சனி, 11 அக்டோபர், 2014

அதிமுகவினர் மீண்டும் வன்முறை 8 பஸ்கள் உடைப்பு: 150 பேர் படுகாயம் விடிய விடிய பதற்றம்

திண்டிவனம்: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை தொடர்ந்து திண்டிவனம், திட்டக்குடியில் 6 அரசு பேருந்து உள்பட 8 பேருந்துகள் மீது அதிமுகவினர் கல்வீசி தாக்கியதில் 2 டிரைவர்கள் மண்டை உடைந்தது. திடீர் பிரேக் போட்டதால் 150 பயணிகள் படுகாயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் விடிய விடிய பதற்றம் காணப்பட்டது.சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்து நேற்றிரவு காரைக்குடி நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. காரைக்குடியை சேர்ந்த ராஜதோரகன் (33) என்பவர் பேருந்தை ஓட்டிச்சென்றார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மேல்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது பேருந்து மீது மர்ம நபர்கள் சரமாரி கல்வீசி தாக்கினர். இதில் ரத்தக்காயம் அடைந்த டிரைவர் ராஜதோரகன் பேருந்தை நிறுத்த முயன்றார். திடீர் பிரேக் போட்டதால் பேருந்து குலுங்கி நின்றது. இதில் பயணிகள் சுமார் 50 பேர் இருக்கை, இரும்பு கம்பிகளில் தலைமோதி படுகாயம் அடைந்தனர்.


அடுத்த சில நிமிடங்களில் பின்னால் வந்து கொண்டிருந்த சென்னை-நாகர்கோவில் அரசு விரைவு பேருந்து மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் ஓட்டுனர் அனில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திடீர் பிரேக் போட்டதால் அந்த பேருந்தில் இருந்த பயணிகளும் பலத்த காயம் அடைந்தனர். இதேபோல் சென்னை-சேலம் அரசு பேருந்து, சென்னை-திருவாரூர் அரசு பேருந்து மற்றும் இரண்டு ஆம்னி பேருந்துகளும் அடுத்தடுத்து கல்வீசி தாக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. 6 பேருந்துகளின் முன்புற கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின. அவற்றில் பயணம் செய்த பயணிகள், மர்ம நபர்கள் எந்நேரமும் பேருந்துக்கு தீ வைத்து விடுவார்களோ? என்ற அச்சத்தால் உயிரை கையில் பிடித்தபடி இருந்தனர்.

தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது கருப்பு சட்டை அணிந்து பைக்கில் சென்ற 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் பேருந்துகள் மீது அதிமுகவினர் கல்வீசி தாக்கியது தெரியவந்துள்ளது. காயம் அடைந்த பேருந்து பயணிகள் 150க்கும் அதிகமானோர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். திட்டக்குடி: இதேபோல் திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்றிரவு 8.30 மணியளவில் அரசு பஸ் சென்றது. மாளிகை கோட்டம் பஸ் நிலையம் எதிரே இருச்சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பஸ் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தார். இதில் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்தது.

 டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் பயணிகள் அலறினர். அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுதவிர விருத்தாசலத்தில் இருந்து ஆவினங்குடிக்கு செல்லும் பேருந்தும் 9.30 மணி அளவில் மாளிகைகோட்டம் பஸ் நிலையம் அருகே மர்ம நபர்களால் கல்வீசி உடைக்கப்பட்டது. பேருந்து டிரைவர்கள் அளித்த புகார்களின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து திட்டக்குடி-விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே பஸ்கள் எரிப்பு, வாகனங்கள் உடைப்பு போன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது 8 பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நாளில் சேலத்தில் 2 பஸ்கள் உடைக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநாளில், காளையார்கோவில் கோபுரத்துக்கு தீ வைத்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் தீ விபத்துக்கு காரணமான நிர்வாகிகள் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. அதேபோல தமிழகத்தில் நடைபெற்ற பல வன்முறைச் சம்பவங்களில் அதிமுகவினர் யாரும் கைது செய்யப்படவில்லை. மாறாக, தினமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள், சமூக விரோதிகள் கைது செய்யப்படுவது வழக்கம். அவ்வாறுதான் பலரும் கைது செய்யப்படுகின்றனர். அவர்கள் மீது, வன்முறையில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து வழக்கை போலீசார் மாற்றி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.மேலும், சட்டம் ஒழுங்கு குறித்து தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் இப்போது ஒரே நாளில் 8 பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - See more at: /tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக