திங்கள், 29 செப்டம்பர், 2014

மோடி : NRI க்களுக்கு நிரந்தர விசா வழங்கப்படும்

நியூயார்க்: அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு நிரந்தர இந்திய விசா வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி, முதல்முறையாக கடந்த 25ம் தேதி அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுசபை கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். நியூயார்க்கில் மேடிசன் ஸ்கொயர் பூங்காவில் நேற்று மாலை நடைபெற்ற அமெரிக்கவாழ் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவருக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலத்த கரவொலி எழுப்பி அவரை வரவேற்றனர்.  ஏராளமான இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க் களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இளைஞர்களின் கலைநிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி இசை கலைஞர்களுடன் இணைந்து பாட்டு பாடினார். வாத்திய கருவிகளை வாசித்து அசத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:


இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தடையாக பல்வேறு பயனற்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, எளிதாக அணுகும் வகையில் புதிய சட்ட விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. மேலும், அமெரிக்காவில் தொழில் நிமித்தமாக தங்கியிருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர் மற்றும் இந்திய வம்சாவளியினர் என்று தனித்தனியே 2 விசாக்கள் வழங்கப்பட்டன. இனி ஒரே விசாவாக வழங்கப்படும். இந்திய வம்சாவளியினருக்கான சான்று(பிஐஓ) வைத்துள்ளவர்களுக்கு இந்தியாவில் நிரந்தர விசா வழங்கப்படும்.   உங்களது தொழில்நுட்பங்களை எங்களுக்கு அளியுங்கள். இந்தியாவில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்தும், அதுகுறித்து தக்க ஆலோசனைகளையும் என்னிடம் எந்நேரத்திலும் வழங்கலாம். இந்தியாவை அனைத்து வகையிலும் வலிமையான நாடாக உருவாக்குவதே எங்களது லட்சியம். இவ்வாறு மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க்கில் இருந்து இன்று காலை வாஷிங்டன் கிளம்பி சென்றார். இன்றிரவு அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விருந்து அளிக்கிறார். நாளை, மோடி- ஒபாமா அதிகாரப்பூர்வமாக சந்திப்பு நடைபெறுகிறது./tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக