சனி, 11 அக்டோபர், 2014

பன்னீர்செல்வம் இன்னும் முதலமைச்சர் ஆகல்லியா ? கூச்சம் சோகம் நடிப்பு நாடகம் தொடர்ந்தால் 356 ?

இப்போது தலைமைச் செயலகம் எப்படி இருக்கிறது?
'ஓ.பன்னீர்செல்வம் என்னும் நான்...’ என்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டவர், சில அறிக்கைகள்... சில ஆலோசனைகள் என்று மட்டுமே நாட்களை நகர்த்தி வருகிறார். அமைச்சர்கள் யாரும் முதல்வரை கண்டுகொள்வதே இல்லை. நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்தியலிங்கம் ஆகிய மூன்று அமைச்சர்கள் மட்டும் எப்போதும் முதல்வரோடு வருகிறார்கள், போகிறார்கள். மற்ற அமைச்சர்களில் சிலர் அவரவர் சொந்த ஊர்களில் உண்ணாவிரதம், போராட்டம் என்று கோதாவில் இறங்கிவிட்டனர். இன்னும் சிலரோ, பெங்களூரில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் ரூம்போட்டு பரப்பன அக்ரஹாராவில் தினமும் அட்டண்டென்ஸ் போட்டுத் திரும்புகிறார்கள். பதவியேற்பு விழாவில் கண்ணீர்விட்டு அழுது புரண்ட அமைச்சர்கள் சிலர், பெங்களூரில் அந்தச் சோகத்தைத் துளியும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சுற்றி வருகிறார்கள். 'க்ளைமேட் ரொம்ப நல்லா இருக்கு. இங்கேயே இருந்திடலாம்போல!’ என்றும் சிலர் பேசிக்கொண்டார்களாம்.
பதவியேற்ற பிறகு அதிகம் கோட்டை பக்கம் வராமல் இருந்த முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்ட பிறகு தினமும் வர ஆரம்பித்துள்ளார்.  சரியாக 10 மணிக்கு அவருடைய சீட்டில் இருக்கிறார். அமைச்சராக இருந்தபோது ஒதுக்கப்பட்ட அறையில்தான் இன்னும் இருக்கிறார். 'நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்’ என்ற போர்டுதான் அவரது அறை முகப்பில் தொங்குகிறது. அவரது பங்களாவிலும் 'முதலமைச்சர்’ என்ற பெயர் பலகை இல்லை. முதல்வர் அறையில் இருந்த ஜெயலலிதாவின் பெயர் பலகை பலத்த யோசனைக்குப் பிறகு அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வேறு பெயர் பலகை எதுவும் இல்லை. பன்னீர்செல்வம் முதல்வரான பிறகு  முதல்வர் அறைக்குள் நுழையவே இல்லை. அதேபோல முதல்வர் கார் நிறுத்தும் இடத்திலும் பன்னீரின் கார் நிறுத்தப்படுவதில்லை. அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அவரது கார் நிற்கிறது.
முதல்வரோடு எப்போதும் உடனிருக்கும் அந்த மூன்று அமைச்சர்களும், அதே நேரத்துக்கு வந்து விடுகின்றனர். முதல்வர் அறைக்குச் சென்று அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டுத்தான், தங்களுடைய அறைக்கு வருகிறார்கள். முதல்வர் காலையில் வந்ததும், எல்லா செய்தித்தாள்களையும் படிப்பதை முதல் வேலையாக வைத்திருக்கிறார்.  தினமும் 11 மணிக்கு டீ போகிறது. 'டீ யாருப்பா போட்டது. ரொம்பா நல்லா இருக்கே...’ என்று விசாரித்திருக்கிறார் டீக்கடைக்கார முதல்வர். முதல்வர் அறையில் உள்ள டி.வி-யில் ஜெயா டி.வி மட்டுமே ஒளிபரப்பாகிறது. சபரிமலைக்கு மாலை போட்டவரைப்போல ஜெயலலிதா ஜெயிலுக்குப்போன நாளில் இருந்து முதல்வர் பன்னீர்செல்வம் ஷேவ் பண்ணவே இல்லை. 'அம்மா போயஸ் தோட்டம் வந்த பிறகுதான் தாடியை எடுப்பேன். அவங்க  உள்ளே இருக்கும்போது நான் எப்படி இருந்தால் என்ன?’ என்று கவலையோடு சொல்லி வருகிறாராம். வழக்கமாக ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில், பெசன்ட்நகர் விநாயகர் கோயிலுக்குச் செல்வது பன்னீரின் வழக்கம். தற்போது அங்கேயும் செல்வதில்லை. முதல்வரைச் சந்திக்க, தொழிலதிபர்கள் பலரும் கோட்டைக்குப் படையெடுத்து வருகிறார்கள். 'எனக்கு இப்போ யாரையும் பார்க்க விருப்பம் இல்லை. தயவு செஞ்சு அவங்களை அனுப்பிடுங்க...’ என்று சொல்லிவிட... வந்தவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் சாக்குபோக்கு சொல்லி திருப்பி அனுப்புகிறார்கள்.
அமைச்சர்களைப் பொறுத்தவரை காலை டீ சாப்பிடும் வரை மட்டுமே அவர்களுடைய அறையில் இருக்கிறார்கள். அதன்பிறகு தங்கள் அமைச்சர் நண்பர்கள் அறைகளுக்குக் கிளம்பிவிடுகிறார்கள். மதியம் வரை அவர்களுக்குள் ஆலோசனை(?) நடத்திவிட்டு தங்கள் அறைக்குத் திரும்புகிறார்கள். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ஆய்வுப் பணிகள், அரசு விழாக்கள் இல்லாத நாட்களில் அமைச்சர்கள் 11 மணி அளவில் கோட்டைக்கு வருவார்கள். அவர்களிடம் துறை சார்ந்த விஷயங்கள் குறித்து பேச அதிகாரிகள் வருவார்கள். டிரான்ஸ்ஃபர், பரிந்துரைக் கடிதங்கள் வாங்க ஒவ்வொரு அமைச்சர்களின் அறைகளுக்கு முன்பும் கட்சியினர் கூட்டம் அலைமோதும். இதெல்லாம் கடந்த 27-ம் தேதிக்கு முன்பு. இப்போது தொண்டர்கள் சிபாரிசு  விஷயங்களுக்காகக்கூட அமைச்சர்களைப் பார்க்க வருவதில்லை. அமைச்சரும், அவருடைய உதவியாளரும் மட்டுமே அறையில் இருக்கிறார்கள்.
இதற்குள் வீட்டில் இருந்து மதிய சாப்பாடு வருகிறது. மதிய சாப்பாட்டை அங்கேயே முடித்துவிட்டு, ரிமோட்டை எடுத்து சேனல் மாற்ற ஆரம்பிக்கிறார்கள். 'நம்ம ஊருல என்ன செஞ்சுட்டு இருக்கீங்க. போராட்டம் எல்லாம் சரியா போகுதுல்ல...’ - சொந்த ஊருக்கு போன் போட்டு விசாரிக்கவும் தவறுவது இல்லை. இதெல்லாம் முடிந்ததும் அமைச்சர்கள் பலரும் 3 மணிக்கு பங்களாவுக்குத் திரும்பி விடுகிறார்கள். ஆனால், முதல்வர் அவரது அறையிலேயே இருக்கிறார். 'பத்திரிகைக்காரங்க யாராவது வெளியில இருக்காங்களான்னு பாருங்க...’ என்று தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகே அறையை விட்டு வெளியே வருகிறார் முதல்வர்.
தனது செயலாளர்களை மட்டும் தினமும் சந்திக்கிறார் முதல்வர். துறை சார்ந்த அதிகாரிகளையும் பார்க்கிறார். ஆனால், வாழ்த்து சொல்லவோ, பொக்கே கொடுக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை. மின்வாரிய அதிகாரிகள் முதல்வரைச் சந்தித்தபோது, 'அம்மா இங்கே இருந்தபோது எப்படி மின் தடையில்லாமல் வழங்கப்பட்டதோ அதேபோல இனியும் இருக்க வேண்டும். அம்மா எல்லா விஷயங்களையும் அங்கே இருந்து கவனிச்சுட்டுதான் இருக்காங்க. இது தீபாவளி சமயம் என்பதால் எந்தக் குறையும் இல்லாம பார்த்துக் கொள்ளுங்கள். இது சம்பந்தமாக எந்தப் பிரச்னை இருந்தாலும் உடனுக்குடன் எனக்குத் தெரியப்படுத்துங்க...’ என்று சொல்லி அனுப்பினாராம் முதல்வர்.
''அரசு சம்பந்தமான செய்திகளில் என்னோட போட்டோ வர வேண்டிய அவசியம் இல்லை. என்ன தகவலோ அது மட்டும் பொதுமக்களுக்குப் போய் சேர்ந்தால் போதும். வார்த்தைக்கு வார்த்தை முதல்வர் என்று போடுவதைத் தவிருங்கள்!’ என்று அதிகாரிகளிடம் சொல்லி இருக்கிறார் முதல்வர். 'சார் முதல்வரோட அதிகாரப்பூர்வ படத்தை வெளியிட வேண்டும்!’ என்று அதிகாரிகள் கேட்க, 'அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்’ என்று மறுத்துவிட்டார் முதல்வர்.
சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்காக அவரது கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பால்குடம் எடுக்கலாம், யாகமும் நடத்தலாம். ஆனால், அதே மாவட்டச் செயலாளர்கள் தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்துகொண்டு, ஜெயலலிதாவைப் பற்றி மட்டுமே சிந்திப்பது, செயல்படுவது எந்தவிதத்திலும் நாட்டு மக்களுக்கு நன்மை தராது!
- எஸ்.முத்துகிருஷ்ணன்
அட்டைப்படங்கள்: ரமேஷ் கந்தசாமி
படம்: சொ.பாலசுப்ரமணியன் விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக