வியாழன், 25 செப்டம்பர், 2014

சகாயத்துக்கு அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்காது ?

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கனிம வள முறைகேடு குறித்து விசாரிக்க உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.கிரானைட் உட்பட கனிம வள முறைகேடு குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சிறப்பு அதிகாரியாக நியமிக்க உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள், கனிம வள கொள்ளை குறித்து விசாரிக்க, சகாயத்தை சிறப்பு அதிகாரியாக நியமித்தும், அவருக்கு தேவையான உதவிகளை, அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அவிங்களே பால்ல தண்ணி கலந்து குழந்தைகளை வாட்டுராய்ங்க அவிங்க போயி ஒத்துழைப்பு ?
சகாயம், கனிம வள முறைகேடு குறித்து விசாரித்து, இரண்டு மாதங்களுக்குள், நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.இந்த உத்தரவு, கனிம முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை திரும்ப பெறக் கோரி, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சகாயம் விசாரணையை துவக்க உள்ளார்.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:சகாயம் விசாரணை நடத்துவதை விரும்பாமல் தான், அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மனு தள்ளுபடியாகி விட்டது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சகாயம் உடனடியாக, விசாரணையை துவக்கலாம். அவர் விசாரணையை துவக்க, அரசு தரப்பில் ஆணை எதுவும் பிறப்பிக்கப்படாது.அரசு கமிஷன் நியமித்தால் மட்டுமே, அரசாணை வெளியிடப்படும். அதேபோல், சகாயம் தனக்கு எந்த விதமான உதவி வேண்டும் என, அரசுக்கு கடிதம் எழுதினால், அதை அரசு வழங்கும்.அவர் எந்த மாவட்டத்தில் விசாரணைக்கு செல்கிறாரோ, அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினால், மாவட்ட நிர்வாகம் சார்பில், அவர் கேட்கும் உதவிகள் வழங்கப்படும். அவர் மதுரை கலெக்டராக இருந்தபோது, கிரானைட் கொள்ளை குறித்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அவர் கலெக்டராக இருந்ததால், அதிகாரிகள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.தற்போது, அரசு அவரது நியமனத்தை எதிர்த்ததால், அதிகாரிகள் ஒத்துழைப்பு கிடைப்பது சிரமமே. மேலும், தமிழகம் முழுவதும், கனிம முறைகேடு குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதற்கு, இரண்டு மாதங்கள் போதாது. சகாயம், தனக்கு தேவையான உதவிகளைப் பெற, அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்.அந்தக் கடிதத்தை பரிசீலனை செய்து, உதவிகளை வழங்கவே காலதாமதமாகும். அதேபோல், அவர் கேட்கும் விவரங்களை அதிகாரிகள் வழங்குவதும் சந்தேகமே. இவற்றை மீறி, சகாயம் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும்.சுப்ரீம் கோர்ட், தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்த பின், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில், உத்தரவை மறு பரிசீலனை செய்யும்படி, மனு செய்வது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

நமது நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக