வியாழன், 9 அக்டோபர், 2014

பெண் திருமண வயது 21: உயர்நீதிமன்ற பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தல்

பெண்ணின் திருமண வயது 21 என உயர்நீதிமன்ற பரிந்துரையை  செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
பருவக்கோளாறு காரணமாக ஏற்படும் காதலால் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதைத் தடுக்க அவர்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை யோசனை தெரிவித்திருக்கிறது. நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து, பெண்களின் நலனில் அக்கறை கொண்டு உயர்நீதிமன்றம் அளித்துள்ள இப்பரிந்துரை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.
பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் கடத்தி திருமணம் செய்யப்பட்டது குறித்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு பரிந்துரையை அளித்திருக்கிறது. காதல் நாடகத் திருமணங்களாலும், கடத்தல் திருமணங்களாலும் பாதிக்கப்பட்ட பெண்களும், அவர்களின் பெற்றோரும் அனுபவித்துவரும் வேதனைகளையும், மன உளைச்சலையும் உள்வாங்கி நீதிபதிகள் அளித்துள்ள பரிந்துரையும், தெரிவித்த  கருத்துக்களும் பாதிக்கப்பட்ட பெற்றோரின் மனக்காயங்களை ஆற்றும் மாமருந்தாக அமைந்துள்ளன.

பெண்கள் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கும், வாக்குரிமை பெறுவதற்கும் வேண்டுமானால் 18 வயது சரியானதாக இருக்கும். ஆனால், காதலித்து மணம் புரிவதற்கான பக்குவமும், உளவியல் முதிர்ச்சியும் 18 வயதில் நிச்சயமாக கிடைக்காது. எனவே, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து அரசு ஆராய வேண்டும்’’ என்று நீதிபதிகள் மணிக்குமார், ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு பரிந்துரைத்துள்ளது.
மெத்தப்படித்தவர்களுக்கே சரியான வேலை கிடைக்காத நிலையில், 21 வயதுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் எத்தகைய இன்னல்களை எதிர்கொள்வார்கள் என்பதை சொல்லித் தெரியவில்லை என்றும்  நீதிபதிகள் கூறியுள்ளனர்.
காதல் திருமணம் தொடர்பான வழக்குகளில், பெண்கள் அவர்களாகவே முன்வந்து காதலனை திருமணம் செய்து கொண்டிருந்தாலும், பெண்ணின் பெற்றோர் புகார் அளிக்கும்பட்சத்தில், அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி உரிய ஆணையை பெற வேண்டும் என்று நீதிபதிகள் பிறப்பித்துள்ள ஆணை உள்நோக்கத்துடன் செய்யப்படும் நாடகக்காதல் திருமணங்களை தடுக்க நிச்சயமாக உதவும்.
மொத்ததில், திருமண வயது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ள பரிந்துரை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த பரிந்துரைகள் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரின் வயிற்றிலும் பால் வார்க்கும். இப்பரிந்துரையை அனைத்துத் தரப்பினரும் வரவேற்பார்கள். பெண்களின் திருமண வயது தொடர்பாக 12.05. 2011 அன்று கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும் இதே கருத்து தான் வலியுறுத்தப்பட்டிருந்தது. எனவே, திருமண வயது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் உடனடியாக சட்டமாக்கி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக