வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

IAS - IPS போன்ற குடிமக்கள் சேவை பரீட்சை பிராந்திய மொழி உரிமை ! எதிர்கட்சிகள் அமளி !

புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வு பிரச்னையை எழுப்பி மாநிலங்களவையில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து,  மாநிலங்களவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த பிரச்னையில் விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் இன்று  தெரிவித்தார். மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதல்நிலை தேர்வில் ஆங்கிலத்தில்  மட்டும் கேள்வி தாள் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தி உள்பட பிராந்திய மொழி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி  வருகின்றனர். இப்பிரச்னை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய  நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய செயலாளர் அரவிந்த் சர்மா தலைமையில் 3 நபர் கமிட்டி  அமைத்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிப்பதாக கூறினார்.இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது, ஐஜத சரத் யாதவ் இந்த  பிரச்னையை எழுப்பினார். ஏழரை லட்சம் பேரை பாதிக்கும் இந்த உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று சரத் யாதவ் வேண்டுகோள் விடுத்தார்.

அவரை தொடர்ந்து காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். கேள்வி நேரம் முடிந்த பிறகு இதுகுறித்து பதில்  அளிக்கிறேன் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து, முதலில் 15 நிமிடத்துக்கும்  பிறகு மதியம் வரையும் மாநிலங்களவையை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஹமீது அன்சாரி உத்தரவிட்டார்.மாநிலங்களவை மீண்டும் 12 மணிக்கு கூடியதும்,  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவைக்கு வந்தார். சிவில் சர்விஸ் தேர்வு பிரச்னை தொடர்பாக அறிக்கை கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில்  தீர்வு காணப்படும் என தெரிவித்தார். - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக