வியாழன், 21 ஆகஸ்ட், 2014

மோடி எப்போது ஜனநாயக காவலர் ஆனார்?

போலி மோதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்சோராபுதீன் ஷேக் முதல் இஷ்ரத் ஜகான் வரை பல அப்பாவிகளை போலி மோதலில் கொன்ற, 30-க்கும் மேற்பட்ட போலீசு அதிகாரிகள் குஜராத் சிறையில் இருக்கின்றனர். இத்தகைய கொலைகார போலீசு படைக்கு தலைமை தாங்கிய அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், முதல்வர் நரேந்திர மோடியும் முறையே பா.ஜ.க தலைவர், பிரதமர் ஆகியிருக்கின்றனர். இப்பேற்பட்டவர்களது “அரசு போலி மோதல் கொலைகள் மீது எந்த சகிப்புத் தன்மையும் காட்டாது” என்று அறிக்கை அளித்திருக்கிறதாம். நம்ப முடிகிறதா? நம்பித்தான் தீர வேண்டும். தி இந்து நாளிதழும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் “அப்பாவி மக்கள் கொல்லப்படுவதில் மத்திய அரசு சகிப்புத்தன்மை காட்டாது”, “Zero tolerance for fake encounters: Modi govt tells SC” என்று நான்கு காலம் தலைப்புச் செய்தியாக அறிவித்திருக்கின்றன.
போலி மோதல் கொலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (2011-ம் ஆண்டு)
மோடி எப்போது ஜனநாயக காவலர் ஆனார்? பாம்புகள் எப்போதிருந்து எலியை வெறுத்து விட்டன?

மணிப்பூரில் மத்திய ஆயுதப்படைகளாலும், மாநில காவல்துறையினாலும் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம், நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கமிஷனை நியமித்தது. அந்த கமிஷன் அளித்த ஆய்வறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதிலில் “மத்திய அரசு போலி மோதல்கள் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அத்தகைய சட்ட விரோதமான கொலைக்குற்றவாளி யாராயிருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறியிருக்கிறது. இதன்படி பார்த்தால் மோடி ஆதரவு ஊடகங்கள் சொல்வது போல பாஜக அரசு ஜனநாயகக் காவலராக மாறியிருப்பதாக தோன்றும்.
“இனிமே நான் சத்தியமா லஞ்சம் வாங்க மாட்டேன்…” என்று ஒரு அரசு அதிகாரி சத்தியம் செய்வதான புல்லரிப்பு நமக்கு ஏற்படும். ஆனால், இது போல பல சத்திய பிரமாணங்களை கேட்டு பழகிய நமக்கு, “நான் என்ன சும்மா கொழுப்பெடுத்தா லஞ்சம் வாங்குறேன். மேலதிகாரிகளுக்கு கொடுத்தே ஆகணும்கிறதுக்காகத்தான் வாங்க வேண்டியியருக்கிறது. விக்கிற விலை வாசி, பசங்க படிப்பு செலவு, சொந்தமா வீடு கட்டுவதுன்னு நியாயம நான் வாழ்றதுக்கு வாங்குற சம்பளம் போதுமா? யார் சார் இந்த உலகத்துல லஞ்சம் வாங்காம, தப்பு செய்யாம இருக்காங்க? காசு வாங்குனாலும் வேலையை சுத்தமா செய்யறனா இல்லையா?” என்று பேசுவதை போலவே, போலி மோதல்கள் தொடர்பான மோடி அரசின் அறிக்கையும் பேசுகிறது.
போலி மோதல்
ஆயுதப் படைகளால் கடைக்குள் அழைத்துச் செல்லப்படுபவர், மோதலில் கொல்லப்பட்டதாக சோடிப்பு.
இதெல்லாம் டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து நாளிதழ்களுக்கு தெரியாதது அல்ல. இருப்பினும் மோடிக்கு கூஜா தூக்க வேண்டும் என்று வரும் போது அவர்கள் எந்தக் கூச்சமும் அடைவதில்லை.
“மணிப்பூர் சட்ட விரோத கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சங்கம்” மற்றும் “மனித உரிமை கண்காணிப்பு” ஆகிய தொண்டு நிறுவனங்கள், “கடந்த 30 ஆண்டுகளில் மணிப்பூரில் நிகழ்த்தப்பட்ட 1,528 சட்ட விரோத கொலைகளில் குற்றவாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்திருந்தனர். இத்தகைய கொலைகளை செய்யும் ஆயுதப் படையினரை பாதுகாக்க ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) பயன்படுத்தப்படுகிறது என்றும், சமீபத்தில் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகள் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்கும்படியும், அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. கொல்லப்பட்டவர்களில் 12 வயது சிறுவனும் அடக்கம்.
இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தரும்படி நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் திரு ஜே.எம்.லிங்டோ, மற்றும் டாக்டர் அஜய் குமார் சிங் அடங்கிய விசாரணை குழுவை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
போராட்டம்
அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர் போலி மோதலில் கொல்லப்பட்டதை எதிர்த்து போராட்டம்.
பொது நல வழக்கில் பட்டியலிடப்பட்டிருந்த போலி மோதல் கொலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமீபத்திய 6 வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் ஆயுதப் படையினரின் சாட்சியங்களை விசாரித்தும், கொல்லப்பட்டவர்களுக்கு கடந்த கால குற்றப் பின்னணி உள்ளதா என்று கண்டறிந்தும், இந்தக் குழு 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
முதலாவது வழக்கில், ஆசாத் கான் என்ற 12 வயது சிறுவன் அவனது வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதாக அவனது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆயுதப் படையினர் தரப்பிலோ “ஆசாத் கான் ஒரு பயங்கரமான தீவிரவாதி. நாங்கள் அவன் வீட்டை நெருங்கும் போது இன்னொரு சிறுவனோடு வீட்டின் பின்புறமாக தப்பித்து ஓடினான், ஓடும் போது 8 மிமீ துப்பாக்கியால் எங்களை நோக்கிச் சுட்டான். தற்காப்புக்காக ஏகே 47 தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டதில் ஆசாத் கான் குண்டடி பட்டு விழுந்து விட்டான். இன்னொரு சிறுவன் தப்பி ஓடி விட்டான்” என்கின்றனர் ஆயுதப் படையினர்.
demo-against-afspa
AFSPA சட்டத்தை எதிர்த்து கங்களா இல்லம் முன்பு பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் (ஜனவரி 25, 2014)
“ஏகே 47 துப்பாக்கி ஏந்திய 20 பாதுகாப்புப் படையினர் 8 மிமீ கைத்துப்பாக்கியால் சுட்ட சிறுவனை தற்காப்புக்காக சுட்டுக் கொன்றனர் என்பது நம்ப முடியாதது. மேலும் சிறுவர்கள் தரப்பில் 2 குண்டுகள் சுடப்பட்டதாக கூறும் ஆயுதப் படையினர் 65 முறை சுட்டிருக்கின்றனர். பட்டப் பகலில் நடந்ததாக கூறப்படும் இந்த மோதலில் ஆயுதப் படையினர் யாரும் காயமடையவில்லை. மணிப்பூர் காவல் துறை  அளித்த தகவல்களின்படி ஆசாத் கானுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்பு இருப்பதாகவோ, குற்றப் பின்னணி இருப்பதாகவோ நிரூபிக்கப்படவில்லை.
எனவே, முகமது ஆசாத் கான் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு மோதல் இல்லை என்றும் படையினர் தற்காப்புக்காக சுட்டதில் அவன் கொல்லப்படவில்லை” என்றும் ஹெக்டே விசாரணை குழு முடிவு செய்திருக்கிறது.
இரண்டாவது வழக்கில், 20 வயதான கும்போங்மயூம் ஓர்சன்ஜியை நோக்கி ஏகே 47 முதலான கனரக ஆயுதங்களால் 41 முறை சுட்டு 10 குண்டு காயங்களை ஏற்படுத்திய பாதுகாப்புப் படையினர், அதற்கு காரணமாக கும்போங்மயூம் தங்களை நோக்கி 8 மிமீ கைத்துப்பாக்கியால் சுட்டதாக (ஒரு முறை) கூறியிருக்கின்றனர். கும்போங்மயூமின் அம்மா, சம்பவ தினத்தன்று தனது மகன் தனது ஸ்கூட்டரை ரிப்பேர் செய்ய வெளியில் போனதாகவும், வெளியூர் போவதற்கு முன்பு மகனுடன் தொலைபேசியில் பேசியதாகவும், வெளியூர் போன பிறகு அவர் கொல்லப்பட்டதாக தொலைபேசி தகவல் வந்ததாகவும் கூறியிருக்கிறார். கும்போங்மயூம் கொல்லப்பட்ட சம்பவம் மோதல் இல்லை என்றும் பாதுகாப்புப் படையினர் சுயபாதுகாப்புக்காக சுட்டனர் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் விசாரணை குழு அறிக்கை அளித்திருக்கிறது.
தங்ஜம் மனோரமா
2004-ம் ஆண்டு கொல்லப்பட்ட தங்ஜன் மனோரமா
மூன்றாவது வழக்கில், வெளியில் டீ குடிக்கச் சென்ற கோபிந்த் மேய்த்தேயும், அவரது உறவினர் நோபோ மேய்த்தேயும் வீடு திரும்பவில்லை என்கின்றனர் அவர்களது குடும்பத்தினர். ஆனால், தங்களை தாக்கிய இந்த இளைஞர்களை தற்காப்புக்காக தாங்கள் சுட்டதாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர். இந்த சம்பவம் உண்மையான மோதல் இல்லை, பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டு இவர்களை கொன்றிருக்கின்றனர் என்று ஹெக்டே கமிஷன் முடிவு செய்திருக்கிறது.
நான்காவது வழக்கில், காணாமல் போன பசு ஒன்றைத் தேடி மிதி வண்டியில் வெளியில் போன 20 வயதான கிரன்ஜித் சிங், இம்பால் மண்டல மருத்துவ நிலையத்தின் பிணவறையில் உயிரற்ற உடலாகத்தான் பார்த்ததாக கூறுகிறார் அவரது தந்தை. இந்த வழக்கிலும் தற்காப்புக்காக சுட்டதில் கிரன்ஜித் சிங் இறந்து விட்டார் என்று பாதுகாப்புப் படையினர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது ஹெக்டே கமிஷன் அறிக்கை.
ஐந்தாவதாக, சொங்தாம் உமாகாந்தா அவரது நண்பரை பார்க்கப் போன இடத்தில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவரை இம்பால் அரசு மருத்துவமனை பிணவறையில் அடுத்த நாள் பிணமாக பார்த்ததாகவும் அவரது அம்மா புகார் கூறியிருக்கிறார். அவரது நண்பரின் தாய் கொல்லப்பட்ட சொங்தாம் தன் மகனை சந்திக்க வந்தபோது அவருடன் ஆயுதம் ஏந்திய இரண்டு நபர்கள் வந்ததாகவும், சிறிது நேரத்தில் பாதுகாப்புப் படையினர் வந்து அவரை இழுத்துச் சென்றதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவத்திலும், பாதுகாப்புப் படையினர் மோதலில் தற்காப்புக்காக உமாகாந்தாவை கொன்று விட்டதாக  சொல்வதை நிராகரித்திருக்கிறது கமிஷன்.
தங்ஜம் மனோரமா
ஆயுதப் படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட தங்ஜம் மனோரமாவின் உடல்.
ஆறாவது வழக்கில், ஊறுகாய்களுக்கான பாலிதீன் பைகள் வாங்கப் போன அகோய்ஜம் பிரியோப்ரதா வீடு திரும்பவில்லை. அடுத்த நாள் மாலையில் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்ததாக அவரது அம்மா புகார் தெரிவித்திருக்கிறார். இவரது மரணமும் மோதலில் நடக்கவில்லை, பாதுகாப்புப் படையினர் அடித்ததில் இறந்திருக்கிறார் என்று ஹெக்டே அறிக்கை முடிவு செய்திருக்கிறது.
இந்த அறிக்கைக்கான பதிலில்தான் மோடி அரசு தனது தோலில் உள்ள வரிகளை அழித்துக் கொண்டு விசமற்ற சாது பாம்பாக மாறி விட்டதாக தி இந்து நாளிதழும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் பூரித்திருக்கின்றன. ஆனால், தலைப்புச் செய்தியைத் தாண்டி படிக்கும் போது மோடி அரசின் உண்மையான பாசிச முகம் தெரிகிறது.
“போலி மோதல் கொலைகள் பற்றிய விசாரணை என்ற பெயரில் நல்ல எண்ணத்துடன், மோசமான நோக்கமின்றி பணியாற்றும் அப்பாவி பாதுகாப்புப் படையினர் அலைக்கழிக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும்” என்று தொடர்கிறது உள்துறை அமைச்சகத்தின் பதில். அதாவது ‘நல்ல எண்ணத்துடன்’, ‘மோசமான நோக்கமின்றி’ பணியாற்றுவதற்கு இந்திய அரசால் ஏகே 47 துப்பாக்கிகள் கொடுத்து அனுப்பப்படும் ஆயுதப் படையினரை அவர்களது நடவடிக்கைகள் தொடர்பாக கேள்வி கேட்டு தொந்தரவு செய்யக் கூடாதாம். அவ்வாறு செய்வது, மோடியோ, அல்லது உயர் பதவிகளில் இருக்கும் ஏதாவது ஒரு கேடியோ உத்தரவிட்டால் கண்மூடித்தனமாக அடிபணிவதற்கு அவர்களுக்கு மனத்தடையை ஏற்படுத்தி விடுமாம்.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்களை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தீக்குளித்த பேபாம் சித்தரஞ்சன்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
மணிப்பூர் மாநிலத்தை இந்தியாவிலிருந்து பிரிக்கும் நோக்கத்துடன் பல தலைமறைவு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராக இருப்பதாகவும், தீய வழிகளிலும், வெளிநாடுகளிலிருந்தும் திரட்டிய பணத்தை அதற்கு பயன்படுத்துவதாகவும் மோடி அரசின் பதில் தெரிவிக்கிறது. ஆனால், இந்திய அரசின் பாதுகாப்புப் படைகள் அப்படிப்பட்ட தலைமறைவு அமைப்புகளை எதிர்கொள்ளும் பெயரில் தங்ஜம் மனோரமா முதல் ஆசாத் கான் வரை ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்திருக்கின்றனர்.
“பாதுகாப்புப் படைகள் இத்தகைய பாதிக்கப்பட்ட பகுதியில் இயங்கி வருகின்றனர். ஆனால், போராளிகளின் ஆதரவாளர்கள் எந்த ஒரு மோதல் கொலையையும் போலி என்று பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றனர். இது போன்ற ‘போலி’ மோதல் கொலைகளில் ஏதாவது அப்பாவி பாதுகாப்புப் படைவீரர் அலைக்கழிக்கப்பட்டால், அது ஆயுதப் படைகளின் மன உறுதியை குலைத்து விடும்.” 12 வயது சிறுவன், தொலைந்து போன பசுவை தேடிப் போனவர், டீ குடிக்க போனவர், ஸ்கூட்டர் ரிப்பேர் செய்ய போனவர், நண்பனை பார்க்கப் போனவர் இவர்கள்தான் மோடி அரசு சொல்லும் தலைமறைவு அமைப்புகள். கொல்லப்பட்ட 1,528 பேரில் ரேண்டமாக எடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் போலி மோதல் என்று விசாரணை கமிஷன் முடிவு செய்திருக்கிறது. ஆயுதப் படையினர் சொல்லும் கதையின் அடிப்படையிலேயே கூட இந்த ‘பயங்கரமான பயங்கரவாதிகள்’ ஏந்தியிருந்த ஆயுதம் 8 மிமீ கைத்துப்பாக்கிகள்.
பேபாம் சித்தரஞ்சன் நினைவு
பேபாம் சித்தரஞ்சன் நினைவு
“பகைமையான, பாதுகாப்பற்ற சூழலில் இயங்கும் ஆயுதப் படையினருக்கு அடிப்படையான, மிகக் குறைந்த சட்ட பாதுகாப்பை ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் வழங்குகிறது. எனவே ஆயுதப் படையினர் உள்ளூர் காவல்துறையிடமிருந்தும், குற்றவழக்கு விசாரணைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.” என்கிறது மோடி அரசின் அறிக்கை. உள்ளூர் சாதி வெறியன் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி வரை பாலியல் குற்ற முதலைகளே தப்பித்து போய்க் கொண்டிருக்கும் அளவிலான ஓட்டைகளைக் கொண்ட காவல்துறை விசாரணை வலையில் கூட தங்கள் செல்ல ஆயுதப் படைகள் சிக்கி விடக் கூடாது என்பதுதான் மோடி அரசு மணிப்பூருக்கு வழங்கும் ‘ஜனநாயகம்’. இதன்படி ஆயுதப் படைகளின் கொலை, கொள்ளை, வன்முறை உள்ளிட்ட எந்த குற்றச் செயலையும் மாநில காவல் துறை விசாரிக்க முடியாது.
மணிப்பூரில் அந்த சட்டத்தை நீட்டிப்பதற்கு மாநில சட்டசபையின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற பரிந்துரையையும் அரசு நிராகரித்திருக்கிறது. “அப்படி செய்தால், தேவைப்படும் நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போய் விடும்” என்றது. மணிப்பூரில் கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் மாதக் கணக்கில் 144 தடையுத்தரவுக்கு உட்படுத்தப்படுவதும், கோவையில் புரட்சிகர அமைப்புகள் பொதுக் கூட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்த விடாமல் தடுக்கப்படுவதும், கடலூர் மாவட்டத்தில் யாரும் பேரணி நடத்தக் கூடாது என்ற காவல் துறை அடாவடியும் ஆன இந்திய ‘ஜனநாயக’ நடைமுறைகளின் அதி உயர்ந்த வடிவம்தான் மணிப்பூரில் இயங்கி வரும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம்.
இவ்வாறு, மணிப்பூரை தொடர்ந்து ஆக்கிரமித்து ஆட்சி செய்யும் தனது உத்தேசத்தை தெரிவித்திருக்கும் மோடி அரசு, அதற்கான நியாயமாக ஒரு காரணத்தை எடுத்து வெளியில் விடுகிறது.
"இந்தியா ராணுவமே, எங்களை ரேப் செய்"
“இந்தியா ராணுவமே, எங்களை ரேப் செய்” – 2004-ல் தங்ஜம் மனோரமா படுகொலையைக் கண்டித்து கங்களா இல்லத்தின் முன்பு மணிப்பூர் தாய்மார்கள் ஆர்ப்பாட்டம்.
மனம் போன வன்முறையில் ஈடுபடும் போராளிகளின் முக்கிய இலக்காக அதிகாரிகள் இருக்கின்றனராம். 1,528 பேர் போலி மோதல் கொலைகளில் கொல்லப்படுவதற்கு காரணமான அதிகாரிகள் மீதான வன்முறை எப்படிப்பட்டது? கடந்த சில ஆண்டுகளில் 27 அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். “பல  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்த மனிதத் தன்மையற்ற கசாப்புக்கு உயிரை பலி கொடுத்திருக்கின்றனர். இந்த அபாயங்களுக்கு மத்தியில்தான் மணிப்பூர் நிர்வாகம் எப்படியோ செயல்பட்டு சாதாரண குடிமகனுக்கு அடிப்படை சேவைகளை வழங்க முடிந்திருக்கிறது.” 1,528 பேரைக் கொன்ற அடிப்படை சேவையை வழங்கும் பணியில் 27 அதிகாரிகள் மனிதாபிமானமற்ற முறையில் தமது உயிரை பலி கொடுத்திருக்கிறார்கள்.
இந்த சட்டத்தை எதிர்த்து 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மணிப்பூர் மாணவர் பேபாம் சித்தரஞ்சன் தீக்குளித்தார். முன்னதாக, அந்த ஆண்டு ஜூலை மாதம் தங்ஜன் மனோரமா பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து மணிப்பூரின் பெண்கள் 17 அசாம் ரைஃபிள்ஸ் ஆயுதப்படையினர் ஆக்கிரமித்திருந்த கங்களா இல்லத்தின் முன்பு தமது ஆடைகளை களைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து அசாம் ரைஃபிள்ஸ் படையினரின் முகாம் கங்ளாவிலிருந்து மாற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை பற்றி ஆய்வு செய்ய நீதிபதி ஜீவன் ரெட்டி கமிட்டி நியமிக்கப்பட்டது. சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்த அந்த கமிட்டியின் அறிக்கையை மத்திய அரசு குப்பைக் கூடையில் போட்டு விட்டது.
தற்போது, ஹெக்டே கமிஷனின் விசாரணையின் போது பாதுகாப்புப் படையினருக்கு குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படியான அடிப்படை உரிமைகள் கூட கொடுக்கப்படாமல், அவர்கள் தம்மைத் தாமே குற்றம் சாட்டிக் கொள்ளக் கூடிய வகையில் சாட்சி சொல்ல கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்கிறது. அதாவது, ‘குற்றம் புரிந்தவனை விசாரித்தால் உண்மை வெளிப்பட்டு விடும், எனவே விசாரணை கூடாது’ என்ற மகத்தான ஜனநாயக தத்துவத்தை மோடியிசத்தின் அடுத்த கண்டுபிடிப்பாக மத்திய அரசு முன் வைத்திருக்கிறது.
போலி மோதல் கொலைகள் பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க அது குறித்த செய்திக்கு,  முற்றிலும் எதிரான, நேர்மறை டுவிஸ்ட் கொடுத்திருக்கும் ஊடகங்களின் அயோக்கியத்தனத்தை, அல்லது மொள்ளமாரித்தனத்தை பற்றி என்ன சொல்வது?
டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜால்ரா ஆஃப் மோடி என மாறி நீண்ட காலம் ஆகி விட்டது தெரிந்த விஷயம் என்றாலும், முற்போக்கு, மனித உரிமை என்று சீன் போடும் தி இந்து நாளிதழின் ஆளும் வர்க்க சாய்வு இங்கு அம்பலமாகியிருக்கிறது. கூடவே இராணுவம், போலீசின் அடக்குமுறையை வெளிப்படையாக ஆதரிக்கும் பாசிசத்தின் முன்னுரையும் மோடி அரசால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
-    செழியன் vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக