அவாளாக இருக்கும்போது இப்படிதான் நடக்கும்.
இனி உண்டியல் இல்லை, அர்ச்சனை சீட்டு இல்லை, பக்தர்கள் சிற்றம்பலம் ஏறி நடராசனை தரிசிக்க, ஆம்னி பஸ், தனியார் பள்ளிகள் போல் கட்டணக் கொள்ளையை தீட்சிதர்கள் ஏற்றிக் கொண்டே வருவார்கள். சுருட்டு சாமியார், பீர்சாமியார், சவுக்கு சாமியார், தீவட்டி சாமியார் என பக்தர்களை ஆயிரங்களில் ஏமாற்றும் கிரிமினல்கள் போல் பலவித பரிகார யாகங்களை நடத்த பல லட்சங்களை வசூலிக்கும் நிறுவனமாக தில்லை நடராசனை, பாரம்பரியமிக்க கோவிலை தீட்சிதர்கள் பயன்படுத்தப் போகிறார்கள்.
கனிமவளம், ஆற்று மணல் போல சிதம்பரம் நடராசர் கோவிலும் ஒரு பொதுச் சொத்து.  இயற்கை வள கொள்ளைக்கு எதிராக போராடுவதுபோல் சிதம்பரம் கோவில் சொத்தின் கொள்ளைக்கு எதிராகவும் போராட வேண்டும்.
பக்தர்களே நீங்கள் இறைவனின் பக்தர்களா? தீட்சிதனின் அடிமைகளா? கோவில் ஆகம விதி வெங்காயம் என்பதெல்லாம் பொய், உண்டியல் பணம் மட்டும் உண்மை என்று பச்சையாக தெரியவில்லையா?
தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றி கோவிலை எடுத்துக் கொள்ள முடியும். கோவில் சொத்தை, சாமி நகையை கொள்ளையடித்த தீட்சிதர்கள் மீதான வழக்கை விசாரிக்க முடியும். ஆனால் அரசு செய்யமறுக்கிறது.
நாம் விடக்கூடாது ஏனென்றால் சிதம்பரம் நடராசர் கோவில் மக்கள் சொத்து, நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடவேண்டும்.
பக்தர்களே தீட்சிதன் தட்டில் காசு போடாதீர்கள்!
எடுத்த உண்டியல் தானாக வரும்!.
CDM-Hundial-poster
மனித உரிமை பாது காப்பு மையம்-கடலூர் மாவட்டம் vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக