திங்கள், 20 அக்டோபர், 2014

சுதாகரன் திருமணம் ஒரு மொய் விருந்து ! 200 கோடி மொய்ப்பணம் அன்றைய மதிப்பில் ! சினிமா சினிமாதான்?

செப்டம்பர் 13, 1995 தேதியிட்ட ஜூ.வி. இதழில் இருந்து... ‘‘உலகிலேயே இதுவரை நடக்காத அளவுக்கு மிக மிக காஸ்ட்லியான ஒரு மொய் விருந்து நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர்! வளர்ப்பு மகனுக்குத் திருமணம் என்ற பெயரில் பல ரூபத்திலும் வந்த பரிசுப் பொருட்களை, ஏழாம் தேதி இரவே கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்தார்கள்! தாராளமாக இருநூறு கோடி ரூபாய் தேறும் என்று தெரிந்து சந்தோஷத்தில் மிதக்கிறார்கள்!’’ - முதல்வருக்கு மிக நெருங்கிய அமைச்சர் ஒருவரே தனது நண்பர்களிடம் தாங்க முடியாமல் சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை. ‘இப்படி ஒரு திருமணம் நடத்துவதற்காகவே வளர்ப்பு மகனைத் ‘தத்து’ எடுத்தாரா அல்லது வளர்ப்பு மகனாகச் சுதாகரனை எடுத்ததால் இந்த ஆடம்பரத் திருமணமா?" என்ற சஸ்பென்ஸுக்குச் சரியான விடை இதுவரை கிடைக்கவில்லை. எப்படியோ... ‘சுமார் இரண்டு மாத காலமாக பத்திரிகைகளும், எதிர்கட்சித் தலைவர்களும் கிளப்பிய ஏராளமான விமர்சனங்கள் என்னைத் துளியும் பாதிக்கவில்லை. எல்லா தடைகளையும் மீறி நான் நினைத்ததைச் சாதித்துக்கொண்டிருக்கிறேன்’ என்ற எண்ணமும் பெருமையும், மணமேடையில் ஓடியாடிக்கொண்டிருந்த முதல்வர் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது!
‘‘பண ரீதியாக முதல்வர் தான் நினைத்ததைச் சாதித்திருக்கலாம்! ஆனால், அரசியல் ரீதியாக மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டார். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க-வுக்கென்று இருந்த அசைக்க முடியாத வோட்டு வங்கிக்கு, தானே வெடி வைத்துக்கொண்டுவிட்டார் முதல்வர்!’’

- திருமணம் முடிந்த கையோடு கூடிப் பேசிய மூன்று அமைச்சர்களின் ‘கமென்ட் இது’ பலரிடமும் தீர விசாரித்த போது தெரியவந்தது இதுதான் -


‘‘நம் முதல்வர் வீட்டுத் திருமணம் என்ற ஒட்டுதலுடன் திருமணத்துக்கு வந்திருந்த அடிமட்ட தொண்டர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்ட இனத்து மக்கள்தான். அதை நீங்களே பார்த்திருப்பீர்கள்! அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத பலம் - தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு. தங்களை ஆண்டு வழிநடத்தும் முதல்வர் ஒரு பிராமணப் பெண்மணி என்ற எண்ணமோ, நெருடலோ அவர்களுக்கு இதுவரை வந்ததில்லை. ஏழைகளுக்குக் குரல் கொடுக்கிற, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில் வந்த ஒரு தலைவி என்ற கண்ணோட்டத்துடன்தான் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், முக்குலத்தோர் இனத்தில், கள்ளர் பிரிவைச் சேர்ந்த சசிகலாவின் குடும்பத்தில், முழுக்க முழுக்கத் தானும் ஒருவர் என்று காட்டிக் கொள்ளும் விதமாகத்தான் இந்தத் திருமண விழாவில் முதல்வர் நடந்துகொண்டார்.

திருமண அழைப்பிதழ் அடித்ததில் இருந்து, மாப்பிள்ளை அழைப்பு, திருமண சம்பிரதாயங்கள் அனைத்துமே கள்ளர் சமுதாயத்துப் பாணியில் பின்பற்றப்பட்டதை, வந்திருந்த தொண்டர்கள் ஊன்றிக் கவனித்தனர். மணமேடையில் சசிகலா சொல்லிக் கொடுத்துக்கொண்டே வர... அந்த சம்பிரதாயங்களைப் பயபக்தியுடன் முதல்வர் மேற்கொள்வதையும் பார்த்தனர்’’ என்று நம்மிடம் சொன்னார் அ.தி.மு.க-வின் மூத்த பிரமுகர் ஒருவர்.

தஞ்சை மாவட்டத்துக்காரரான அவர் தொடர்ந்து சொன்னார் - ‘சுருக்கமாகச் சொல்வதானால், மக்கள் தலைவி, ஏழைகளின் தலைவி என்ற பார்வையை மாற்றி ‘தேவர் வீட்டுப் பொண்ணு’ என்று முதல்வரை பார்க்கத் துவங்கிவிட்டனர் தாழ்த்தப்பட்ட மக்கள்!

சரி... அதனால் என்ன?

‘‘சென்னை போன்ற பெரிய நகரங்களில் உள்ள தொகுதிகளில் இதன் பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் இனத்து மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட இனத்து மக்களுக்கும் நிலவி வரும் பகைக்கு நீண்ட வரலாறு உண்டு!

இரண்டு சமுதாயங்களையும் சேர்ந்த மக்களை இந்த விஷயத்தில் துளிகூடக் குறை சொல்ல முடியாது. இரு தரப்பிலும் உள்ள ஒரு சிலர் அரசியல் லாபங்களுக்காக இந்த பகையைத் தொடர்ந்து ஊதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அதன் விளைவு, தேவர் பெருமகனாருக்கு முதல்வர் சிலை திறப்பு நடத்தியபோதே தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் சலசலப்பு உருவாக்கப்பட்டது! சசிகலா குடும்பத்தின் தூண்டுதல்தான் முதல்வர் ஒரு சார்பாக இப்படிச் செய்யக் காரணம் என்ற பேச்சு கிளம்பியது. அப்போதும் தாழ்த்தப்பட்ட மக்கள், முதல்வர் மேல் நம்பிக்கை இழக்காமல் இருந்தனர். ஆனால், அந்த நம்பிக்கையை இந்த வளர்ப்பு மகன் திருமணம் பொய்யாக்கிவிட்டது!’’ என்பதுதான் தரப்படும் விளக்கம்!

‘‘இன்னொரு புறமும் முதல்வருக்கு மிஞ்சுவது நஷ்டக் கணக்குதான்! சசிகலா குடும்பம் சேர்ந்துள்ள முக்குலத்தோர் இனத்து மக்களின் ஆதரவும் முதல்வருக்குக் கிடைக்கப் போவதில்லை’’ என்கிறார்கள் அனுபவம் வாய்ந்த சிலர்.

முக்குலத்தோர் இனத்து மக்கள் எளிமைக்குப் பேர்போனவர்கள். நீதிக்கும் நேர்மைக்கும் தலைவணங்குகிற மனப்பக்குவம் மிகுந்தவர்கள். பாரம்பரியம்மிக்க தங்கள் பண்பாடுகளைக் கம்பீரமாகப் போற்றிக் காப்பவர்கள். குறிப்பாக, ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். இந்தத் திருமணத்துக்கு வந்த முக்குலத்தோர் இனத்தினர் பலரேகூட ‘மன்னர் பாணி’யில் நடந்த இந்தத் திருமணத்தைக் கண்டு முகம் சுளித்தது வெளிப்படையாகத் தெரிந்தது.

மூத்த அமைச்சர் ஒருவர் இன்னொரு விஷயமும் தன் ஆதரவாளர்களிடம் சொல்லி வருகிறாராம் -

‘‘தமிழகத்தில் இதுவரை ஆண்ட முதல்வர்களில் கடைசிவரை மாறாத மக்கள் செல்வாக்குடன் இருந்தவர்கள் மூவர். பெருந்தலைவர் காமராஜ், அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். இந்த மூவருக்குமே ரத்த பந்தமான வாரிசுகள் கிடையாது. ‘யாருக்காக இவர்கள் பணம் சேர்க்க வேண்டும்.’ இந்தத் தலைவர்கள் ஊழல் செய்யவே மாட்டார்கள்!’ என்ற ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை மக்களுக்கு இவர்கள்மேல் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

அண்ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் கூட வளர்ப்பு மகன்கள் உண்டு. ஆனால், எந்தத் தருணத்திலும் அந்த வளர்ப்புப் பிள்ளைகளுக்கு செய்திகளில் அடிபடும் அளவுக்கு முக்கியத்துவம் தந்தது கிடையாது!

வாரிசு யாரும் இல்லாத ஜெயலலிதா மீதும் ஆரம்பத்தில் எங்களுக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது உண்மைதான். ஆனால், சசிகலா குடும்பம் வந்து அவருடன் ஒட்டியதும் அந்த ‘இமேஜ்’ உடையத் துவங்கியது! இன்று அதே குடும்பத்தில் இருந்து வளர்ந்து ஆளான ஒரு இளைஞரை, வளர்ப்பு மகன் என்று எடுத்து மாநிலமே திகைத்து, புழுங்கும் அளவுக்குத் திருமணமும் நடத்திக் காட்டியதன் மூலம் ‘இந்த வாரிசு’க்காக நான் எதையும் செய்வேன்! எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் முதல்வர். முதல்வரின் இந்தப் பற்றுதல் மாநிலம் தழுவிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதுவும் வரும் தேர்தலில் அ.தி.மு.க-வின் வோட்டுகளைப் பெருமளவில் பாதிக்கும்!’’ - மூத்த அமைச்சர் அலசியது இப்படித்தான்.

முக்கியமான வேறொரு பாதிப்பையும் இந்தத் திருமண விழா உண்டாக்கியிருக்கிறது. அந்தப் பாதிப்பின் மையக் கரு - அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் தேடலில் இருக்கும் தினகரன்! சசிகலாவின் சகோதரரான தினகரன் பற்றிய பலவிதமான திடுக்கிடும் குற்றச்சாட்டுகளும் வதந்திகளும் உள்ள நிலையில் அவர் இந்தத் திருமண மேடையில் மிடுக்கான உடையில் சர்வ சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தது தொண்டர்களைப் பாதித்துவிட்டது.

‘‘கோடிக்கணக்கில் ஊழல்கள் நடப்பதை ஒப்புக்கொள்ளும் தொண்டர்களில் பலர்கூட, ‘அதற்கு முதல்வர் காரணம் இல்லை. அவரைச் சுற்றியிருப்பவர்கள்தான், முதல்வருக்கே தெரியாமல் இதையெல்லாம் செய்கிறார்கள்’ என இதுவரை நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், ‘தினகரனைத் திருமண மேடையில் நிறுத்தி வைத்ததோடு நில்லாமல், முதல்வரே அவரிடம் வலியப் போய்ப் பேசிக்கொண்டிருந்ததும், மணமக்களை வாழ்த்த வந்த அரசியல் புள்ளிகளுக்குத் தினகரனை அறிமுகம் செய்து வைத்ததையும் கண்டு முக்கியமானவர்களே அதிர்ந்தது உண்மை!

மற்றொரு விஷயமும் மிக வேதனையுடன் சுட்டிக் காட்டப்படுகிறது. சிவாஜி குடும்பத்துக்கு இந்தத் திருமண விழாவில் நேர்ந்த அனுபவம்தான் அது.

மேடைக்கு வந்த பல அரசியல் புள்ளிகளுக்கு வணக்கம் சொல்லிச் சிரித்த முதல்வர், உலகப் புகழ்பெற்ற நடிகரான சிவாஜி கணேசனை அவர்களுக்கு அறிமுகப்படுத்த முனையவில்லை. முதல் சில நிமிடங்களுக்கு மணமக்களின் இன்னொரு புறம் நின்று பார்த்த சிவாஜி, பிறகு தளர்வுடன் நடந்து தன் நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

திருமண சம்பிரதாயங்கள் முடிந்தன. இனி தங்களுக்கு வேலை இல்லை என்று புரிந்ததுமே, சிவாஜி கையசைத்து தன் மனைவியிடம் ஏதோ சொல்ல... ‘பர பர’வென்று மேடையிலிருந்து இறங்கி கீழே வந்துவிட்டது சிவாஜி குடும்பம்.
சரி... இந்த ‘பல கோடி ப்ராஜெக்ட்’டினால் அகில இந்திய அளவில் முதல்வர் சம்பாதித்துக் கொண்ட செல்வாக்கு என்ன?

கேட்டால். அ.தி.மு.க-விலேயே சிரிக்கிறார்கள்!

ஆரம்பத்திலிருந்தே அ.தி.மு.க-வை ஆதரிக்கும் மத்திய அமைச்சர்களான தங்கபாலுவையும் சீதாராம் கேசரியையும் விட்டுவிடலாம். மற்றபடி காங்கிரஸ் தரப்பில் இருந்து செல்வாக்கு மிக்க தலைவர்களோ வேறு யாருமோ கலந்துகொள்ளாமல் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தது கவனிக்க வேண்டிய விஷயம்.

முதல்வரே நேரில் சென்று அழைத்தும் கவர்னர் புறக்கணித்துவிட்டார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரிய வீட்டுத் திருமணம் என்பது, நிருபர்களுக்கும் புகைப்படக்காரர்களுக்கும் நிறைய தீனி போடும் அளவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருக்கும். ஆனால், இந்தத் திருமணத்தைத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டனர். பல தலைவர்களுக்குப் பத்திரிகை போகவில்லை என்பதும் தனிக்கதை.

மற்ற மாநிலங்களிலிருந்து வந்த ஒரு சில அரசியல் தலைவர்களில்கூடப் பெரிய அளவுக்கு உள்ளவர்கள் யாருமில்லை.

ஏன்... தனது கட்சி அமைச்சர்களுக்கேகூட இந்த விழாவில் முதல்வர் முக்கியத்துவம் தரவில்லை.

‘இது என் குடும்ப விவகாரம்’ என்பதுபோல்தான் நடந்துகொண்டார். அவரை அப்படி ஒரு கட்டுப்பாட்டுக்குள் மற்றவர்கள் வைத்திருப்பதும் நன்கு தெரிந்தது.

மொத்தத்தில், வெற்றிகரமாக ‘தமிழக முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு மட்டுமே சொந்தம்’ என்று தான் நினைத்ததை மணமேடையிலேயே சசிகலா குடும்பம் அதிரடியாக நிரூபித்துக் காட்டிவிட்டது.

மக்களிடமிருந்து மேலும் ஒரு படி தனிமைப்பட்டுவிட்டர் முதல்வர்.

அதுதான் இந்தத் திருமணத்தின் விளைவு!

நிறைவுற்றது. vikatan,com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக