செவ்வாய், 2 செப்டம்பர், 2014

ஜன தன யோஜனா ! கிராமிய பொருளாதாரத்தை காபரெட் கையில் கொடுக்க ஒரு திட்டம் !

ப்ரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா – மேரா காத்தா பாக்ய விதாதா” சௌகார் பேட்டை சேட்டு பான் பராக்கை புளிச்சென்று துப்பி விட்டு இந்தியில் ஏதோ திட்டுகிறாரா? குழப்பம் வேண்டாம். இது பிரதமர் மோடியின் சிந்தனையில் உதித்த ஒரு புத்தம் புதிய திட்டம். இப்படித்தான் ஊடகங்கள் அதிசயிக்கின்றன. பிரதான் மந்த்தி ஜன் தன் யோஜனா - மேரா காத்தா பாக்ய விதாதா" ப்ரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா – மேரா கட்டா பாக்ய விதாதா” சௌகார் பேட்டை சேட்டு பான் பராக்கை புளிச்சென்று துப்பி விட்டு இந்தியில் ஏதோ திட்டுகிறாரா? மோடி சுதந்திர தின உரையில் பேசும் போது நாடு சுதந்திரமடைந்து 68 ஆண்டுகளாகியும் 68 சதவீத மக்களுக்குக் கூட வங்கிக் கணக்கு இல்லை என்றும்.. இல்லாத அத்தனை பேர்களுக்கும் உடனடியாக வங்கிக் கணக்கை ஆரம்பித்துக்  கொடுத்து அவர்களை ‘நிதித் தீண்டாமையில்’ இருந்து விடுவிக்கப் போவதாகவும் அறிவித்தார்.

இதன்படி, கடந்த 28-ம் தேதி ஒரே நாளில் நாடெங்கும் சுமார் 600 நிகழ்ச்சிகளும் 77,852 முகாம்களும் நடத்தப்பட்டு ஒன்றரைக் கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. வழக்கமாக வங்கிக் கணக்குத் துவங்க வேண்டுமானால் குறைந்தபட்சம் இரண்டு அடையாள ஆவணங்கள் வேண்டும் என்கிற விதி முறையை ஒன்றாக தளர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. அதே போல், இது பிரதமரின் செல்லத் திட்டம் என்பதால் குறிப்பிட்ட இத்திட்டத்தின் கீழ் துவங்கப்படும் கணக்குகளுக்கு குறைந்தபட்ச சேமிப்பு ஏதும் வைக்கத் தேவையில்லை.
கணக்குகள் வைத்திருப்போருக்கு முப்பதாயிரம் வரை ஆயுள் காப்பீடும், ஒரு லட்சம் வரை விபத்துக் காப்பீடும் (எதிர்காலத்தில்) வழங்கப்படும், வங்கிக் கணக்கின் வரவு செலவு விவரங்களை ஆறு மாத காலத்திற்கு ஆராய்ந்து விட்டு 5,000 ரூபாய் மிகைப்பற்று (Overdraft) கடன் வசதி கொடுக்கப்படும் என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. தொண்டையைச் செறுமிக் கொண்டு இடைபுகும் பேங்க் ஆப் இந்தியாவின் விஜயலட்சுமி ஐயர், ‘அதெல்லாம் முதல்ல ரெண்டாயிரம் தான்… அப்பால பொறவு பார்ப்போம்” என்கிறார்.
ஒரு திட்டம் என்று அறிவித்தால் அதன் பின்னே மக்களை கவரும் வெற்று முழக்கமும், முதலாளிகளுக்கு பயன்படும் நோக்கமும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் மோடி விசயத்தில் முன்னது கூட போதிய அளவுக்கு செட்டப் செய்யப்படவில்லை. எவர் ஆராயப் போகிறார்கள் என்பதனாலும் இந்த அலட்சியம் இருக்கலாம்.
வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள காப்பீட்டை யார் வழங்குவார்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. காப்பீடு வழங்குவதற்கான அடிப்படை நிதியை யார் வழங்குவார்கள் என்றும், அதற்கான ப்ரீமியம் யார் செலுத்த வேண்டும் என்பது பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. நிதி அமைச்சர் மிகைப்பற்று கடனின் அளவு 5000 என்கிறார், வங்கி அதிகாரியோ 2000 என்கிறார். அடுத்து மிகைப்பற்று கடனுக்கான வட்டி விகிதம், கால அளவு குறித்து எந்த விவரங்களுக்கும் சொல்லப்படவில்லை.
எல்லா மக்களும் ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் காட்டி வங்கிக் கணக்கு துவங்கலாம் என்கிறார்கள் – நாடு முழுவதும் மாநிலம் விட்டு மாநிலம் குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்துள்ள கூலித் தொழிலாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஏது அடையாளங்கள்?
சி.ஐ.ஐ பின்பாட்டு
மோடிக்கு பின் பாட்டு பாடியுள்ளது தரகு முதலாளிகளின் சங்கமான சி.ஐ.ஐ. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
இத்திட்டம் பற்றியும் நடந்து முடிந்த முகாம் குறித்தும் தனியார் வங்கி ஊழியர் ஒருவரிடம் விசாரித்த போது, இத்திட்டத்தின் படி கணக்கு வைத்திருப்பவர் ஒரு மாதம் பத்து முறைகளுக்கு மேல் பணம் எடுக்க முடியாது என்கிறார். மேலும், எந்த வரைமுறையும் இல்லாமல் போதிய ஆவணங்கள் எதையும் சரிபார்க்காமல், எல்லோருக்கும் வங்கிக் கணக்கு துவங்கி வருவதாகவும், தனியார் வங்கிகள் இதற்கென இலக்கு நிர்ணயித்து மக்களை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்.
அதே போல் மிகைப்பற்று கடன் கொடுப்பதற்கு கொலேட்ரல் எனப்படும் சொத்து ஈடு வைக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதிகளைக் குறிப்பிடுகிறார். எனினும், பிரதமரின் செல்லத் திட்டம் என்று சொல்லப்படுவதால், விதிமுறைகளை மீறி எந்த அடையாளங்களும் இல்லாத, திருப்பிச் செலுத்தப்படும் உத்திரவாதம் ஏதும் இல்லாத கடன்களை வழங்குவதும் வங்கிகளைப் பிடித்து புதை குழியில் தள்ளுவதும் ஒன்று தான் என்கிறார். ஆனால் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இந்த மிகைப்பற்று காரணமாக வங்கிகள் திவாலாக போவதில்லை. மாறாக இந்த நிதி மறைமுகமாக முதலாளிகளுக்கு பயன்படும் விதத்தைத்தான் நாம் கண்டு பிடிக்க வேண்டும். இன்று ஐ.டி துறை ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் கூப்பன்கள் போல மக்களுக்கும் கொடுக்கப்படலாம்.
“இது புத்தாக்கத்துடன் கூடிய சரியான திசையில் செல்லும் மிகத் தேவையான திட்டம். நாட்டின் மிகப் பெரிய சவாலான வறுமை ஒழிப்பை நிதி ஒருங்கிணைப்பு மூலம் தீர்க்கும் திட்டம்” என்று மோடிக்கு பின் பாட்டு பாடியுள்ளது தரகு முதலாளிகளின் சங்கமான சி.ஐ.ஐ. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
சி.ஐ.ஐ. சொல்லும் “எல்லா மக்களையும் நிதி ஒருங்கிணைப்பின் கீழ் கொண்டு வருதல்” என்கிற வார்த்தையும் (financial inclusion), அதை நடைமுறைப்படுத்துவதற்காக மோடி அறிவித்திருக்கும் திட்டமும் மோடி பக்த ஜனங்கள் பீற்றிக் கொள்வது போல் புத்தம் புது சரக்கல்ல.
உங்களுக்கு வங்கியில் கணக்கு இருக்கிறதா?
உலக வங்கி மென்று துப்பியதை, மன்மோகன் ஒரு முறை குதப்பி துப்பியதையே மோடியும் மலிவான முறையில் காப்பி எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதே நோக்கத்திற்காக மன்மோகன் சிங் முன் வைத்த திட்டம் தான் ‘உங்கள் பணம் உங்கள் கையில்’. எல்லா மக்களுக்கும் ஆதார் அட்டைகளைக் கொடுப்பது; பல்வேறு திட்டங்களுக்காக அளிக்கப்படும் மானியங்களை ஆதார் அட்டையோடு இணைப்பது; ஆதார் அட்டைகளை வங்கி வலைப்பின்னலோடு சேர்ப்பது போன்றவை மன்மோகன் காலத்திலேயே துவங்கப்பட்ட திட்டங்கள்.
அதாவது அனைத்து மக்களையும் நிதிச் சந்தையில் இணைப்பது தான் நிதி ஒருங்கிணைப்பின் நோக்கம். கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட இத்திட்டங்கள் கூட அவர்களது சொந்த மூளையில் உதித்த திட்டங்கள் அல்ல; உலக வங்கியின் திட்டங்கள் தான் அவை. அதாவது, ஒழுங்கமைக்கப்பட்ட வங்கி வலைப்பின்னலுக்கு வெளியே சுய சார்பு பொருளாதார கட்டமைப்பு எதுவும் நிலவக் கூடாது என்பதே இதன் நோக்கம்.
ஏற்கனவே வங்கிகளின் நிதி ஓடைகளின் பாதையில் செயல்பட்டு வந்த தேசிய தொழில்களையும், சிறு குறு தொழில்களையும் சீரழித்து சின்னாபின்னமாக்கிய பின், இதற்கு வெளியே இயங்கும் கிராமிய சிறு வீத பொருளாதார அடிப்படைகளைத் தகர்த்து மொத்த இந்தியாவையும் ஓட்டாண்டிகளாக்க வேண்டும் என்பது உலக வங்கியின் நோக்கம்.
இதற்காகவே கிராமப்புற பொருளாதாரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தியவர்கள் கிராமப்புற மக்கள் தமது சேமிப்பில் 42%-ஐப் பணமாக வைத்துள்ளனர் என்கிற உண்மையைக் கண்டு பிடித்துள்ளனர்.  இத்தனை காலமாக வங்கிச் சேவையுடன் இணைக்கப்படாமல் இருக்கும் நாட்டின் 60% கிராமப்புற மக்களை உடனே வங்கிச் சேவையுடன் இணைப்பது, கருப்பட்டிப் பானைகளுக்குள் ஒளிந்திருக்கும் பணத்தை கொள்ளயடிப்பது என்கிற திசையில் ஆளும் வர்க்கம் சிந்திக்கத் துவங்கி நீண்ட காலமாகிறது. கூடவே ஏழைகளின் குறைந்த பட்ச வாழ்க்கை பராமரிப்பு கூட முதலாளிகளின் நலனுக்கு உதவிடும் வகையில் மாற்றப்பட வேண்டுமென்பதிலும் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.
ஏகாதிபத்திய பொருளாதார நலன்களுக்கு ஏற்ப உலக வங்கி மென்று துப்பியதை, மன்மோகன் ஒரு முறை குதப்பி துப்பியதையே மோடியும் மலிவான முறையில் காப்பி எடுத்து வெளியிட்டுள்ளார். மோடியின் வாயில் இருந்து வந்து விழும் போது ஜன் தன் யோஜனா என்கிற பெயரில் விழுந்துள்ளது.
ஆதார், மற்றும் உங்கள் பணம் உங்கள் கையில் என்பதெல்லாம் நடைமுறைக்குச் சென்ற போது அவர்களே எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை. ஏனெனில், 120 கோடி மக்களையும் நிதிச் சந்தையில் இணைப்பதன் முதல் படியாக வங்கிக் கணக்கு துவங்குவது தான் இருக்கிறது. இதற்கு ஏற்கனவே ரிசர்வ் வங்கி வகுத்திருந்த வழிமுறைகள் தடையாக இருந்தாலும், நீதிமன்றத்தின் தடையும் எதிர்பாராமல் வந்து சேர்ந்தது.
எல்லா மக்களின் தலையிலும் ஒரு வங்கிக் கணக்கை திணிப்பது எதிர்பார்த்த வேகத்தில் நடக்காத காரணத்தை ஆராய அமைக்கப்பட்ட நசிகேத் மூர் கமிட்டி இந்தாண்டின் துவக்கத்தில் சில ஆலோசனைகளை முன்வைத்தது. அந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொண்ட ரிசர்வ் வங்கி, பணம் வழங்கும் வங்கிகள் (payment banks) என்ற புதிய வங்கி முறை ஒன்றுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இப்புதிய வங்கிகள் தங்களுக்கென்று சொந்த கருவூலங்கள் வைத்திருக்கத் தேவையில்லை. நிலையான அலுவலகங்களும் தேவையில்லை. நடமாடும் வங்கிகள். சுமார் 70 ஆயிரம் முகவர்களை நியமித்து ஸ்வைப் கார்டுகள் மூலம் செயல்படும் இந்த வங்கிகளை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் சுயேச்சையான முகவர்கள் மூலம் செயல்படவுள்ள புதிய வகை கந்து வட்டிக் கம்பேனிகளான இவற்றை நடத்த வங்கித் துறையோடு எந்த தொடர்பும் இல்லாத தொலைதொடர்பு நிறுவனங்களும், பெட்ரோலிய நிறுவனங்களும் முன்வந்துள்ளன.
மோடி அறிவித்திருக்கும் ஜன் தன் யோஜனா திட்டம் குறைந்தபட்ச பொருளாதாரம் உள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் சுமார் ஆறு கோடி குடும்பங்களை குறிவைப்பதாகவும், வறுமைக்கோட்டுக்கு மேலே வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கும் சுமார் ஏழரை கோடி குடும்பங்களை பணம் வழங்கும் வங்கிகள் குறிவைப்பதாகவும் சொல்கிறது எகனாமிக் டைம்ஸ்.
இவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருப்பது மானியங்களை நேரடியாக மக்களின் கையில் ஒப்படைப்பதோடு, ஊழலையும் கட்டுப்படுத்தும் என்கிறார்கள். ஊழலை மட்டுப்படுத்துவோம் என்று அவர்கள் சொல்வதன் பின்னே மானிய வெட்டு என்கிற பெயரில் ரேசன் கடைகளை இழுத்து மூடி பொது விநியோக முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்பது உலக வங்கியின் கட்டளை. முதலில் மக்களை வெளிச்சந்தை விலைக்கு பொருட்களை வாங்கப் பழக்குவது, அப்படிப் பழகும் வரை வங்கிக் கணக்குகளில் கொஞ்சம் கூடக் குறைய பணத்தை வரவு வைத்து விட்டு பின் முற்றிலுமாக நிறுத்துவதே அவர்களின் நோக்கம்.
இதை நாங்கள் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் ரேசன் மண்ணெண்ணையை வெளிச்சந்தை விலைக்கு விற்பது, மானியத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பது என்கிற திட்டம் முன்னோட்டம் பார்க்கப்பட்டது. அரசே நடத்திய இந்த வெள்ளோட்டத்தின் முடிவில் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் குறித்த காலத்தில் மக்கள் மண்ணெண்ணை வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளனர். பலர் விறகு அடுப்புகளுக்குத் திரும்பியுள்ளனர்.
ஒருபக்கம் பொது வினியோக முறையை ஒழித்துக்கட்டுவது; இன்னொரு பக்கம்  இன்னமும் நிதிச் சூதாட்டச் சந்தையில் இணையாமல் தனித்து இயங்கும் கிராமப் பொருளாதாரத்தை நிதிச் சந்தையில் இணைப்பது, ஏழை மக்களின் வியர்வைப் பணத்தை முதலாளிகளின் நிதிச் சூதாட்டக் களத்தில் குவிப்பதே இந்த திட்டங்களின் நோக்கம். வேறு வேறு பெயர்களில் அறிவிக்கப்படும் நிதித் திட்டங்களின் ஒரே இயங்கு திசை இது தான். மோடியென்றாலும் கேடியென்றாலும் வேறுபாடு இல்லையல்லவா அது போல!
-    தமிழரசன்.வினவு.கம 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக