வெள்ளி, 19 செப்டம்பர், 2014

ஸ்கொட்லாந்து மக்கள் பிரிவினையை விரும்பவில்லை ! சர்வஜன வாக்கெடுப்பில் பிரிட்டனின் அங்கமாகவே தொடரும் தீர்ப்பு !

எடின்பர்க்: கிரேட் பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து தனிநாடாக வேண்டுமா என்று மக்களிடம் கருத்து கேட்ட வாக்கெடுப்பில், 19 மாவட்டங்களில் எதிர்ப்பு ஓட்டுகள் அதிகமாக விழுந்துள்ளன. இதனால், பிரிட்டனின் அங்கமாகவே  ஸ்காட்லாந்து நீடிக்கும்.  கடந்த 1707ம் ஆண்டில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றை இணைத்து யுனைடெட் கிங்டம் என்ற பெயரில் பிரிட்டன் உருவானது. இதன்பின், கடந்த 1922ல் அயர்லாந்தின் ஒரு பகுதி பிரிந்து, தனி நாடானது. ஸ்காட்லாந்திலும் தனி நாடு கோரிக்கை அவ்வப்போது எழுந்தது. கடந்த 2009ம் ஆண்டில், பிரிட்டனில் இருந்து பிரிய வேண்டுமா, வேண்டாமா என ஸ்காட்லாந்து பார்லிமெண்டில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, மக்களிடம் கருத்து கேட்க முடிவெடுக்கப்பட்டது.  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
வாக்கெடுப்பு நடத்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அனுமதித்தார். இதையடுத்து, ஸ்காட்லாந்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். மற்றொரு பக்கம், ஸ்காட்லாந்தை பிரிப்பதற்கு ஆதரவளிக்கக் கோரி, பிரமாண்ட பேரணிகளும், பிரசாரங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று காலை இந்திய நேரப்படி 11.30க்கு வாக்கெடுப்பு தொடங்கியது. மொத்தம் 42 லட்சத்து 85,323 பேர் வாக்களித்தனர். பள்ளிகள், வணிக வளாகங்கள் உள்பட 2,608 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இரவு 10 மணி வரை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், ‘யெஸ்’ அல்லது  ‘நோ’ என்ற இரண்டில், ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

வாக்கெடுப்பு முடிந் ததும் நேற்றிரவே வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. இன்று காலை முதல் ஒவ்வொரு மாகாணமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை 10 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள 32 மாகாணங்களில் 23 மாகாண முடிவுகள் வெளியாகின. இதில் 19ல் ஸ்காட்லாந்து பிரிய எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘நோ’ ஓட்டுகள் அதிகமாக விழுந்திருந்தன. 4 மாகாணங்களில் ஸ்காட்லாந்து தனியாக பிரிய ஆதரவாக ‘யெஸ்’ ஓட்டுகள் அதிகமாக விழுந்தன. மொத்தத்தில், 44 சதவீதம் பேர் தனிநாடு பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால்  56 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளனர். மக்களில் பெரும்பாலானோர் கிரேட் பிரிட்டனில் ஸ்காட்லாந்து இருப்பதுதான் பாதுகாப்பானது என்று கருதுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்ப்பு வாக்குகள் அதிகமாக காணப்படுவதால், கிரேட் பிரிட்டனின் அங்கமாக ஸ்காட்லாந்து நீடிக்கும்.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக