வியாழன், 9 அக்டோபர், 2014

முன்னெச்சரிக்கையாக 7 ஆயிரம் பேர் கைது - அரசு அறிக்கை தாக்கல்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டில் தி.மு.க. வக்கீல் ஆர்.எஸ்.பாரதி, பா.ம.க. வக்கீல் கே.பாலு, வக்கீல் மில்டன், டிராபிக் ராமசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இந்த சம்பவங்கள் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி, தலைமைச் செயலரின் நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-


ஜெயலலிதாவுக்கு செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு அளிப்பதற்கு முந்தைய நாளில் டி.ஜி.பி. மற்றும் பல அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டு, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு பிரிவின் 38 கம்பெனி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க அனைத்து கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. செப்டம்பர் 27-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 ஆயிரத்து 193 பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு குற்றங்களுக்காக 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதுதொடர்பாக 177 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், போக்குவரத்து சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பள்ளி கல்வித்துறையின் இணைச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சரஸ்வதி, ஆயுத பூஜைகளுக்காக செப்டம்பர் 27-ந் தேதி முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் 7-ந் தேதியும் விடுமுறை என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. இதற்காக அரசின் அனுமதியை அவர்கள் பெறவில்லை. அக்டோபர் 7-ந் தேதியன்று 35 ஆயிரத்து 177 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து 759 நடுநிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 602 உயர் நிலைப்பள்ளிகளும், 6 ஆயிரத்து 299 மேல் நிலைப்பள்ளிகளும் செயல்பட்டன.

சில பள்ளிகள் மட்டும் ஆங்காங்குள்ள மதவிழா மற்றும் வேறு காரணங்களுக்காக திறக்கப்படவில்லை. மற்றபடி, தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் அனைத்து பள்ளிகளும் இயங்கியதாக அனைத்து பள்ளிகளின் இயக்குனர்களும் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அன்றைய தினம் பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு தேர்வின் மொழிப்பாடத்தின் முதல் தாள் தேர்வு நடைபெற்றது

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், பள்ளிகள் மூடப்படுவது தொடர்பாக மனுதாரர்கள் வைத்த கோரிக்கைகளை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக