வெள்ளி, 17 அக்டோபர், 2014

Anoyara kartun மலாலாவின் 'நிஜ நாயகி'யாக திகழும் இந்திய இளம்பெண்!

அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள தன்னை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், மலாலாவோ மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை நிஜ நாயகியாகக் கொண்டாடுகிறார்.
இளம்பெண்கள், சிறுமிகள் கடத்தலை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வரும் அனோயாரா கடுன் என்ற 18 வயது பெண்தான் அந்த நாயகி.
மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளி என்ற பகுதியைச் சேர்ந்த அனோயாரா, சக நண்பர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், தமது பகுதியில் நடக்கும் பெண் கடத்தல் மற்றும் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக போராடி வருகிறார்.
மலாலா தொடங்கிய, மலாலா ஃபண்ட் (மலாலா நிதி அமைப்பு), தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "அனோயாரா இதுவரை 25 குழந்தைத் திருமணங்களைத் தடுத்துள்ளார், கடத்தப்பட்ட 180 சிறுமிகளை மீட்டு, அவர்களது குடும்பத்திடம் சேர்த்துள்ளார், 85 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார், கல்வி பயில முடியாத 200 சிறுவர், சிறுமிகளை பள்ளியில் சேர்த்துள்ளார். அனோயாராவின் இந்தத் துணிவையும், தலைமைப் பண்பையும் மலாலாவும், மலாலா ஃபண்ட் அமைப்பும் கொண்டாடுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலாலாவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட சில தினங்களுக்குப் பிறகு, சர்வதேச சிறுமிகள் தினமான அக்டோபர் 13-ஆம் தேதி அன்று இடப்பட்டுள்ள இந்தப் பதிவு, அனோயாராவை "நிஜ நாயகி" என்று வருணித்துள்ளது.
அனோயாராவை 'தி இந்து'வின் சார்பாக சந்தித்துப் பேசியபோது, இந்த ஃபேஸ்புக் பதிவு குறித்து அவருக்கு தெரிந்திருந்தது. அந்தப் பகுதியிலிருக்கும் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வரும் அனோயாரா, மலாலாவின் நோபல் பரிசு குறித்து வங்க தினசரிகளில் வந்துள்ள செய்திகளை சேகரித்து வைத்து, தன் நண்பர்களுடனும் பகிர்ந்துள்ளார்.
மலாலாவை போற்றும் அனோயாரா, 2012-ஆம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு அனோயாரா பரிந்துரைக்கப்பட்டிருந்த போது, மலாலாவின் தந்தையை பெல்ஜியத்தின் புருசெல்ஸ் நகரில் சந்தித்துள்ளார். ஆனால் மலாலாவை இதுவரை இவர் சந்தித்ததில்லை.
2008-ஆம் ஆண்டு, சேவ் தி சில்ரன் (save the children) என்ற குழந்தைகள் உரிமைக்காக போராடும் தன்னார்வ அமைப்பு, சந்தேஷ்காளி பகுதியில் பல மையங்களை தொடங்கியது. இந்த மையங்கள் அந்தப் பகுதியில் நிலவும் கடத்தல் போன்றவை பற்றிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்த உதவியது.
அந்தப் பகுதியில் வசிக்கும் இளம்பெண்களுக்கு வேலை தருவதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டி கடத்த முயன்ற கடத்தல்காரர்களை, தானும் இன்னும் சிலரும் சேர்ந்து விரட்டி அடித்ததை நினைவுகூர்ந்த அனோயாரா, "சிறுமிகள் கடத்தல் மற்றும் குழந்தைத் திருமணங்கள், இங்கிருக்கும் கிராமங்களில் பரவலாக இருந்தது. ஏழ்மை, விழிப்புணர்வின்மை மற்றும் கல்வி இல்லாமல் போனதால், கடத்தல்காரகள் செயல்பட இந்த இடம் தோதாக அமைந்தது" என்று கூறுகிறார்.
"தற்போது, உங்கள் பெண்ணுக்கு டெல்லியிலோ அல்லது வேறு எங்கோ வேலை வாங்கித் தருகிறேன் என யாராவது சொல்லிக் கொண்டு இந்த கிராமங்களில் நுழைந்தால், அவர்களை நாங்கள் போலீஸில் ஒப்படைத்து விடுவோம்" என தெரிவிக்கிறார் அனோயாரா. /tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக