வியாழன், 11 செப்டம்பர், 2014

பார்ப்பனியத்தை வீழ்த்தாமல் குழந்தைத் திருமணம் உட்பட எந்த பிற்போக்குத் தனத்தையும் வீழ்த்த முடியாது

லகில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் மூன்றில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக யூனிசெப் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ‘ஜப்பானில் கல்யாணராமன்’ நடத்திய கூத்துகளை வெளியிடுவதில் மும்முரமாக இருந்த ஊடகங்கள் இந்த செய்தியை  கண்டு கொள்ளவில்லை.
குழந்தை திருமணம்
குழந்தைத் திருமணம்
உலகில் நடக்கும் குழந்தைத் திருமணங்களில் கிட்டத்தட்ட பாதி அதாவது 42% தெற்காசியாவில் நடப்பதாகவும், தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 33% நடப்பதாகவும், மற்ற தெற்காசிய நாடுகளின் பங்கு 9% ஆகவும் உள்ளது எனத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.
இந்தியாவில் திருமணமான பெண்களில் (20 முதல் 49 வய்து வரை) 58 சதவீதத்தினர் தனக்கு குழந்தையாக இருக்கும் போதே திருமணம் செய்து வைத்து விட்டனர் என்று தெரிவித்துள்ளனர். குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு முறையான மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

பீகாரில் அதிக அளவில் (68%  திருமணங்கள்) குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன். மற்ற ‘முன்னோடி’ மாநிலங்களாக ராஜஸ்தான், பீகார், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளன. இங்கும் அதிக அளவில் அதாவது 51.9% முதல் 68.2 % வரை குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த மாநிலங்களில் 20-24 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களில் இரண்டில் ஒரு பெண் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டவர் என்கிறது அந்த அறிக்கை.
தென்னிந்தியாவில் ஒப்பீட்டளவில் குழந்தைத் திருமணங்கள் குறைவாக இருக்கிறது. அதே சமயத்தில் கேரளாவில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளது அந்த அறிக்கை. கேரளாவில் வடஇந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அதிகரித்து வருவதால் இந்த புள்ளிவிவரம் உயருவதாக கூறுகிறார் யூனிசெஃபின் இந்திய அதிகாரி டோரா ஜியுஸ்டி.
இந்த புள்ளிவிவரத்தை நோக்கும் போது பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்கும் வடஇந்திய இந்தி மாநிலங்கள் பிற்போக்கு பழக்கங்களுக்கு பலியாகி வீழ்ந்து கிடப்பது தெரிகிறது. அதே சமயம் சுயமரியாதை இயக்கம் போன்ற பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியம் கொண்ட பழைய சென்னை மாகாண மாநிலங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறியுள்ளன என்பதையும் இது காட்டுகிறது.
குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமண ஒழிப்பு கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை
குழந்தைத் திருமண ஒழிப்பு கண்ணுக்கெட்டிய தூரத்தில் கூட இல்லை என்கிறது அந்த அறிக்கை. “குழந்தைத் திருமணம் கடந்து இருபது ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு சதவீதம்தான் குறைந்துவருகிறது. இப்படியே போனால் குழந்தைத் திருமணத்தை முற்றிலுமாக ஒழிக்க ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஆகும்” என்று கவலை தெரிவித்துள்ளார் யுனெஸ்கோவின் இந்திய அதிகாரி டோரா.
குழந்தைத் திருமண ஒழிப்பு குறித்து அக்கறை கொண்டவர்கள் இந்திய வரலாற்றில் குழந்தைத் திருமண ஒழிப்பு தொடர்பாக இதுவரை நடந்துள்ள நிகழ்வுகளை திரும்பிப் பார்ப்பது அவசியம். அப்பொழுது தான் உண்மையான எதிரியை இனங்கண்டு எதிர்த்து போராட முடியும்.
ந்தியாவில் நடக்கும் குழந்தைத் திருமணங்களுக்கு வேதகாலம் தொடங்கி இன்று வரை ஒரு நெடிய பாரம்பரியம் இருக்கிறது. ‘பெண்குழந்தை பூப்பெய்தும் முன் திருமணம் செய்து வைக்கா விட்டால் பெற்றோர் நரகத்திற்கு செல்ல நேரிடும்’ என்றும் ‘பூப்பெய்திவிட்ட பின்னர் கணவன் இல்லை என்றால் பெண்கள் நடத்தை கெட்டு விடுவார்கள்’ என பலப்பல காரணங்களை கூறி மக்களை நம்ப வைத்திருக்கிறது பார்ப்பன இந்துமதம்.
அதே போல இதை எதிர்த்த போராட்டத்திற்கும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. குறிப்பாக இன்று நடைமுறையில் உள்ள குழந்தைத் திருமண தடைச் சட்டமும் அதற்கு முந்தைய சம்மத வயது சட்டமும் எளிதில் நிறைவேறி விடவில்லை. பெரியார், மலபாரி போன்றவர்கள் தொடர்ந்து இதற்காக குரல்கொடுத்து வந்தார்கள்.
1889-ம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த புலோமினி என்ற 11 வயது சிறுமியுடன் அவளது 31 வயது கணவன் உடலுறவில் ஈடுபட்டு கொலை செய்தான். சிறுமிகளை திருமணம் செய்து உடலுறவு கொள்ளுதல் என்பது அன்று வழக்கத்தில் இருந்த ஒன்று. இதைத் தொடர்ந்து குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடுவதை தடை செய்யக் கோரினர்கள் முற்போக்காளர்கள். இந்த விவகாரம் விவாதப் பொருளாகியது.
ஆங்கிலேய அரசு சம்மத வயது சட்டத்தை (Age of Consent Act, 1891) தாக்கல் செய்தது. இதன்படி 12 வயதுக்கு உட்பட்ட பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்முறை என்று அறிவித்தது. இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். திருமண வயதை அல்ல, உடலுறவில் ஈடுபடுவதற்கான வயதைத் தான் அரசு உயர்த்தியிருந்தது.
திலகர்
திலகர்
குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்றதும் வெகுண்டெழுந்தார்கள் இந்து ‘தேசியவாதிகள்’. இந்த சட்டம் இந்து மதவிவகாரத்தில் தலையிடுவதாகவும், இது ஒரு  ஆபத்தான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்றும் கூறி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர் யார் தெரியுமா? ஆர்.எஸ்.எஸ்-ன் மூதாதையர்களின்  ஒருவரும் மாபெரும் தேசியவாதி என்று பார்ப்பன இந்துமத வெறியர்களால் பாராட்டப்படும் ‘லோகமானிய’ திலகர் தான் அவர்.
திலகர் தன்னுடைய கேசரி இதழில் இந்தச் சட்டத்தை எதிர்த்து கட்டுரைகளை எழுதினார். இந்து மதத்தின் அடிப்படை கூறுகளில் கைவைப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று  முழங்கினார். மேலும் இந்த சட்டத்திற்காக போராடிய மலபாரி என்பவர் பார்சி இனத்தவர் என்பதால் அவர் இந்து மதவிவகாரங்களில் தலையிடாமல் தன்னுடைய பார்சி இனப் பெண்கள் விசயத்தில் மட்டும் கவனம் செலுத்துமாறு அவரை கண்டித்தார் திலகர்.
விளக்குமாற்றுக்கு பட்டுகுஞ்சம் கட்டுவது போல இன்று திலகரை தேசியவாதியாக காட்ட இந்துத்துவா ஆதரவாளர்கள் பகீரத முயற்சி செய்கிறார்கள். அரவிந்தன் நீலகண்டன் ஆங்கிலய அரசு கொண்டு வந்ததால் தான் அந்த சட்டத்தை திலகர் எதிர்த்தார் என்று  கேலிக்குரிய வாதங்களை வைத்தாவது திலகருக்கு முட்டுக்கொடுக்க முடியுமா என்று பார்க்கிறார்.
அன்றைய சட்டசபைகளில் இருந்த பார்ப்பன இந்துமத வெறியர்களாலும் அந்த சட்டம்  எதிர்க்கப்பட்டது. ஆயினும் இவர்களின் எதிர்ப்புகளை மீறி சட்டம் நிறைவேறியது.
பின்னர் 1929-ல் திருமண வயதை 10 லிருந்து 14 ஆக அதிகரிக்கும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கும் இந்து சனாதனவாதிகள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் சின் மூதாதையர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். சம்மத வயது  சட்டத்தை திலகர் எதிர்த்தாரென்றால் குழந்தைத் திருமண தடுப்பு சட்டத்தை மாளவியா, முன்ஷி போன்ற இந்து மதவாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்த சட்டத்திற்கு எதிராக அன்றைய இந்து மன்னர்கள், சங்கராச்சாரிகள் பிரிட்டிஷ் அரச பிரதிநிதியிடம் தூது சென்றார்கள். தி இந்து உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகள் குழந்தைத் திருமணத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். சில இஸ்லாமிய தலைவர்களும் இந்த சட்டத்திற்கு எதிராக மனு செய்துள்ளார்கள்.
‘மதத்திற்கு ஆபத்து’ என்பது முதல் ‘பெண்கள் ஒழுக்கம் கெட்டுவிடுவார்கள்’ என்பது வரை பலவிதமான காரணங்களை கூறி பார்ப்பனர்கள் எதிர்த்தார்கள். சிலர் இன்னும் நுணுக்கமான வழிகளில் பல்வேறு சூழ்ச்சிகளுடன் சட்டத்தை ஒழிக்க களமிறங்கினார்கள். குறிப்பாக மருத்துவ அடிப்படையில் குழந்தைத் திருமணம் தவறு தான் என்று ஏற்றுக் கொண்டுவிட்டு ஆனால் ‘பார்ப்பன இந்து மதம் குழந்தைத் திருமணம் செய்ய வலியுறுத்துவதால் தடைசட்டம் கொண்டு வரக்கூடாது, இது மதவிவகாரம்’ என்று சிலர் எதிர்த்தனர். இன்று அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனை வரையில் பார்ப்பன இந்துத்துவவாதிகளின் வாதம் இதுதான்.
மூஞ்சே
பி. எஸ். மூஞ்சே
இந்த காலகட்டம் பெரியாரின் சுயமரியாதை இயக்க காலகட்டமாகும். இவர்களை பெரியார் அம்பலப்படுத்தினார். குடியரசு இதழில் இது குறித்து பல கட்டுரைகளை எழுதினார். “பார்ப்பனர்கள் சட்டத்தை எதிர்த்து கூட்டம் போட்டால் அதே இடத்தில் நீங்களும் சட்டத்தை ஆதரித்து கூட்டம் போடுங்கள்” என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
“குழந்தைத் திருமண தடுப்பு விஷயமானது சுமார் 20 வருடத்திற்கு முன்பிருந்து சட்டசபைகளில் பிரஸ்தாபித்து வந்திருப்பது யாவருக்கும் தெரியும். ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் வைதீகர்கள் என்பவர்களும், இந்து மதத்தை பின்பற்றுகிறவர்கள் என்பவர்களும், தேசியவாதிகள் என்பவர்களும் ஆட்சேபணை செய்துகொண்டே தான் வந்திருக்கிறார்கள். இந்த சமயத்திலும் தேசியவாதிகளே பெரும் முட்டுக்கட்டையாக நின்று எவ்வளவோ சூழ்ச்சிகளுடன் ஆட்சேபித்து பார்த்திருக்கின்றார்கள்.
‘பழுத்த தேசாபிமானிகளும் பிரபல தேசியத் தலைவர்’ களுமாகிய திருவாளர்கள் மாளவியா, கேல்கார், மூஞ்சி, எம்.கே.ஆச்சாரியார், கே.வி.ரங்கசாமி ஐயங்கார், ஏ.ரெங்கசாமி ஐயங்கார், மோதிலால் நேரு ஆகியவர்கள் எல்லாருமே இந்த இருபதாம் நூற்றாண்டில் இடையூறாக இருந்திருக்கிறார்கள் …..
மேற்கூறிய எல்லா தேசியவாதிகளும் மசோதாவின் தத்துவத்தை ஒப்புக்கொள்வதாக சொல்லிக்கொண்டே ஆட்சேபித்திருக்கிறார்களென்றால் இனி ஒப்புக்கொள்ள முடியாத விசயத்தில் இவர்கள் ஆட்சேபணை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பார்த்தால் விளங்காமல் போகாது.”
திரு மாளவியா அவர்கள் ஆட்சேபணைக்கு சொல்லப்பட்ட காரணமென்றால் “14 வயதுக்கு மேற்பட்டு கல்யாணம் செய்வது நல்லது தான். ஆனாலும் ராஜியை முன்னிட்டு 12 வயதாக இருக்க வேண்டும்” என்றார்.
திரு. மூஞ்சே சொன்ன ஆட்சேபணையை கவனிப்போம். இவர் பார்ப்பன – பார்ப்பன மாணவர்களை மாமிசம் சாப்பிடவேண்டுமென்று சொல்பவர் – வைத்தியர் – வைத்திய சாஸ்திரப்படியும் உடற்கூறு சாஸ்திரப்படியும் பெண்களுக்கு 18 வயதுக்கு முன் விவாகம் செய்வது கெடுதி என்ற அபிப்பிராயம் கொண்டவர். அப்படி இருந்தும் இந்த மசோதா விசயத்தில் 12 வயதுக்கு மேல் கலியாண வயது இருக்கக் கூடாது என்று வாதம் செய்தார்.
மதன்மோகன் மாளவியா
மதன்மோகன் மாளவியா
திரு கேல்கர் திலகரின் ஸ்தானத்திற்கு வந்தவர். அவரோ மசோதாவின் தத்துவத்தை ஒப்புக்கொள்வதாக சொல்லி ஆனால் வைதீகர்கள் இஸ்டத்திற்கு விரோதமாய் சட்டம் செய்யக்கூடாது என்றனர். இனி சென்னை “தலைவர்களை” பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமிருக்காதென்றே நினைக்கிறோம்…
எனவே நமது நாட்டிற்கென்றோ சமூகத்திற்கென்றோ எவ்வித திருத்தம் கொண்டு வந்தாலும் இந்தக் கூட்டத்தவர்களே அதாவது பார்ப்பனர்களே ஒருபுறம் தேசியத்தின் பெயராலும், மற்றொரு புறம் மதத்தின் பெயராலும், மற்றொரு புறம் சாஸ்திரத்தின் பெயராலும், மற்றொரு புறம் மனசாட்சியின் பெயராலும் தொல்லை விளைவித்து வருவதை வெகுகாலமாக பார்த்து வருகின்றோம்.”
முன்காலத்தில் அதாவது ‘இந்து’(மூட) ராஜாக்கள் அரசாங்கத்திலும் இப்படியே செய்துவிட்டு இப்பொழுது வெள்ளைக்கார (அறிவாளிகள்) அரசாங்கத்திலும் இப்படியே செய்து நமது சமூகத்தை மிதித்துக்கொண்டிருக்க கருதுவதை இனி அரை நிமிஷமும் நம்மால் சகித்துக்கொண்டிருக்க முடியாது என்பதை வெளிப்படையாகவும் உறுதியாகவும் சொல்லித்தீர வேண்டி இருக்கிறது அதற்காகவே சர்க்காருக்கு ஜே! என்றும் பார்ப்பனீயம் வீழ்க! என்றும் சொல்லுகின்றோம்.
- குடியரசு – தலையங்கம்- 29.09.1929
வேத விற்பன்னர்கள்
தமிழகத்தை பொறுத்தவரை பார்ப்பனர்கள் இச்சட்டத்தை மூர்க்கமாக எதிர்த்துள்ளார்கள்
தமிழகத்தை பொறுத்தவரை பார்ப்பனர்கள் இச்சட்டத்தை மூர்க்கமாக எதிர்த்துள்ளார்கள்.  இந்த மசோதாவிற்கு எதிராக பேசிய அன்றைய பாராளுமன்றத்தின் தமிழக பிரதிநிதியும், பார்ப்பன வருணாசிரம ஆதரவாளருமான ஆச்சாரியார் “பால்ய விவாகமில்லா விட்டால் உண்மையான கற்பு சாத்தியமில்லை”, “பெண்களின் வாழ்க்கை நாசமடைந்துவிடும்”, என்றும் குழந்தைத் திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் கைது செய்யப்படும்படி சட்டவிதி இருப்பதை காட்டி “புருஷர்களுக்கு சிறைத்தண்டனை அளித்து விடுவதால் பெண்கள் நடத்தையும் அதிக கேவலமாக மாறிவிடும். பாலிய விவாகம் இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது அசாத்தியம்” என்றும் பேசியிருக்கிறார். இதை அன்றைய சுதேசமித்திரன் நாளேடு பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டி குடியரசில் கண்டித்து எழுதியுள்ளார் பெரியார்.
“இது பார்ப்பனர்களுக்காக என்றோ அல்லது அய்யங்கார் கூட்டத்திற்காக என்றோ திருவாளர் ஆச்சாரியார் பேசி இருப்பாரானால் நமக்கு அதைப்பற்றி அவ்வளவு கவலையில்லை. ஆனால் நம்மெல்லோருக்குமே பிரதிநிதி என்கிற முறையில் பேசியிருப்பதால் நாம் அதை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை…
ஒரு சமயம் தாம் மற்றவர்களைப் பற்றித்தான் சொன்னதாக சொல்வாரானால் தம் சமூகத்துப் பெண்களும் பக்குவமடைந்து விட்டால் அவர்கள் கலியாணமில்லாமல் கற்புடனிருக்க முடியாதென்று கருதி சொன்னவராகவே நினைக்க வேண்டியிருக்கிறது. இதனால் அவர் எப்படியும் பெண்கள் சமூகத்தையே இழிவுபடுத்தியதாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது.
திரு. ஆச்சாரியார் இப்படி சொல்ல நேர்ந்தது பார்ப்பனியத் தன்மையேயொழிய வேறல்ல. ஏனெனில் பார்ப்பன தன்மையான இந்து மதம் என்பதில் பெண்கள் காவலில்லாமல் கற்புடனிருக்க முடியாதென்றே சொல்லப்படுகிறது. உதாரணமாக இந்துக்கள் என்பவர்கள் கல்யாண காலத்தில் கல்யாணப் பெண்களுக்கு கற்புக்கு உதாரணம் காட்டி உறுதிவாங்க வழங்கும் மகா பதிவிரதையென்று சொல்லப்படும் அருந்ததி என்னும் ‘உத்தம ஸ்திரீ’ யின் யோக்கியதையை பார்த்தால் மற்ற பெண்களுடைய நிலைமை தானாகவே விளங்கும். அதாவது ஒரு சத்தியம் சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் அருந்ததி சொல்வதாக :-
“ஸ்த்ரீகளுக்கு மறைவான இடமும் புருஷர்களின் சந்திப்பும் கிடைக்கும்வரையில் தான் ஸ்திரீகள் பதிவிரதைகளாகாயிருக்க முடியுமாதலால் பெண்களை வெகு ஜாக்கிரதையாக காவல்காக்க வேண்டும்”.
என்பதாக தேவர்களிடத்தில் சொல்லி சத்தியத்தை காப்பாற்றினதாக இந்துமதம்- அதிலும் சைவர்களுக்கு ஆதாரமான மகாசிவபுராணம் சொல்லுகிறது.
இதற்கு ஆதாரமாக மற்றொரு இடத்திலும் அதாவது திரௌபதையும் அருந்ததி சொன்னதைத்தான் சொல்லி சத்தியத்தை நிரூபித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது:
“ஆண்கள் இல்லாதிருந்தாலொழிய பெண்கள் கற்புடையவர்களாக இருக்க முடியாது” என்பதாக பாரதத்தில் இதைப்பற்றி சொல்லும் போது “வசிஷ்டர் நல்லற மனைவியை அணையா” அதாவது அருந்ததிக் கொப்பானவள் சொன்னாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த கொள்கைகளையுடைய இந்துமத பிரதிநிதியிடம் அதிலும் வருணாசிரம தர்மியிடம் வேறு என்ன எதிர்பார்த்திருக்க முடியும்.
புருஷர்கள் சிறைக்குப் போய்விட்டால் பெண்களின் நடத்தை கேவலமாகி விடுமென்றும் சொல்கிறார். இவை எவ்வளவு தூரம் பெண்களை இழிவுபடுத்துவதாகிறது. இந்துமதமும், வேதமும், புராணமும், வைதீகமும், வருணாசிரமும், பெண்களை அடிமைப்படுத்துவதையும் கேவலப்படுத்துவதையும் அஸ்திவாரமாக கொண்டதால் இம்மாதிரியான வார்த்தை நமது இந்திய சட்டசபை பிரதிநிதிகளிடமிருந்து வருவது ஒரு அதிசயமல்ல.
உதாரணமாக கடவுளுடைய அவதாரமாக சொல்லப்படும் ராமனே கடவுள் பெண்சாதியின் அவதாரமென்று சொல்லப்படும் சீதையின் கற்பில் சநதேகப்பட்டு அவள் நெருப்பில் பொசுக்கப்படவும் பூமியில் புதைக்கப்படவும் செய்ததிலிருந்து ……. திரு ஆச்சாரியார் மற்ற பெண்கள் புருஷனை விட்டு நீங்கியிருந்தால் ஒழுக்கம் கெட்டு விடுவார்கள் என்று சொல்வதில் ஆச்சரியமொன்றுமில்லை.
-குடியரசு – தலையங்கம் -23.09.1928
அன்று பெரியார் உள்ளிட்ட சீர்த்திருத்திருத்தகாரர்கள் குழந்தைத் திருமண தடை சட்டத்திற்கு எதிராக முட்டுக்கட்டை போட்ட அன்றைய இந்துத்துவாவினருடன் போராடிக் கொண்டிருக்கும்போது பார்ப்பன பத்திரிகைகள் குழந்தைத் திருமணத்தை ஆதரித்து எழுதின. சுதேசமித்திரன் பத்திரிகை சத்தியமூர்த்தி, ஆச்சாரியார் போன்றோரின் கருத்துக்களை வரவேற்று எழுதியிருக்கிறது. போராட்ட காலத்தில் மவுண்ட் ரோடு மகா விஷ்ணு “தி இந்து” பத்திரிகை 10 அல்லது 12 வயது மணமகள் தேவை என விளம்பரம் செய்தது.
இதை எதிர்த்துக் கேட்ட சுயமரியாதை இயக்கத்தவர்களுக்கு பின்வருமாறு அயோக்கியத்தனமாக பதிலளித்தது தி இந்து.
“10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாக காணப்படுவது விவாகச் சடங்கல்ல. அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் விட்டு கதவு சாத்துகின்றோமே அது தான் விவாகம்.”  என்று திமிர்த்தனமாக கூறியது.
சீர்திருத்தக்காரர்கள் இதற்கு என்ன மறுமொழி சொல்லவேண்டும் என்பதையும் கோடிட்டுகாட்டி ஒரு உரையாடல் போல பின்வருமாறு எழுதுகிறார் பெரியார்.
“ஓ இந்துவே 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வது போல கண்ணுக்கு தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால் அந்த 10,12 வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாக பெயர் செய்து மொட்டையடித்து முக்காடு போட்டு மூலையில் உட்கார வைப்பதேன்? அது கூட உங்கள் நிச்சயதார்த்த சடங்கில் சேர்ந்த நிபந்தனையா?” என்று கேட்டார்.
உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பனத்தி போல “இந்து” இதற்கு ஒரு மறுமொழி சொல்லாமல் வாயை மூடிக்கொண்டது. மற்றும் பல சமயங்களில் அது நம்மவர்களுக்கு விரோதமாக எவ்வளவோ கொலை பாதகத்திற்கு ஒப்பான கொடுமைகளைச் செய்திருக்கின்றது. செய்கின்றது. செய்யக் காத்திருக்கிறது.”
-குடியரசு தலையங்கம் 11.03.1928
இன்று ஆர்.எஸ்.எஸ் அம்பிகளால் விதந்தோதப்படும் பாலகங்காதர திலகர், முன்ஷி, மாளவியா போன்ற பார்ப்பன இந்துமதவாதிகளின் உண்மையான முகம் இதுதான்.
குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடக் கூடாது, 14 வயதுக்குள் திருமணம் செய்யக்கூடாது போன்ற இன்று நாம் சாதாரணமாக நினைக்கும் விசயங்களுக்கே கூட திலகர் போன்ற பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான போராட்டம் தேவைப்பட்டிருக்கிறது. பார்ப்பன பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக சளைக்காமல் போராடியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
இன்று பார்ப்பன பாசிசம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் நிலையில் திலகரின் வாரிசுகள் தெருவெங்கும் விநாயகரை வைத்து பார்ப்பனீயத்திற்கு உயிரூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை முறியடித்து பிற்போக்குத்தனத்தின் ஆணிவேராக இருக்கும் பார்ப்பனியத்தை வீழ்த்தாமல் இந்த மண்ணில் குழந்தைத் திருமணமல்ல, எந்த பிற்போக்குத் தனத்தையும் வீழ்த்த முடியாது.
மேலும் படிக்க.. vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக