திங்கள், 8 செப்டம்பர், 2014

ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகளை ஒழித்துகட்ட அரபு கூட்டமைப்பு தீர்மானம் !

கெய்ரோ: சிரியா, ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரை அடக்குவது என்று அரபு நாடுகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப் படையினர் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா' என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அடக்க அதிரடி நடவடிக்கை: அரபு நாடுகளின் கூட்டமைப்பு முடிவு ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் முதல்கட்டமாக சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இவர்கள் அங்கிருக்கும் கிறித்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர். சிரியாவின் ரக்கா நகரை ஏற்கனவே கைப்பற்றி தங்களது தலைமை பீடமாக அமைத்துக் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் பல பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் பகுதிகள் மற்றும் அவர்களின் மறைவிடங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்திவரும் நிலையில், அரபு நாடுகளின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் இந்த இயக்கத்தை அடக்க அனைத்து அரபு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக அரபு நாடுகளின் கூட்டமைப்பின் தலைவர் நபில் அல்-அரபி அறிவித்துள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற அரபு நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்களின் மாநாட்டுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நபில் அல்-அரபி கூறியதாவாது:- ஈராக்கில் தற்போது அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஒரு நாட்டின் தலைமைக்கு மட்டும் அச்சுறுத்தலாக விளங்கவில்லை. அந்த நாட்டின் அமைவிடத்துக்கே அவர்கள் ஆபத்தை விளைவிக்க முயன்று வருகின்றனர். ஐ.எஸ். உள்பட அனைத்து தீவிரவாத அமைப்புகளையும் ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க இன்றைய மாநாட்டின்போது அனைத்து அரபு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக, சர்வதேச நாடுகளின் எல்லா வகையிலான உதவிகளும் ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக