வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

தமிழகம் :300 அம்மா அங்காடிகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு !

அமுதம் அங்காடி | கோப்புப் படம்
ரூ.37 கோடியே 17 லட்சம் செலவில், தமிழகம் முழுவதும் 300 'அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்' துவங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா:
1. கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில் 114 பல்பொருள் அங்காடிகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 23 அமுதம் பல்பொருள் அங்காடிகள் என மொத்தம் 137 அங்காடிகள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. பல்பொருள் அங்காடிகள் விரிவுபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, 37 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 300 ‘அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்’ தமிழகமெங்கும் துவங்கப்படும். அம்மா தாயே எல்லா தர்மமும் பண்றீங்க கூடவே கொஞ்சம் அம்மா டாஸ்மாக் தெறந்தா கும்பிடுவேன் ஆத்தா

2. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான அரிசி ஆலைகளிலிருந்து தவிடு உப பொருளாக கிடைக்கிறது. தற்போது இந்த தவிடு, ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில் தனியாருக்கு விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சமையல் எண்ணெய் தேவை அதிகரித்துள்ளதாலும், தவிட்டிலிருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாலும், நவீன அரிசி ஆலையிலிருந்து உப பொருளாகக் கிடைக்கும் தவிட்டிலிருந்து சமையல் எண்ணெய் தயாரிக்க திருவாரூர் மாவட்டத்தில் 140 மெட்ரிக் டன் திறன் கொண்ட தவிட்டு எண்ணெய் ஆலை 16 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்படும். தவிட்டு எண்ணெய் சமையல் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல், சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க, உப பொருளாகவும் பயன்படும். எண்ணெய் நீக்கப்பட்ட தவிடு கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும்.
3.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமாக மேலும் கூடுதல் கிடங்குகள் அமைப்பதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு; 84,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 39 புதிய கிடங்குகள் 112 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். இதனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளின் கொள்ளளவு 8.36 லட்சம் மெட்ரிக் டன்னாக உயரும்.
4.விவசாயிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், விளைவிக்கும் இடங்களுக்கு அருகிலேயே 35 கோடி ரூபாய் மதிப்பில் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றில் 75 நேரடி நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள் காவிரி பாசனப் பகுதிகளிலும், இதர 25 நேரடி நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கட்டப்படும்.
5. விவசாயிகள் மற்றும் வணிகர்கள், தங்களுடைய விவசாயப் பொருட்களை விஞ்ஞான ரீதியில் சேமித்து வைத்து தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு சரக்குக் கட்டணத்தில் 30 சதவிகிதம் தள்ளுபடி மற்றும் அனைத்து வங்கிகளிடமிருந்து 7 சதவிகித வட்டியில் விவசாயப் பொருட்களின் மதிப்பில் 75 சதவிகிதம் பொருள் இருப்பு மீதான கடனைப் பெறுவதை கிடங்குகள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதற்காக தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் 36 கிடங்குகள் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு, தரச் சான்றிதழ் பெறப்பட்டு, மேற்படி கிடங்குகள் மூலம் மாற்றத் தக்க சேமிப்பு கிடங்கு ரசீதுகள், வழங்குவதை கிடங்குகள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் இருப்பு வைக்கும் பொருட்களுக்கு அனைத்து வங்கிகளிலும் மாற்றத்தக்க சேமிப்புக் கிடங்கு ரசீதுகள் மூலம் கடன் வசதி பெற இயலும். மேற்படி மாற்றத்தக்க சேமிப்புக் கிடங்கு ரசீதுகளை பெறுவதற்கு, பொருட்களின் தரம், ஈரத் தன்மை, வகைப்பாடு ஆகியவற்றை விஞ்ஞான ரீதியில் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. எனவே ஸ்ரீரங்கம், திருச்சி, திருவாரூர், ஈரோடு, ஆரணி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைக் கூடங்கள் 7 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.
6. தமிழக அரசு உணவு பாதுகாப்பை அளிப்பதுடன், உணவுப் பொருள்கள் தரமானதாக, உண்பதற்கு தகுதியானதாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும், உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கும் கலப்படப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறியவும் தேவையான பயிற்சிகளை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அளிக்க ஏதுவாக ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டத்தில் உள்ள 3.03 ஏக்கர் நிலம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி இடத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில், Centre for Consumer Education Research, Teaching, Training and Testing நிறுவனம் ஓர் ஆய்வகத்தை கட்டுவதற்காகவும், பயிற்சி அளிப்பதற்காகவும் 10 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் 14,750 சதுர அடி நிலப்பரப்பில், கட்டடம் கட்டுவதற்கான கருத்துரு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்ட பின், ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும். இதற்கு தமிழக அரசின் பங்கீடாக 40 சதவிகிதத் தொகையான 4 கோடியே 12 லட்சம் ரூபாய் அளிக்கப்படும்.
அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், குறைந்த விலையில், நிறைவான மற்றும் தரமான சேவையினை பொதுமக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் பெற வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்" இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக