செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர் !

னநாயகத்தின் நான்காவது தூண், சமயத்தில் நான்கு தூண் பாரத்தையும் சுமப்பதாக காட்டிக் கொள்ளும். அவ்வகையில் ஊடகங்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் போல நேரடி நடவடிக்கைகள் எடுத்து தமது கீர்த்தியை பறைசாற்றுவார்கள். இந்த நடவடிக்கைள் பெரும்பாலும் சாலை பள்ளம், விளக்கு பழுது, தேங்கிய குப்பை போன்ற ஆபத்தில்லாத விசயங்களில் இருக்கும். கொஞ்சம் விறுவிறுப்பு வேண்டுமென்றால் பாலியல் பிரச்சினைகளுக்காகவும் சாதாரண நபர்கள், சிறு குற்றவாளிகள் மீது நடவடிக்கைகள் எடுத்து ஆக்சன் ஹீரோவாக காட்டிக் கொள்வார்கள். இதற்கெல்லாம் அதிகார மற்றும் போலீஸ் வர்க்கத்திடம் சில தொடர்புகள் இருந்தால் போதும். செய்திக்கு செய்தி, நடவடிக்கைக்கு நடவடிக்கை என வாசகர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆனால் இந்த ஊடக புலிகள் எவையும் மக்கள் பிரச்சினைகளுக்கு காரணமான முதலாளிகள் அல்லது பெரும் நிறுவனங்களை மட்டும் தவிர்த்து விடுவார்கள். புரவலர்களின் தருமத்தை நாடி பிடித்து பார்ப்பது ஊடக அறமல்ல.
பொதுவாக பெருமாளுக்கு காக்கும் தொழில்தான் பார்ப்பனிய இந்து மதத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுவே மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்றால் வேர்க்க விறுவிறுக்க கனஜோராக தொழில் நடக்கும்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விதிகளை மீறி கருவாடு விற்பனை நடப்பதாக 17.08.2014 தேதியிட்ட “தி இந்து” (தமிழ்) நாளிதழில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த விதிமுறை மீறலுக்கு, “கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த்” போல லா பாயிண்டையும் எடுத்து போட்டிருக்கிறார், உலகளந்த பெருமாள்.
கருவாடு“தமிழ்நாடு குறிப்பிட்ட பொருள்களின் அங்காடி (அமைவிடம் முறைப்படுத்துதல்) சட்டம் 1996-ன்படி கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளை மட்டுமே விற்க வேண்டும்”. இதை மீறி கருவாடு விற்றதால் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்று மாம்பலம் மாமா-மாமிகள் சார்பாக பொங்கியிருந்தார், லார்டு லபக்குதாஸ்.
பெருமாளுக்கு கோபம் வந்து விசுவரூபம் எடுத்தால் லோகம் தாங்காது என்று பயந்த, கோயம்பேடு அங்காடி வளாக நிர்வாகக் குழு முதன்மை அலுவலர் பாஸ்கரன் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலக சகபாடிகளுக்கு உத்திரவு போட்டிருக்கிறார். உதவிப் பொறியாளர் ராஜன் பாபு தலைமையிலான ஊழியர்கள் திங்களன்று (18.08.2014) சோதனை நடத்தி 18 கடைகளில் கருவாடு விற்றதாக கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விதியை மீறியதால் இந்த 18 கடைக்காரர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்புவார்களாம். தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படுமென்றும் அதிகாரிகள் கூறியிருப்பதாக உப்பிலியப்பன் தனது வெற்றிச் செய்தியில் வெளியிட்டிருக்கிறார்.
இனி கோயம்பேடு வளாகத்தில் காய்கறி வாங்க வரும் சைவ உணவுப் பழக்கம் கொண்ட அவாள்கள், வெற்றிக்களிப்புடன் பூணூலை இழுத்து விட்டுக் கொண்டே சுத்தபத்தமான சூழலில், நறுமணத்துடன் காய்களை வாங்கி இன்புறலாம். கூடவே காலை நரசுஸ் காஃபி அருந்திக் கொண்டே தி இந்துவை படிக்கும் போது “நம்மவா என்னமா லோகத்துக்கு ஷேமம் செஞ்சுண்டுருக்கா” என்று புளகாங்கிதமும் அடையலாம்.
சீலா கருவாடு
சீலா கருவாடு
தமிழகத்தில் உள்ள நூற்றுக்கு நூறு பலசரக்கு கடைகளிலும் கதவருகே சரம் சரமாக தொங்க விடப்பட்டிருக்கும் கருவாடு பாக்கெட்டுகளை பார்க்கலாம். அங்கேயெல்லாம் எந்த ஜென்மமும் மூக்கை சுளித்ததில்லை. சுளித்திருந்தால் அண்ணாச்சிகளே வெளுத்திருப்பார்கள். இவ்வளவிற்கும் இந்த கடைகளில் இருக்கும் கருவாடுகளெல்லாம் விலை அதிகமில்லாத சிறு வகை கருவாடுகள்தான். இவற்றில் உப்பும், ஈக்கல் போன்ற எலும்பையும் தவிர வேறு எதுவும் இருக்காது. எனினும் உழைக்கும் மக்கள் மலிவு, மணம் கருதி சோற்றுக்கு தொடுகாயாக இதை சமைத்து உண்பார்கள். அறுசுவை விருந்துக்கோ குறைந்த பட்சம் காய்கறிகள் போட்டு செய்யும் சாம்பார் கூட பல குடும்பங்களில் வழியில்லை.
பழையதோ, கொஞ்சம் மோர் விட்டுக் கொண்டு கருவாட்டை பொறித்தோ வதக்கியோ சாப்பிடும் மக்கள் மீது இந்த பார்ப்பன வெறியர்களுக்கு என்ன ஒரு வன்மம்?
வஞ்சிரம், இறால் போன்ற விலை அதிகம் உள்ள கருவாடுகளெல்லாம் சற்று வசதிபடைத்தோரே வாங்குவார்கள். நீல்கிரிஸ், ரிலையன்ஸ் பிரஃஷ், ஃமோர் போன்ற தரகு முதலாளிகளின் தொடர் கடைகளில் கூட இறால், வஞ்சிரம் மீன்களின் ஊறுகாய் பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இது விதிமுறை மீறல் என்று ஆழ்வார்களின் ஆண்டவன் புகார் கடிதம் எழுதி அம்பானி மீது நடவடிக்கை எடுப்பாரா?
ஏற்கனவே “தி இந்து” அலுவலகத்தில் யாரும் அசைவ உணவு எடுத்துக் கொண்டு வரக் கூடாது என்று ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை இணையத்தில் பிரபலம். மகா விஷ்ணுவிடம் குப்பை கொட்டும் ஒரே குற்றத்திற்காக எது சாப்பிட வேண்டும், எது கூடாது என்பதையெல்லாம் கடைபிடிக்க வேண்டுமென்றால் இது பத்திரிகை அலுவலகமா இல்லை சங்கர மடமா?
ஜெயா, மோடிக்கு அஞ்சி, அஞ்சி பத்திரிகை நடத்தும் தி இந்துக் குழுமம், அதற்காக தனது ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் பலரை வெளியேற்றியிருக்கிறது. நல்லி எலும்போ, இல்லை மாட்டுக்கறி வறுவலோ சாப்பிடாத ஜென்மங்கள் மோடிக்கும், லேடிக்கும் இடுப்பெலும்பு முறிய சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதில் என்ன ஆச்சரியம்?
கருவாடு வறுவல்
கருவாடு வறுவல்
இந்த கருவாடு என்கவுண்டர் செய்தி வந்த அதே பக்கத்தில் “மண்ணடியில் தண்ணீர் விற்ற கடைகளுக்கு நோட்டீஸ் – ‘தி இந்து’ செய்தி எதிரொலி: ஒரே நாளில் அதிரடி” என்று மற்றொரு வெற்றி செய்தி வந்திருக்கிறது. சென்னை பாரிமுனை, மண்ணடியில் உள்ள பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் தொட்டிகளை வைத்து, தனியார் லாரிகள் மூலம் நீர் நிரப்பி, குடம் பத்து ரூபாய் என மக்களுக்கு விற்கிறார்களாம். இதை பரப்பிரம்மம் அம்பலப்படுத்திய பின் அதிகாரிகள் ஒரே நாளில் சோதனை செய்து நடவடிக்கை எடுத்து முடித்து விட்டார்கள்.
அரசு முறையாக நீர் கொடுக்க மறுப்பதினால்தானே இங்கே பெட்டிக்கடைகளிலேயே தண்ணீர் விற்கும் நிலை இருக்கிறது. நடுத்தர வர்க்கம் கேன் வாட்டரை 40, 50 ரூபாய்க்கு வாங்குவதெல்லாம் சாதாரண மக்களுக்கு சாத்தியமில்லை. முக்கியமாக இங்கே தண்ணீரே இல்லை. அந்த பெட்டிக்கடைக்காரர்கள் என்ன கஞ்சா விற்றார்களா, இல்லை தி இந்துவில் வரும் பங்கு சந்தை பக்கத்தில் மோசடி செய்யும் பெரும் நிறுவனங்களின் விளம்பரங்களை போட்டு நடுத்தர வர்க்க மக்களைத்தான் ஏமாற்றுகிறார்களா? இல்லை தண்ணீர் விற்பனையை எதிர்க்க வேண்டுமென்றால் பெப்சி, கோக்கை எதிர்த்து எழுதி ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து காட்டட்டுமே?
இவ்வளவு ரூல் பேசுகிறவர்கள் தமிழில் “தி இந்து” ஆரம்பித்த போது பாசிச ஜெயாவின் விஷன் 2020 எனும் இலவச இணைப்பை என்ன அறத்தில் கொண்டு வந்தார்கள்? இது பெயிட் நியூஸ் இல்லையா? அரசு விளம்பரங்கள் பெறுவதற்காக அதிமுக அரசுக்கு கூஜா தூக்கும் அடிமைத்தனம் இல்லையா? இதே போல சந்திரபாபு நாயுடு பதவியேற்பின் போதும் வெளியிட்டார்களே? உங்கள் அடிவருடித்தனத்தை கண்டிப்பதற்கு இங்கே மக்களிடம் அதிகாரம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் கருவாடு சாப்பிடும் எளிய மக்கள் மீது அடக்குமுறை செய்வீர்களா?
கோயம்பேடுக்கு வரும் பலசரக்கு கடை அண்ணாச்சிகள் மொத்தமாக காய்கள் வாங்குவது போல இந்த கருவாடு பாக்கெட்டுகளையும் வாங்கி மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். விற்பனைக்கு வழியில்லாத சிறிய மீன்களே இப்படி கருவாடாக தயாரிக்கப்பட்டு கடைகளுக்கு வருகின்றன. அந்த வகையில் மீனவர் மக்களுக்கு இது ஒரு சிறிய உதவியாக கிடைத்து வருகிறது. காரசாரமாக சாப்பிட ஆசையிருந்தும், மட்டனையோ, சிக்கனையோ அடிக்கடி வாங்க முடியாத மக்கள் அதிகம் விலையுள்ள மீன்களையும் வாங்குவது சாத்தியமல்ல.
இந்த இடத்தில்தான் அனைத்து தேவைகளையும் கருவாடு பூர்த்தி செய்கிறது. இதையும் கூட ஒழிக்க வேண்டுமென்றால் அவன் இந்த உலகிலேயே மிகப்பெரும் பயங்கரவாதியாக இருக்க வேண்டும். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு சாட்சாத் தான்தான் அந்த பயங்கரவாதி என்று கம்பீரமாக தெரிவிக்கிறார்.
இன்றைய ‘தி இந்து’ நாளிதழில் எம்ஜிஆருக்கு கருவாடு விற்ற சைதாப்பேட்டை வணிகரைப் பற்றியெல்லாம் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். புரட்சித் தலைவியின் விருப்பத்திற்குரிய தலைவரின் கருவாடுக்கு தனி கவனிப்பு. புரட்சி நடத்த போகும் உழைக்கும் மக்களின் கருவாட்டுக்கு மட்டும் கருவறுப்பா? நடுப்பக்கத்தில் சமஸ் என்பவர் தமிழக மீனவ கிராமங்களுக்கு சென்று உயிரற்ற முறையில் மலிவான என்சைக்ளோப்பீடியா பாணியில் மீன்கள் குறித்தும்,கடல் குறித்தும் எழுதுகிறார். ஆனால் உயிருள்ள மக்கள் சாப்பிடும் கருவாடு மீது இவர்களுக்கு அருவெறுப்பு! சமஸ் கட்டுரை முதன்முதலாக கடலோர மக்கள் வாழ்க்கையை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகிறது என்று இந்து பத்திரிகையும் சொன்னது,அதையே பல கருவாடு சாப்பிடாத சைவ உணவுக்காரர்கள் பின்னூட்டங்களில் அங்கீகரித்தார்கள். இது நடிப்பு என்பதற்கு இந்துக் கருவாடு வெறுப்பே சாட்சி.
உழைக்கும் மக்கள், ஜனநாயக அமைப்புகள், மீனவர் சங்கங்கள், வணிகர் சங்கங்கள் அனைவரும் “தி இந்து”வை கண்டிக்க வேண்டும். அரசிடமும் விற்பனைக்கு அனுமதிக்குமாறு போராட வேண்டும். இதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் இணைய சுவரொட்டிகளை நண்பர்கள் பரவலாக பகிர்ந்து பரப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். மகா விஷ்ணு தொடுத்திருக்கும் பயங்கரவாதப் போருக்கு எதிராக படை சேருமாறும் அழைக்கிறோம். vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக