வெள்ளி, 12 செப்டம்பர், 2014

தயாநிதி மாறன் நிர்பந்தத்தால் ஏர்செல் பங்குகள் விற்பனை: சிபிஐ

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவி வகித்தபோது தயாநிதி மாறன் நிர்பந்தித்தார் என்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ வியாழக்கிழமை தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கில் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள், குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் செயல்பாடுகளத் தெளிவாக விவரிக்கின்றன எனவும் சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 29-ஆம் தேதி தாக்கல் செய்தனர்.

தயாநிதி மாறன் நிர்பந்தித்தார்: இதைத் தொடர்ந்து, குற்றப்பத்திரிகை மீதான விசாரணை, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது குற்றப்பத்திரிகை விவரங்களை விளக்கி, சிபிஐ மூத்த வழக்குரைஞர் கே.கே.கோயல் கூறியதாவது:
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு தொடர்பான 72 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில், சிபிஐ தரப்பிலான 151 சாட்சிகளின் பெயர்களும், வழக்கு தொடர்பாக 655 ஆவணங்களும் இடம் பெற்றுள்ளன.
குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபராக தயாநிதி மாறனின் பெயரும், இரண்டாவது நபராக கலாநிதி மாறனின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களைத் தொடர்ந்து, மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்தகிருஷ்ணன், அதன் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோரும் சன் குழும நிறுவனங்களில் ஒன்றான "சன் டைரக்ட்', மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செளத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட்ஸ் ஹோல்டிங் (மொரீஷியஸ்), அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய 4 நிறுவனங்களின் பெயர்களும் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் தனது சேவையை விரிவுபடுத்த உரிமம் கோரியிருந்தது. ஆனால், அதற்கு தயாநிதி மாறன் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தினார். மேலும், ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு விற்பனை செய்யுமாறு நிர்பந்தித்தார்.
இதன் காரணமாக ஏர்செல் நிறுவனத்தின் தலைவர் சிவசங்கரன், தனது 3 நிறுவனங்களை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்தார். ஏர்செல் நிறுவனம் கோரிய உரிமங்களை, தயாநிதி மாறன் வழங்கியிருந்தால், ஏர்செல் பங்குகள் அதிக விலைக்கு விற்பனையாகியிருக்கும். தயாநிதி மாறனின் செயலால் ஏர்செல் நிறுவனம் தனது தொழிலை நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும், மேக்சிஸ் நிறுனம் ஆதாயம் அடைய தயாநிதி மாறன் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து வழக்கை நடத்த, தேவையான ஆதாரங்கள் உள்ளன. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள், குற்றம் சாட்டப்பட்ட அனைவரின் செயல்பாடுகளையும் தெளிவாக விவரிக்கின்றன என்று வழக்குரைஞர் கோயல் கூறினார்.
விசாரணை ஒத்திவைப்பு: அதைக் கேட்ட சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி, "சிபிஐ தரப்பில் சில ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மீதான வாதங்கள் சிலவற்றைக் கேட்டறிந்தேன். எனினும், ஆவணங்கள் அதிக பக்கங்கள் கொண்டவையாக உள்ளதால் அவற்றைப் படித்துப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே, குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்' என்றார்.
2ஜி வழக்கு: ஏர்செல் - மேக்சிஸ் பங்குகள் விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கைத் தொடர்ந்து, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங், மத்திய அரசுத் துறை அதிகாரிகள் சிலரை அரசுத் தரப்பு சாட்சியாக விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த சிறப்பு நீதிபதி சைனி, அதன் மீதான விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பின்னணி: மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த காலத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு சென்னையைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனம், அதன் பங்குகளையும் அதன் துணை நிறுவனங்களான டிஷ் நெட், ஏர்செல் செல்லுலார் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளையும் விற்றது. பங்குகள் விற்பனை பேரம் முடிந்ததும், மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய ஏர்செல் நிறுவனத்துக்கு அடுத்தடுத்து வெவ்வேறு வட்டங்களில் தொலைத் தொடர்பு சேவை தொடங்க உரிமங்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், அமைச்சராக இருந்தபோது தயாநிதி மாறன், சிவசங்கரனுக்கு 2006-இல் நெருக்கடி கொடுத்ததால்தான் அவர் தனது நிறுவனப் பங்குகளை விற்றதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் தயாநிதி மாறன் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக சிவசங்கரன் 2011-இல் அளித்த புகாரின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது.
ஏர்செல் பங்குகளை வாங்கியதற்கு கைமாறாக, தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் "சன் டைரக்ட்' நிறுவனத்தில் தனது துணை நிறுவனங்கள் மூலம் மேக்சிஸ் நிறுவனம் சுமார் ரூ.549 கோடி அளவுக்கு முதலீடு செய்ததாகவும், இதன் பின்னணியில் தயாநிதி மாறனின் தலையீடு இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக