புதன், 15 அக்டோபர், 2014

ஜெயலலிதா அறைக்கு ஏ.சி பொருத்துவதற்காக என்னை வரச் சொன்னார்கள் !

கடந்த திங்கள்கிழமை மதியம் 3 மணியளவில் பரப்பன அக்ரஹாரா பஸ் ஸ்டாப்பில் புதிய ஸ்பிளிட் ஏ.சி-யுடன் ஒருவர், யாரையோ செல்லில் தொடர்புகொள்ள முயற்சித்தபடி இருந்தார். அவரிடம் விசாரித்தபோது, பெங்களூரு டேனரி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஏ.சி  பொருத்தும் நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், தன்னுடைய பெயர் ஷெரிஃப் என்றும் சொன்னார். அடுத்து அவர் சொன்னதுதான் அதிர்ச்சி ரகம். ''தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வைத்திருக்கும் அறைக்கு ஏ.சி பொருத்துவதற்காக என்னை வரச் சொன்னார்கள். நேற்றே அந்த அறையைப் பார்வையிட அழைத்துச் சென்றார்கள். இன்றைக்கு வந்து ஏ.சி பொருத்தித் தருமாறு சிறையில் உள்ள அசிஸ்டென்ட் இன்ஜினீயர் ஜெயராமன் சொன்னார். அதற்காகத்தான் வந்தேன். இப்போது போன் செய்தால் அவருக்கு கால் போகலை!'' என்றவரிடம், ''நேற்றைக்கு நீங்கள் சென்றபோது அந்த அறையில் யார் இருந்தார்கள்... அது தனி அறையா? உள்ளே என்னென்ன வசதிகள் இருக்கின்றன?'' என்று கேட்டோம்.
''அது கைதிகளுக்கான அறை இல்லை. பெண்கள் சிறையில் உள்ள ஒரு மருத்துவமனை கட்டடம். அதில் உள்ள ஓர் அறையில்தான் ஜெயலலிதா உள்ளிட்ட மூன்று பேர்களும் இருக்கிறார்கள். மூவருக்கும் தனித்தனி கட்டில்கள் மெத்தையுடன் போடப்பட்டிருக்கின்றன. ஒரு டேபிள், ஒரு சேர் இருக்கிறது. அதில் உட்கார்ந்தபடிதான் ஜெயலலிதா புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கிறார்.
அவர் டேபிள் மீது  நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அப்புறம் ஒரு டி.வி  இருக்கிறது. அதில் தூர்தர்ஷன் சேனல்தான் ஓடியது. அந்த அறையில் ஏர்கூலர் இருந்தது. அது போதுமானதாக இல்லையென்றுதான் ஸ்பிளிட் ஏ.சி பொருத்தச் சொல்லியிருக்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டு நகர்ந்துகொண்டார் ஷெரிஃப்.
''ஜெயலலிதா, கைதிகளுக்கான சிறையில் அடைக்கப்பட்டால் இதுமாதிரியான வசதிகளை செய்து தரமுடியாது என்பதால்தான் அவரை மருத்துவமனை அறையில் தங்கவைக்கப்பட்டு அங்கு ஏ.சி பொருத்தும் வேலைகள் நடக்கிறது'' என்கிறார்கள் சிறை வட்டாரத்தில். vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக