செவ்வாய், 23 செப்டம்பர், 2014

பாஜக பிரெஞ்சு கூட்டணியில் டெல்லி மெட்ரோ ஊழல்

அல்ஸ்டோம்
டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒப்பந்தம் பெறுவதற்காக ‘அல்ஸ்டோம் இங்கிலாந்து’ என்ற பிரெஞ்சு ரயில் மற்றும் டர்பைன் உற்பத்தி நிறுவனத்தின் இங்கிலாந்து கிளை லஞ்ச ஊழலில் ஈடுபட்டது இங்கிலாந்து அரசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை டெல்லி மெட்ரோ பணி, மற்றும் போலந்து, துனிசியா நாடுகளில் டிராம் சேவை கட்டுமானங்களுக்கான ஒப்பந்தப் பணி பெறுவதற்காக ஊழல், ஊழலுக்கான சதி செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக இந்நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் முதலாளித்துவத்துவத்திற்கே உரிய முறைகளில் ஆட்சியாளர்களை ஊழல்மயப்படுத்தி வளர்ந்துள்ளது இந்நிறுவனம்.
டெல்லி மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டத்தில் ரயில் கட்டுப்பாடு, சிக்னல் மற்றும் தொலைதொடர்பு கட்டுமானம் போன்ற பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக 30 லட்சம் யூரோக்களை (சுமார் ரூ 24 கோடி) லஞ்சமாக கொடுத்துள்ளது அல்ஸ்டோம்.
இதை அடித்தளமாக கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்தடுத்த பணிகளுக்கும் ஒப்பந்தங்களை பெற்றுள்ளது இந்நிறுவனம்.
இந்த லஞ்சப்பணம் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆலோசனை கட்டணம் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தீவிர மோசடிகளை விசாரிக்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது. செப்டமர் 12, 2001-ல் ரூ 1.98 கோடி இந்தோ-யூரோப்பியன் வென்சர்ஸ் பிரைவைட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திற்கு மே 3, 2002 ல் 31 லட்சம் யூரோ குளோபல் கிங் டெக்லானஜி நிறுவனத்திற்கும் ஆலோசனை கட்டணம் என்ற பெயரில் லஞ்சம் கொடுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் கார்பரேசன் என்ற அரசு நிறுவனம் மத்திய மற்றும் டெல்லி யூனியன் பிரதேச அரசு ஆகியவற்றால் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும். நிர்வாக ரீதியில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தான் அதை கட்டுப்படுத்துகிறது. தற்போது ஊழல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 2000-ம் ஆண்டில் ‘உத்தமர்’ வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ தான் மத்தியில் ஆட்சியிலிருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது டெல்லி மெட்ரோவுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்தவர் அத்வானி, மெட்ரோவை கட்டுப்படுத்தும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தவர் கர்நாடக சுயம்சேவக் ஆனந்த் குமார். அப்போதைய டெல்லி மெட்ரோ சேர்மேனாக இருந்தவர் பா.ஜ.க வின் அப்போதைய டில்லி மாநில தலைவர் மதன்லால் குரானா. ஆக முறைகேடு நடந்த காலத்தில் பா.ஜ கும்பல் தான் டெல்லி மெட்ரோவை கட்டுப்படுத்தி இயக்கியிருக்கிறது. இவர்களின் ஒப்புதலுடன்தான் லஞ்சத்தின் மூலம் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது அல்ஸ்டோம்.
டெல்லி மெட்ரோ திட்டம் கொண்டுவரப்பட்டபோது, அப்போதைய டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் இதற்கு உரிமை கொண்டாடுவதாக புலம்பிய பாஜகவினர் இது முழுக்க முழுக்க பா.ஜ.க ஆட்சியின் சாதனை என்று சொந்தம் கொண்டாடினர். இப்போது அந்த சொந்த சாதனையை வேதனையாக நினைத்து மறக்க முயற்சிக்கின்றனர்.  கேடி மோடியைக் கொண்டாடும் ஊடகங்களும் இது குறித்து கேள்வி எழுப்பாமல் கள்ள மவுனம் சாதித்து வருகின்றனர்.
இந்த ஊழல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்போதைய டெல்லி மெட்ரோ நிர்வாக இயக்குநர் ஸ்ரீதரன் தாங்கள் பிரெஞ்ச் அல்ஸ்டோம் நிறுவனத்துடன் தான் கூட்டு வைத்திருந்ததாகவும் அதன் இங்கிலாந்து கிளையிடம் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் கூறி சப்பைகட்டு கட்டியிருக்கிறார். அதுபோல குற்றச்சாட்டில் பணபரிவர்த்தனை நடந்ததாக கூறப்படும் இந்தோ யூரோப்பியன் வென்ச்சர்ஸ், குளோபல் கிங் டெக்னாலஜி குறித்து தான் கேள்விபட்டது இல்லை என்று ஒரே போடாக போட்டுள்ளார். இவர்தான் மெட்ரோ ரயில் திட்டத்தை மிகவும் திறமையுடன் நிறைவேற்றிக் காட்டியதாக புகழப்படுபவர். இந்தத் திட்டத்துக்காக பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் கைமாறியது பற்றிக் கூட தெரியாமல் இதை திறமையுடன் நிறைவேற்றியிருக்கிறார். சென்னை மெட்ரோவிலும் இவர்தான் அவ்வப்போது மேற்பார்வை செய்து வருகிறார். மேலும் அப்துல் கலாம் வரிசையில் உழைத்து முன்னேறிய நட்சத்திரங்கள் வரிசையில் இந்த ஸ்ரீதரும் முக்கியமானவர்.
டெல்லி மெட்ரோ திட்ட செலவுகளில் 60% ஜப்பான் கடனாக கொடுத்துள்ளது. கடனை நம் தலையில் கட்டிவிட்டு, திட்ட ஆலோசனை, தொழில்நுட்பங்கள், ஒப்பந்தங்கள் மூலம் ஏகாதிபத்திய நாடுகளே மீண்டும் அதை கொள்ளையடித்து விடுகின்றன். ஆக கடனாகவும், ஒப்பந்தங்களாகவும் என இரட்டை லாபம் அடைகின்றன ஏகாதிபத்தியங்கள். தரகு முதலாளிகள் இவர்களின் பங்காளிகாளாக இருந்து கூட்டுக் கொள்ளையடிக்கிறார்கள். இவர்களால் அளிக்கப்படும் எலும்புத் துண்டுகள் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்த்தினருக்கு அவ்வப்போது அளிக்கப்படுகிறது.
ஏதோ நாட்டை உய்விக்க்க வந்த திட்டங்கள் போல ஆளும்வர்க்கங்களால் பிரச்சாரம் செய்யப்படும் இது போன்ற திட்டங்கள் ஏகாதிபத்திய நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் கொழுக்கவே பயன்படுகின்றன. மறுபுறம் உழைக்கும் மக்களோ அத்து கூலிக்காக தகர கொட்டகைகளில் தங்கவைக்கப்பட்டு இதே மெட்ரோ திட்டங்களில் உயிரை பணயம் வைத்து வேலைவாங்கப்படுகிறார்கள்.
மேலும் பொதுத்துறை-தனியார் துறை கூட்டு என்ற பெயரில் கொண்டு வரப்படும் மெட்ரோ திட்டங்கள் பொதுபோக்குவரத்தை அரசிடமிருந்து தனியாருக்கு மாற்றும் சதியையும் கொண்டிருக்கிறது. சில மும்பை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரிலையன்ஸ் மெட்ரோ என்றுதான் சின்னங்களே பொறிக்கப்பட்டுள்ளன. அதுபோல கட்டண நிர்ணயமும் தனியாரின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வியையும், மருத்துவத்தையும், தண்ணீரையும் மக்களிடமிருந்து பறித்து முதலாளிகளிடம் கொடுத்துவிட்டு, முதலாளிகளின் வளர்ச்சிக்காக கொண்டுவரப்படும் பெரிய பெரிய கட்டிடங்களையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் காட்டி வளர்ச்சி என்று நம்மை நம்பச்சொல்கிறது ஆளும்வர்க்கம். உள்கட்டமைப்பு திட்டங்களில் நடக்கும் ஊழல் மட்டுமல்ல மக்கள் பணத்தில் முதலாளிகளுக்காகச் செய்யப்படும் உள்கட்டமைப்பு திட்டமே ஊழல் தான்.
அல்ஸ்டோம் நிறுவனம் மீதான யுகே தீவிர குற்ற அலுவலகத்தின் விசாரணை 2011-ல் துவங்கியது.  லஞ்ச ஊழலை தடுக்கத் தவறியதற்காக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் அல்ஸ்டோம் நிறுவனத்துக்கு 2.56 கோடி யூரோ (சுமார் ரூ 20 கோடி) அபராதம் விதித்திருந்ததைத் தொடர்ந்தே இங்கிலாந்தில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது. அல்ஸ்டோமின் கன்னட்டிகட் பிரிவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் நிறுவனத்தின் சார்பாக லஞ்சம் கொடுத்ததாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.  3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் மூன்று யுகே இயக்குனர்களை லஞ்சம், பணப் பரிமாற்ற மோசடி, போலிக் கணக்கு ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்திருந்தது. அல்ஸ்டோமின் ஜெர்மன் போட்டியாளர் சீமன்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்து ஒப்பந்தப் பணிகளை வெல்ல முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் $160 கோடி (சுமார் ரூ 9,600 கோடி) அபராதம் கொடுத்து தப்பித்துக் கொண்டது.
2G அலைக்கற்றை போன்ற விவகாரங்கள் இந்தியா போன்ற முதிர்ச்சியடையாத நாடுகளில்தான் நடக்கின்றன என்று பித்தலாட்டம் செய்யும் அதியமான் போன்ற முதலாளித்துவ ஆதரவாளர்களின் முகத்தில் அறைவது போல முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் நிறுவனங்களின் ஊழல் செயல்பாடுகள் அம்பலமாகியுள்ளன.
மேலும் படிக்க vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக