புதன், 13 ஆகஸ்ட், 2014

பாரதி ஒரு வேஷதாரி ! கவிநயமில்லாத இசையில் சரணடைந்த பார்ப்பனியத்தின் தியாக பிரமம் !

பாரதி திரைப்படம் பல உண்மைகளை மறைத்து பார்ப்பனீய பிரசாரம்தான் செய்தது !
பாரதியின் சுய முரண்பாடுகள் குறித்து இயக்குநரின் மனதில் ஐயமிருந்திருப்பினும், திரைப்படத்தில் அவற்றைச் சித்தரிக்கும் துணிவு அவருக்கில்லை. எனவே, ஆளும் வர்க்கங்களாலும், பாரதி அபிமானிகளாலும் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் பாரதியின் தோற்றத்திற்கு  பக்க வாத்தியம் வாசிக்கிறது திரைப்படம்.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை செய்வோரென்றும், வாய்ச் சொல் வீரரென்றும் காங்கிரசு மிதவாதிகளைச் சாடிய பாரதி,
ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டு நாடே கிளர்ந்தெழுந்த தருணத்தில் “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்ட” கோழையாக ஆனது எப்படி என்ற கேள்விக்கு விடையில்லை.
உண்மையான எதிரியாகிய வெள்ளையனிடம் சரணடைந்த கோழைத்தனத்தை மறைத்து, “காலா… உனைக் காலால் உதைப்பேன் வாடா” என்று கற்பனை எதிரியை எட்டி உதைக்கும் இறுதிக் காட்சி பாரதியின் அவலமாக ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டாலும், சினிமாத்தனமான மோசடியின் சிகரமாக அது அமைகிறது.

***
திரைப்படம் பாரதியை அதிமனிதனாகச் சித்தரித்த போதிலும் பாரதியின் முரண்பாடுகள் குறித்த விவாதம் இலக்கிய உலகில் ஏராளமாக நடந்துள்ளது. இருப்பினும் பண்டித நடையிலிருந்து தமிழை மீட்டதும், தேச விடுதலையைப் பாடியதும், கவிதைகளின் வீச்சும் இனம்புரியாத தடுமாற்றத்தை ஏற்படுத்தி “என்ன இருந்தாலும்…” என்று பலரை இழுக்க வைக்கிறது. “இப்படி இருந்திருக்கக் கூடாதா” என்று சிலரை ஏங்கவும் வைக்கிறது.
பார்ப்பன இந்து தேசியத்தைக் கனவு கண்ட கவிஞன் என்று பாரதியைப் பற்றி நாம் கூறினால் அது துடுக்குத்தனமான அரைவேக்காட்டுத்தனமான மதிப்பீடு என்று எரிச்சலடைவோர் உண்டு. அப்படியானால் பார்ப்பானை எதிர்த்ததும், சாதியை மறுத்ததும், பெண் விடுதலையைப் பாடியதும் இந்து தேசியவாதி செய்யக் கூடிய/பாடக் கூடிய விசயங்களா என்று மடக்குவோரும் உண்டு.
இந்து தேசியவாதிகள் எனப்படுவோர் இராம. கோபாலனைப் போலவோ, அசோக் சிங்காலைப் போலவோதான் இருக்க வேண்டும் என்று கருதுவோர் வரலாற்றையும், தனி நபரையும் மதிப்பிடத் தெரியாதவர்கள். “தவறான கட்சியில் சரியான நபரா – எப்படி?” என்று வியக்கும் தி.மு.க.வினருக்கு ஒப்பான அறிவாளிகள். ஆரிய சமாஜத்தின் பார்ப்பன எதிர்ப்பு, விவேகானந்தரின் பார்ப்பன எதிர்ப்பு, காந்தியின் அரிசன முன்னேற்றம் என்று பலவிதமான வண்ணச் சேர்க்கைகளில் அன்றைய காலகட்டத்தில் பிறந்த இந்து தேசியவாதம் பாரதி எனும் கவிஞன் ­மூலமும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.
இந்து தேசியத்தைக் கனவு காணும் வாய்ப்புப் பெற்ற பார்ப்பனச் சாதியில் பிறந்த, சமஸ்கிருதக் கல்வி கற்ற பாரதி, ஆங்கிலக் கல்விக்கும் ஷெல்லி, விட்மன் போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளுக்கும் அறிமுகமாகின்றான். காலனியாதிக்க எதிர்ப்பென்பது கருத்தளவில் மட்டுமின்றி, வெள்ளையனால் ஏமாற்றப்பட்ட தந்தையின் மரணம் எனும் சொந்த அனுபவத்தினூடாகவும், நாம் இன்னதென்று அறியாத பிற காரணிகளாலும் அவனிடம் உணர்ச்சி வேகம் பெறுகிறது.
அவனுக்குள் இருந்த முரண்பட்ட எதிர்த் துருவங்களான பார்ப்பனியமும் ஜனநாயகக் கருத்துகளும் ஒன்றுடன் ஒன்று கணக்குத் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். மாறாக வேதமரபு, பழம் பெருமை ஆகியவற்றைச் சீர்திருத்தி ஜனநாயகப்படுத்துகின்ற சிந்தனைதான் பாரதியிடம் மேலோங்குகிறது. ஜெர்மனியின் நிலை குறித்து கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும் குறிப்பிடுவது இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.
“ஜெர்மன் இலக்கிய விற்பன்னர்களது பணி, புதிய பிரெஞ்சுக் கருத்துக்களைத் தமது பண்டைய தத்துவவியல் மனச்சான்றுக்கு இசைவாய் வகுத்திடுவதில், அல்லது இன்னும் கறாராய்ச் சொல்வதெனில் தமது சொந்தத் தத்துவவியல் கண்ணோட்டத்தைத் துறந்து விடாமல் பிரெஞ்சுக் கருத்துக்களைக் கிரகித்துக் கொள்வதில் அடங்கி விடுவதாகியது.”
சிதைந்து கொண்டிருந்த பார்ப்பனப் பழமையிலிருந்து அன்று வீறு கொண்ட கவிதைகள் பிறக்க வாய்ப்பே இல்லை. கையறு நிலையையும் அவலத்தையும் பிழிந்து தருகின்ற, கவிநயமில்லாத, இசையில் சரணடைந்த பார்ப்பனியத்தின் மனவுணர்வை தியாகய்யரிடம் காணலாம்.
பாரதியின் உள்ளே நுழைந்த புதுமை, கவிதைக்கான உள்ளுணர்வைத் தோற்றுவிக்கப் போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் கவிஞனுக்குள்ளே கனவு போலப் பாய்ந்து பெருகும் கவிதையுடன் அவன் வாழ்வு முடிந்து விடுவதில்லை. கவிதை முடிந்த பின்னும் கவிஞன் இருக்கிறான். அவனுக்கு வசப்படாத, அவனுடைய விருப்பத்துக்கு எதிராக இயங்குகின்ற புற உலகை அவன் சந்தித்தாக வேண்டும். அதன்மீது அறிவு பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட்டாக வேண்டும்.
ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் பாரதி வெளியிட்ட அரசியல் கருத்துக்களும், அவனது வாழ்க்கையும் பரிசீலிக்கப்பட்டால் இதனைப் புரிந்து கொள்ள இயலும்.
முற்போக்கான கவிதைகள் என்று கூறப்படும் கவிதைகளைப் பாடிய போதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்து தேசியம்தான் அவனது அரசியலாக இருந்தது. மிதவாதத்தை எதிர்த்த போதும் திலகருடன் அரசியல் களத்தில் பாரதி இறங்கவில்லை. வங்காளத்துத் தீவிரவாதிகளின் பாதையையும் பாரதி நிராகரித்தான். பிறகு மிதவாதத்திற்கு மாறினான். இறுதியில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைக் கூடக் கண்டிக்குமளவுக்கும், பூரண விடுதலை கோரவில்லை என்று கூறும் அளவுக்கும் கீழிறங்கினான்.
தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவித்தார்; முஸ்லீம் கடையில் டீ குடித்தார்; சுருட்டு பிடித்தார்; மீசை வைத்தார்; பூணூலை அறுத்தெறிந்தார்; அல்லாவுக்குப் பாட்டு எழுதினார்… என்று பாரதியின் மேன்மைகளைப் பட்டியலிட்டு பாரதியின் வாழ்வும் அவனது படைப்பு ஆளுமையும் பிசிறின்றி ஒன்றிணைந்திருந்தன என்று நிரூபிக்க முயல்வது பாமரத்தனம் அல்லது ஏமாற்று வித்தை.
கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டிய பாரதி வருண தருமத்தை மீண்டும் நிலை நாட்டுவதையே தனது கொள்கையாகக் கொண்ட வ.வே.சு. ஐயருடன் நண்பனாக இருந்தார். காந்திக்காகத் தனது கூட்டத்தை ஒரு நாள் கூடத் தள்ளி வைக்கச் சம்மதிக்காத “கம்பீரமான’ பாரதி மகளின் திருமணத்திற்காகப் பூணூலை மாட்டிக் கொண்டார். சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கொரு நீதி என்றெழுதிய பாரதி, “என்னைப் போன்ற (பார்ப்பன) குலத்தில் பிறந்த மனிதனுக்கு சிறைவாசம் எத்தனை கடினமானது” என்று பிரிட்டிஷ் ஆளுனருக்கு எழுதிக் கொடுத்த மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். “இனி அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து பிணையில் வெளிவந்த பாரதி எட்டையபுரம் போய் “என்னைப் போல் கவிஞனில்லை” என்று மீசையை முறுக்குகிறார். மன்னனுக்குச் சீட்டுக்கவி அனுப்பிப் பணம் கேட்கிறார்.
இவற்றையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? எந்தத் தராசைக் கொண்டு எடை போடுவது? வியந்து கூறத்தக்க சில சம்பவங்களையும் முகம் சுளிக்கத்தக்க சில சம்பவங்களையும் ஒப்பு நோக்கிப் பார்ப்பதை விட, இவையனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த ஒரு மனிதனின் ஆளுமையை இயக்கிச் சென்றது எது என்ற கேள்விக்கும், அவனது ஆளுமை முன்னோக்கிச் சென்றதா வீழ்ந்து கொண்டிருந்ததா என்ற கேள்விக்கும்தான் நமக்கு விடை வேண்டும்.
முரண்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருந்த இந்தக் கவிஞன் தனது சுய முரண்பாட்டைத் தானே எதிர்கொள்ளும் மனநிலையில் எத்தகைய கவிதையைப் படைத்தான்?
பாரதிக்கு வெளியே ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் மீண்டும் கிளர்ந்தெழத் தொடங்கிய தருணத்தில் பாரதி மிதவாதத்தைத் தன் அரசியலாகத் தேர்ந்தெடுத்தான். தனது நலனுக்கு உகந்த பாதையே இத்தேசத்தின் நலனுக்கு உகந்த பாதை என்று கூறுமளவு தாழ்ந்தான். மிதவாதிகளை “நடிப்பு சுதேசிகள்’ என்றும் “பயக்கட்சி’ என்றும் “விண்ணப்பக் கட்சி’ என்றும் சாடிய பாரதி பஞ்சதந்திரக் கதையைக் காட்டித் தன் நிலையை நியாயப்படுத்தினான்.
பகத்சிங் என்றொரு கவிதையை ஜாலியன் வாலாபாக் பெற்றெடுத்த தருணத்தில் பாரதியின் கவிதை மாயாவாதத்தில் ­மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தது. மாயாவாதக் கவிதைக்கும் பாரதியின் மிதவாத சமரச அரசியலுக்கும் உள்ள உறவைத் தற்செயலானது என்று யாரேனும் கூற முடியுமா?
பாரதியுடைய கவிதையின் சீற்றத்தையும் அவனது தடுமாற்றத்தையும் அனுதாபத்துடன் பரிசீலிப்பதாயின், காந்தியின் அரசியலையும் அனுதாபத்துடன் பரிசீலிக்க வேண்டியிருக்கும். உணர்ச்சித் தளத்தில் இயங்கும் கவிதை மேக ­மூட்டம் போன்றது. எத்தனை ஊடுருவிப் பார்த்தாலும் ஒரு வரம்பிற்கு மேல் பார்வை செல்லாது.
இருப்பினும் நமக்கு உதவும்படியாக, பாரதி விட்ட இடத்திலிருந்து காந்தி தொடங்குகிறார். பாரதியின் சக்தி காந்தியின் ராமனாகவும், கனகலிங்கம் அரசனாகவும், அல்லா பாட்டு “ஈசுவர அல்லா தேரே நாம்’ ஆகவும், பாரதியின் போல்ஷ்விக் எதிர்ப்பு – சோசலிச ஆதரவு காந்தியின் தர்மகர்த்தா முறையாகவும் மறுபிறப்பெடுக்கின்றன. கவிஞனின் “அவலம்” அரசியலுக்கு மொழி பெயர்க்கப்படும்போது அது காந்தியின் தந்திரமாகி விடுகிறது. மகா கவியைத் தொடர்ந்து ஒரு மகாத்மா வருகிறார்.
தங்கள் அவலத்தை யதார்த்தமாக எடுத்துக் கொண்ட சாதாரண ஆத்துமாக்களோ மகாகவியின் அவலத்திற்கும் மகாத்துமாவின் அவலத்திற்கும் கண்ணீர் சிந்துகிறார்கள்.
“என்னதான் இருந்தாலும் பாரதியின் ஆளுமை இதுவல்ல” என்று கூறுவோர் முன், மார்க்ஸின் மேற்கோள் ஒன்றை மீண்டும் சமர்ப்பிப்போம் :
“கவிஞர் பைரனுக்கும் ஷெல்லிக்கும் இடையிலான வேறுபாடு இதுதான்; அவர்கள் இருவரையும் புரிந்து கொண்டவர்களும் நேசிப்பவர்களும் இப்படித்தான் கருதுகிறார்கள். 36 வயதில் பைரன் இறந்தது நல்லது – அவன் மேலும் வாழ்ந்திருந்தால் பிற்போக்கான முதலாளியவாதியாக மாறியிருப்பான். மாறாக, 29 வயதில் ஷெல்லி இறந்தது வருந்தத் தக்கது; ஏனென்றால் அவன் வாழ்க்கை முழுதும் புரட்சியாளனாக இருந்தான். மேலும் வாழ்ந்திருந்தால் சோசலிசத்தின் முன்னோடியாக விளங்கியிருப்பான்”
- மார்க்ஸ் அடிக்கடிக் கூறுவார் என்று அவரது மகள் எலியனார் மார்க்ஸ் கூறியது.
நாம் இவ்வாறு கூறலாம். பாரதி மேலும் 30, 40 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் பகத்சிங், பொதுவுடைமை இயக்கம், ஹெட்கேவார், பெரியார், அம்பேத்கர் ஆகிய அனைவரையும் எதிர் கொண்டிருப்பான்.
ஆனால் யாருடன் கைகோர்த்திருப்பான் என்பதைப் பாரதி அபிமானிகள் கூறட்டும்!
— மருதையன் இக்கட்டுரையின் முழு பகுதியையும் படிக்க vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக