வியாழன், 14 ஆகஸ்ட், 2014

மோடி ஆட்சியில் கலவரங்கள் அதிகரிப்பு– சோனியா காந்தி குற்றச்சாட்டு!

டெல்லி: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் கலவரங்கள் அதிகரித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு நேற்று முதல் முறையாக காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், மத்தியில் உள்ள பாஜக அரசை கடுமையாக தாக்கினார்.
 சோனியா காந்தி, "காங்கிரஸ் கட்சிக்கு இது சவாலான காலகட்டம். காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்தி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை நாம் தொடங்கி இருக்கிறோம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டங்களில் உள்ள அம்சங்களைத்தான் நரேந்திர மோடி அரசு தனது திட்டங்களில் சேர்த்து நிறைவேற்றி வருகிறது.
முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது சரக்கு மற்றும் சேவை வரியை பாரதீய ஜனதா எதிர்த்தது. சர்க்கரைக்கு மானியம் கொடுப்பது, ரெயில் கட்டணம், டீசல் விலை உயர்வு, காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு போன்றவற்றையும் எதிர்த்தார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாம் கொண்டு வந்த எந்தெந்த திட்டங்களை அவர்கள் எதிர்த்தார்களோ இப்போது அவற்றுக்கு ஆதரவாக புதிய அரசு செயல்படுகிறது. மற்றபடி புதிதாக அவர்கள் எதையும் செய்துவிடவில்லை. மொத்தத்தில் நமது திட்டங்களையும், யோசனைகளையும் அவர்கள் நிறைவேற்றுவது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் தங்களுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு அவர்கள் நம்மை குறை கூறுகிறார்கள். நாடு முழுவதும் விலைவாசி உயர்வால் சாதாரண குடும்ப தலைவிகள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள், வேலையில்லாதோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். விலைவாசி உயர்வை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. நாட்டின் பொருளாதார நிலைமையையும் மேம்படுத்த முடியவில்லை. எவ்வளவு காலம்தான் அவர்கள் நம்மை குறை சொல்லிக்கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இதுவரை இல்லாத அளவு அதிகரித்து உள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து இருப்பது பற்றி நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற சம்பவங்களில் பெண்கள் கொல்லப்படுவதும் நடக்கிறது. இது நாடு முழுவதும் குறிப்பாக பெண்கள், சிறுபான்மையினர், ஏழைகள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் வகுப்புவாத கலவரங்கள் அதிகரித்து விட்டன. உத்தரபிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சகிப்புத்தன்மை குறைந்து விட்டது. பாரம்பரியமிக்க இந்த தேசத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக பாஜக அரசு நடந்துகொள்கிறது. வெறுப்பு அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் தொடரும் அவர்கள் எதேச்சதிகார போக்குடன் நடந்துகொள்கிறார்கள். நாம் விழிப்புடன் இருந்து இதை தடுத்து நிறுத்த வேண்டும். நாம் அனைவரும் இதற்கு எதிராக ஒன்று திரண்டு போராட வேண்டும். ஏழைகளுக்காகவும் அப்பாவி மக்களுக்காகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். சமூக நீதிக்காகவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் காங்கிரஸ் பாடுபடும்" என்று
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக