புதன், 8 அக்டோபர், 2014

கலையரசன். மெட்ராஸின் உண்மையான அடையாளமே வடசென்னை தான் !

மெட்ராசின் ‘அன்பு’மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை நெருக்கமாக பதிவு செய்த இயக்குனர் பா.ரஞ்சித் குழுவின் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் அன்பு கதாபாத்திரம்....சினிமா மரபுகளை உடைத்த ஓர் யதார்த்த பதிவு.. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழிடங்கள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் ஏதோ ஓர் அன்பு வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்... அந்த அன்பின் முகம் எப்படி இருக்கும்?அவரின் சிந்தனை என்னவாக இருக்கும்?அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?அத்தனை கேள்விகளுக்கும்  விடையாக நம் முன் காட்சிப்படுபவர் தான் ‘அன்புவாக’ வாழ்ந்த கலையரசன்.



திரைப்படத்தில் இறந்துவிட்டாலும் எல்லோர் நெஞ்சிலும் மண்ட்டோவின் வரிகளைப் போல குடியிருக்கும் ‘அன்பு’வை தேடி நக்கீரன் இணையதளத்திற்காக பயணித்தோம்....’.’தல’ எங்கயும் போவேணாம்....நானே சேலம் வரேன்....எங்க மாமனார் வீடு அங்கதான் இருக்கு’ அக்மார்க் சென்னை இளைஞனாகவே பேசினார் கலையரசன்.... சேலத்தில் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளக்ஸ் திரையரங்கில் மனைவியோடு படம் பார்த்தவரை ரசிகர்கள் சூழ,அனைவரிடமும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

‘அன்பு சிங்கிள் பன்ச்தான்’... எங்கிட்டயும் படம் எடுக்கணும்’ பொடுசுகள் அதார் விட ‘தல கோச்சுகாத தல’ என்றபடியே அவர்களிடமும் செல்பி எடுத்துகொண்டார் கலை... இந்த எளிமையும்,அன்யோன்யமும் தான் மெட்ராசின் வெற்றி...’அன்பு’வின் வெற்றி...அத்தனையையும் ரசித்துவிட்ட நாம் அன்புவாகவே வாழ்ந்த கலையின் மாமனாரின் வீட்டு மொட்டைமாடியில் ஆஜராணோம். ‘கேளு தல’ வெகு இயல்பாக அவரே தொடங்கினார்...

அன்புவாகவே வாழ்ந்துருக்கிறீர்களே?

 எல்லா புகழும் ரஞ்சித் அண்ணனையே சேரும்... அவர்தான் கலையை அன்பாக மாற்றியவர்.உயிர் கொடுத்து வாழவைத்த அம்மா  அவர்.எனக்கு முதலிலேயே கதை சொல்லி அந்த சூழலை விளக்கி என்னை அன்புவாக மனதில் பதிய வைத்தார்..அதேசமயம் நானும் சென்னைக்காரன்தாங்க... அந்த உணர்வும் சேர்ந்ததால் என்னால் இயல்பாக அந்த கதாபாத்திரத்தில் இயங்க முடிந்தது


ஓ! அதுசரி அப்போ உங்க குடும்ப பின்னணி பற்றி சொல்லுங்க”?

 அப்பா அரிகிருஷ்ணன்  பெல்-ல வொர்க் பண்றாரு. திருவொற்றியூர். அம்மா தமிழ்மணி இல்லத்தரசி.சென்னை ராமாபுரத்துல தான் பொறந்து வளர்ந்தது எல்லாம். அண்ணன் ராஜ்குமார் வெளிநாட்டுல இருக்கார். நான் எஸ்.ஆர்.எம்-ல பி.சி.ஏ. முடிச்சேன்....

எப்படி இந்த துறையை தேர்ந்தெடுத்தீர்?

 கல்லூரி காலத்துல டான்ஸ் கிளாஸ் போவேன்.போட்டிகளில் கலந்துருக்கேன். ஜெயிச்சுருக்கேன். என் நண்பர்கள் தான் ‘மச்சான் திறமை இருக்கு நீ சினிமாவுக்கு போன்னு’ சொன்னாங்க. எனக்கும் அந்த ஆர்வம் இருந்தது. தொடக்கத்துல கனா காணும் காலங்கள் சீரியல்ல முதல் ரவுண்டுல ஜெயிச்சு இரண்டாவது ரவுண்டுல தோற்றுட்டேன். அப்புறம் ஒரேயடியா சினிமாவுலேயே வாய்ப்பு தேடலாம் என முயற்சித்தேன். அது வீண் போகலை. 

அர்ஜுனன் காதலி-ன்னு ஒரு படம். ஜெய்-க்கு நண்பரா வரும் கதாபாத்திரம்.ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகலை. அதன்பின் மிஷ்கின் சார்கிட்ட வாய்ப்பு கிடைச்சது. நந்தலாலா,முகமூடியில நடிச்சேன். அப்புறம் ரஞ்சித் அண்ணன் பழக்கமாகி அவர் அட்டகத்தியில வாய்ப்பு கொடுத்தார். அதுக்கப்புறம் ஒருநாள் திடீர்னு கூப்பிட்டு மெட்ராஸ்-ல முக்கியமான ரோல்ன்னு கொடுத்தாரு. அது இவ்ளோ பெரிய தாக்கம் தரும் என சத்தியமா அப்போ தெரியல. எல்லாமே எங்க ரஞ்சித் அண்ணனை தான் சாரும்... மெட்ராஸ் கமிட் ஆனபின் தான் மதயானை கூட்டம் ரிலீஸ் ஆனது. அதுலயும் நல்ல பேர் கிடைச்சது...

மிகப்பெரிய இயக்குனர்களின் படத்தில் நடித்துள்ளீர்.மிஷ்கின்-ரஞ்சித் இரண்டு ஆளுமைகளை ஒப்பிடுங்க?

 அந்தளவு நான் பெரிய ஆள் இல்லைங்க தல... ஆனா இருவரிடமும் வேலை பார்த்த அனுபவத்தை சொல்றேன். மிஷ்கின் சார் ரொம்ப கண்டிப்பானவர். அவர் படத்தில் அவ்ளோ டெடிகேட்டா இருப்பாரு. சின்ன சின்ன விசயத்துல கூட ரொம்ப கவனமா இருப்பாரு. தவறு நடந்தா கடிஞ்சுகுவாரு. ஆனா ஷாட் முடிஞ்சு நல்லா வந்ததும் கூப்பிட்டு பாராட்டுவாரு. எல்லோரையும் மதிக்கக்கூடியவர். அதனாலேயே அவர் மீது அளவு கடந்த மதிப்பு உண்டு...

ரஞ்சித் அவர்களை பொறுத்தவரை அவரை நான் இயக்குனரா பார்க்கலை. சொந்த அண்ணனா பார்க்கிறேன். எனக்கு மிக பெரிய ப்ரேக் தராம போயிருந்தாலும் கூட அவர் எனக்கு அண்ணன் தான். அந்தளவு நல்ல மனிதர். எல்லோரையுமே சமமா மதிப்பாரு. டீ வாங்கிட்டு வர்ற பையன்ல இருந்து பெரிய நடிகர் வரை எல்லோரையுமே ஒரேமாதிரி தான் ட்ரீட் பண்ணுவாரு. மனுசங்கள்ல உயர்வு தாழ்வே கிடையாதுன்னு சொல்வாரு. 

அவரு கோபப்பட்டு பார்த்ததில்ல. அப்படி கோப்பட்டாலும் ஒரு பார்வை பார்ப்பாரு அவ்ளோதான். ஏதும் திட்ட மாட்டாரு. மெட்ராஸ் எடுக்கும்போதே ஒரே டேக்ல கலக்கினவரு ஜானி கேரக்ட்டர் தான். ஆனா நான் நிறைய சொதப்பினேன். ஆனா என்னை சொல்லிகொடுத்து மெருகேற்றினார் ரஞ்சித் அண்ணன். அவரின் உழைப்பு தான் இன்னைக்கு எனக்கு ஒரு நல்ல அடையாளத்தை தந்துள்ளது. காலத்துக்கும் மறக்கமுடியாத என் அண்ணன் ரஞ்சித். எங்களை போன்று வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு அவர் ஒரு காட் பாதர்... 


மிகப்பெரிய நடிகரான கார்த்திக்குடன் நடிச்சுருக்கீங்க... இன்னும் சொல்லப்போனால் ஹீரோவுக்கு இணையான வேடம் உங்களுக்கு... அதை கார்த்திக் எப்படி எடுத்துகொண்டார்?

 ரஞ்சித் அண்ணன் எப்படி எனக்கு அவ்ளோ முக்கியமோ அதேபோல  மரியாதைக்குரியவர் கார்த்திக் சார். தொடக்கத்துல பெரிய நடிகர் எப்படி நம்மள ட்ரீட் பன்னுவாருனு யூனிட்ல பயந்தோம். ஆனா கொஞ்சமும் பந்தா இல்லாம பழகினாரு.’நான் கார்த்திக் கிடையாது... உங்க காளின்னு’ சொல்லி முதல் நாளே எங்களை அவரில் ஒருத்தரா ஏத்துகிட்டாரு. எல்லார்கிட்டயும் பிரண்டு போல பழகினாரு. அவர நாங்க கேரவன்ல பார்த்ததே இல்லை. அவர் சீன்ஸ் இல்லைனாலும் வெளிய தான் எங்களோடு இருப்பாரு. மெட்ராசை அந்தளவு நேசித்தாரு. சினிமால ‘சஜ்ஜசன் ஷாட்’ அதாவது ‘பாய்ன்ட் ஆப் வியூ ஷாட்’ னு இருக்கும். நாம டைலாக் பேசுறப்போ எதிர்ல இருக்குற கேரக்டர் பேசுற மாதிரி முன்னாடி நின்னு துணை இயக்குனர்கள் பேசுவாங்க.... அது ஓகே ஆனா தான் அடுத்து ரியல் ஷாட்க்கு போவாங்க. அப்படிப்பட்ட பாய்ன்ட் ஆப் வியூ ஷாட்ல கூட கார்த்திக் சாரே எனக்கு எதிர்ல இருந்து டைலாக் பேசி என்னை ஊக்கப்படுத்தினாரு. சொல்லிக்கொடுத்தாரு. 

ரெண்டு மூணு டேக் போனாலும் பொறுமையா வெயிட் பண்ணுவாரு. கோபமே படமாட்டாரு. எனக்கு தெரிஞ்சு கோ-ஆர்டிஸ்ட்க்கு இப்படி சப்போர்ட் பண்ணி ஒருத்தர பார்த்ததில்லை. அதேபோல டெடிகேட்டட்டான நடிகர். நான் இறந்து போன சீன் எடுக்குற மூணு நாள் முன்னாடி இருந்து என்னை பார்க்கவே இல்லை. நேர்ல பார்த்தாலும் திரும்பிட்டு போய்ட்டாரு. யார்கிட்டயும் பேசலை. மூணு நாளும் சாப்பிடாம இருந்தாரு...அப்படி இருந்துதான் அந்த இறந்த காட்சியில் வரும் ‘இறந்திடவா’ பாட்டுக்கு உயிர் கொடுத்தாரு.. சச்ச பியூட்டிபுல் பெர்சனாலிட்டி.... ஹியூமன் பீயிங்......

கார்த்திக் அவர்களே உயர்ந்து பாராட்டிய விஷயம் ஒளிப்பதிவு... ஒளிப்பதிவாளர் முரளி பற்றி?

 முரளி சார் இல்லைனா நாங்கலாம் இவ்ளோ லைவ்வா மக்கள் முன் தெரிஞ்சுருக்க முடியாது. அவர் குறும்படம் எடுத்ததில் தேசிய விருது வாங்கியவர். அற்புதமான ஒளிப்பதிவாளர். பல ஷாட்ஸ்ல டைலாக் இல்லாமலே அந்த மூடை படத்தில் கொண்டு வந்த பெருமை முரளி சாரைதான் சேரும். கார்த்திக் சார்க்கு காதல் வந்ததும் அந்த காட்சியில டைலாக்ல சொல்லவேண்டிய விஷயத்தை இவர் ஒளிப்பதிவே சொல்லியிருக்கும். அதேபோல வடசென்னை எப்படியிருக்கும்னு அப்படியே கண் முன் கொண்டு வந்தவர். அவரோட கலர் சென்ஸ் பார்த்தாலே தெரியும்.

மெட்ராஸ் வெற்றியில் உங்க பங்கே அதிகம்னு சொல்லலாமா?

 தல இது தப்பு தல. அப்படியில்லை. எல்லோரின் கூட்டு முயற்சிதான் வெற்றியை தந்தது. முதல் காட்சியில் உயிர் விடும் அம்பேத் அண்ணன் தொட்டு ஜானி, டேன்ஸ் பாய்ஸ் எல்லோருக்குமே அழுத்தமான கதாப்பாத்திரம் தான். அவங்கல்லாம் இல்லைனா படம் இல்லை. துணை இயக்குனர்களின் பங்களிப்பெல்லாம் மறுக்க முடியாதது. எல்லோருக்கும் சமமா கதாபாத்திரம் கொடுத்து படத்தை கேப்டனாக இருந்து வெற்றிபெற வைத்தவர் அண்ணன் ரஞ்சித்தும், மக்களும் தான்.

மெட்ராஸின் உண்மையான அடையாளமே வடசென்னை தான். அம்மக்கள் உங்கள் குழுவிடம் எப்படி பழகினார்கள்?

 அத சொல்ல வார்த்தைகளே இல்லைங்க. இப்படி ஒரு அன்பான மக்களை நான் பார்த்ததே இல்லை. பெரம்பூர் ஜமாலியா காலனி, ரமணா நகர், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர்னு 70 நாள் அங்கேயே வாழ்ந்தோம். எங்கள அவங்க வீட்ல விட்டுட்டு அவங்க பக்கத்து வீட்ல, இல்லைனா தெருவுல ஒரு பாயை விரிச்சு போட்டுட்டு படுத்துப்பாங்க.’பரவாலைங்கம்மா ஷாட் முடிஞ்சுடும் உள்ள வந்து படுத்துக்கலாம்’னு சொல்வோம். அவங்களோ ‘அட எங்களை பாக்காதிங்க தம்பி. எங்களை பார்த்துகிட்டு அவசர அவசரமா எடுக்காதிங்க. படம் நல்லா வரணும் பொறுமையா எடுங்க....’ன்னு சொன்னாங்க. இப்படி ஒரு அன்பு யார் தருவா? ஷூட்டிங் முடிஞ்சு திரும்பி வரும்போது அம்மக்களை விட்டு பிரியும்போது கண்கலங்கினர். எங்கள் கண்களும் தான் கிளிசரின் போடாமலே கலங்கியது.


அவர் உணர்ச்சிவசப்பட இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக ‘என்னங்க உங்களுக்கும் உங்கள் மனைவியாக நடித்த ரித்விக்கும் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், ஜாக்ரபி... எல்லாமே வொர்க் அவுட் ஆனது போல?’ என்றோம் வம்பிழுக்க...

 ‘தல பார்த்திங்களா உங்க வேலைய காட்டுறிங்களே. அந்த பொண்ணு எனக்கு நல்ல பிரன்ட். பரதேசி படத்தில் நடித்து ஏற்கனவே நல்ல பேர் எடுத்தவங்க’எனும்போதே அவர் மனைவி ப்ரியா ஸ்நாக்ஸ் கொண்டு வந்தார். அப்போது ஒரே ஒரு பார்வை கலையை பார்த்ததுதான் மனிதர் உடனே ‘தல அந்த பொண்ணு மட்டுமல்ல எல்லோருமே நல்ல பிரண்ட்ஸ் தான். நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்’என்றார் நம்ம வடிவேலு போல....

‘மாப்பிள்ளை பயப்படாதிங்க.... அதெல்லாம் கண்டுக்ககூடாது’ என நமக்கு டீ கொடுத்தபடியே பேசினார் மாமனார் சங்கர்.

உள்ளே இருந்து ‘என்ன அங்க சத்தம்?’என அவர் மனைவி பானு கேட்க ‘சும்மா பேசிகிட்டு இருந்தேன்மா ‘அவ்வவ்....’என்றார் அவரும் வடிவேலு போல...

 இறுக்கமான சூழல் களையவும் கலையே தொடர்ந்தார். ‘என் மனைவி ப்ரியா பற்றி சொல்லியே ஆகணும்ங்க...அவ இல்லைனா நான் இல்லை. எச்.சி.எல்-ல வேலை பார்த்துகிட்டு இருந்தபோது தான் பார்த்தேன்.’யார்டா இந்த தேவதைன்னு’ நினச்சேன். டேன்ஸ் போட்டியில ஜெயிக்கவும் தேடி வந்து கை கொடுத்து வாழ்த்தினாங்க. ஒரு பட்டாம்பூச்சி உரசின மாதிரி இருந்தது(அடடா இந்த காதல் வந்துட்டாலே நம்மாளுங்க கவிஞர் ஆகிடுறாங்களே...ஸ்ஸ்ஸ்சப்பா...இப்போவே கண்ண கட்டுதே...) அப்புறம் நான் தான் ப்ரோபோஸ் செஞ்சேன் ஏத்துகிட்டாங்க.

இன்டர்-கேஸ்ட் மேரேஜ். பெரிய எதிர்ப்பெல்லாம் இல்லை. எங்க அண்ணன் தான் முன்ன இருந்து நடத்தி வைத்தார். நான் வேலையை விட்டுட்டு முழு நேரமா சினிமால ட்ரை பண்ணியபோது இரவு பகல் பார்க்காமல் வேலைக்கு போய் நல்லபடியா எங்கள பார்த்துக்கிட்டது என் ப்ரியா தான். இப்போ வேலையை விட்ரு கஷ்டபடாதன்னு சொன்னாலும் ‘இன்னும் நீங்க நிரந்தர இடம் பிடிக்கிற வரை வேலைக்கு போறேங்க வீட்டு டென்சன் இல்லாம நீங்க லட்சியத்தை அடையுங்க’ன்னு சொல்றாள். அவ என்னோட பொக்கிஷம்...(உருகினார்) எங்கள் காதலின் சாட்சி தான் எங்க செல்லக்குட்டி பாப்பா அதித்தி யாழினி’என்றார் குழந்தைக்கு முத்தமிட்டபடி.

‘ஏங்க எனக்கு?’ என ப்ரியா கன்னத்தை காட்ட ‘ச்சீ.....’வெட்கத்தில் சினுங்கினர் இருவரும்... 


இந்த கவிதையில் லயித்த மகிழ்ச்சியோடே இறுதி கேள்வியொன்றை கேட்டோம்... ‘உங்கள் லட்சியம் என்ன?

 எந்த கதாபாத்திரம் என்றாலும் கலையால் நடிக்க முடியும்னு இயக்குனருக்கு நம்பிக்கை தரும் ஆர்டிஸ்டா நான் இருக்கணும். அடுத்து வர இருக்கும் உறுமீன் படம் அப்படிப்பட்டது தான்...’என்றவர் ‘என் மீது அன்பு காட்டிய அத்தனை மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்’ என்றார் அடக்கத்தோடு.

“படச்சுருள் தகரப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் வரை ஒரு உயிரற்ற பொருள்.இது மக்களுக்கு முன்பாக திரையரங்குகளிலே உயிர் பெறுகிறது” என்கிறார் முதுபெரும் படைப்பாளி சத்யதிஜ்ரே...அப்படி ‘மெட்ராஸ்’க்கு உயிர் கொடுத்துள்ளனர் சர்வதேசமெங்கும் நிரம்பியுள்ள மக்கள். அவரே தொடர்ந்து “ஒரு பரந்துப்பட்ட மக்களுக்கு சொல்ல வேண்டியதை ஏற்ற முறையில் எதனையும் இழந்துவிடாமல்,கலைஞர்கள் வழியாக நிகழ்வுகளை அடுக்கி செயலுருவாக்கிக் காட்டுவதே திரைப்படத்தின் வரலாறாகும்” என திரைப்பட இலக்கணத்தை விளக்குகிறார். 

மக்களின் வரலாறாக மாறிய மெட்ராஸிற்கு உயிர் கொடுத்ததில் ‘அன்பு’வாக வாழ்ந்த ‘கலையரசனின்’ பங்கு அளப்பரியது. சமூகம் உங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறது யதார்த்த ‘கலை’ஞனே. கலக்குங்க ‘கலை’.....வாழ்த்துக்கள்.

சந்திப்பு: இளங்கோவன்.cinema.nakkheeran.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக