புதன், 10 செப்டம்பர், 2014

டெல்லியிலே ஆம் ஆத்மிக்கு ரேட்டு ! நெல்லையிலே பிஜேபிக்கு ரேட்டு ! ஜனநாயகம் ஒரே குஷி .. போங்கள் !

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு பா.ஜ.க வேட்பாளரான வெள்ளையம்மாள் வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளான நேற்று தனது கைக்குழந்தையுடன், கணவர் ராஜா, வக்கீல் மகாராஜன் ஆகியோருடன் வந்து தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான மனுவை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து நெல்லை மேயராக அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்துள்ளதாக அ.தி.மு.க அறிவித்துள்ளது.
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் மிரட்டலுக்கு பயந்தே பா.ஜ.க வேட்பாளர் வாபஸ் என்றும் “மனுதாக்கல் செய்யப்பட்ட பல இடங்களில் பா.ஜ.க.வினரின் மனுக்களை ஏற்கப்பட்டதாக முதலில் நோட்டீசு போர்டில் தகவல் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர், மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் புலம்பியிருக்கிறார். வெள்ளையம்மாள் 3 நாட்களாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் பாதுகாப்பில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பாரதீய ஜனதா கட்சி டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வளைக்க முயற்சித்துள்ளது.
டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு பதவி விலகிய பிறகு சட்டமன்றம் கலைக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததை அடுத்து, சட்ட மன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு அனுமதி கேட்டு டெல்லி துணை நிலை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.
தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையை சரிக்கட்ட, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ஒருவருக்கு ரூ 4 கோடி கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பாரதீய ஜனதா முயற்சித்திருக்கிறது. சங்கம் விகார் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி சட்ட மன்ற உறுப்பினர் தினேஷ் மொகானியாவுக்கு, பா.ஜ.க டெல்லி துணைத் தலைவர் ஷெர்சிங்க் தாகர் ரூ 4 கோடி கொடுப்பதாகவும், அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாகவும், தேர்தலில் தோற்றால் ஏதாவது வாரியத் தலைவர் பதவி தருவதாகவும் உறுதி அளித்திருக்கிறார். இது தொடர்பான உரையாடல், காட்சிப் பதிவுகள் தன்னிடம் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
லேடியும் சரி, கேடியும் சரி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ‘ஜனநாயக’த்தை விலைக்கு வாங்குவதில் வல்லவர்கள் என்பதைத் தவிர இது வேறு எதைக் காட்டுகிறது?
நெல்லை தவிர இன்னும் சில இடங்களில் அ.தி.மு.கவுக்கு வழி விட்ட பா.ஜ.க வேட்பாளர்கள்.
1. பா.ஜனதா வேட்பாளர் வாபஸ் பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு – “நான் வாபஸ் கடிதம் கொடுக்கவில்லை” என்கிறார் பா.ஜனதா வேட்பாளர்.
- மதுரை மாநகராட்சி 85-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் அ.தி.மு.க போட்டியின்றி தேர்வு
2. ஆலந்தூர் மண்டல 166-வது வட்ட இடைத்தேர்தல் : பா.ஜனதா வேட்பாளர் திடீர் வாபஸ்; அ.தி.மு.க போட்டியின்றி தேர்வு.
- பா.ஜனதாவினர் அவர்கள் கட்சி வேட்பாளர் நீதிசேவியர் வீட்டின் முன் போராட்டம்
3. ஆவடி நகராட்சி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் திடீர் வாபஸ் – அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
- ஆவடி நகராட்சி 33-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் தரணி திடீரெடனு தனது மனுவை வாபஸ் பெற்றார். அவருடன் மாற்று வேட்பாளர் ஸ்ரீகிருஷ்ணவேணியும் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இருவரும் பா.ஜ.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்து கொண்டனர்.
4. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு பா.ஜனதா வேட்பாளர் உட்பட 4 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
5. சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி 7-வது வார்டு, 33-வது வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
6. பல்லாவரம் நகராட்சி 2-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க தவிர பா.ஜ.க வேட்பாளர் உட்பட மற்றவர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் அ.தி.மு.க போட்டியின்றி வெற்றி பெற்றது. vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக