புதன், 6 ஆகஸ்ட், 2014

30 வருஷங்களாக சத்துணவு காய்கறிக்கு ஒதுக்கப்படுவது 81 பைசா மட்டுமே ?

தமிழகத்தில், கடந்த 1984-ம் ஆண்டு முதல் சத்துணவு சாப்பிடும் ஒவ்வொரு குழந்தைக்கான காய்கறிசெலவுக்கு 81 பைசா மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 30 ஆண்டு களாக காய்கறி செலவுக்காக அரசு ஒதுக்கும் குறைந்த தொகையைக் கொண்டு கழிவு காய்கறிகளை சாப்பிடும் நிலைக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளதாக ‘தி இந்து’ தமிழ் அறிமுகப்படுத்தியுள்ள ‘உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணில் வாசகர் ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவு திட்டத்தை செயல் படுத்தினார். கடந்த 1984-ம் ஆண்டு இத்திட்டத்தை மேம்படுத்தி சத்துணவுத் திட்டமாகக் கொண்டு வந்தார் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் சத்துணவுத் திட்டம் பல்வேறு பரிமாணங்களாக மாற்றம் செய்யப்பட்டது. வாரத் துக்கு ஒரு முட்டை என்றும் பின்னர் வாரத்துக்கு ஐந்து நாள் என்றும் வழங்கப்பட்டது.
முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம், வாரம் ஒரு முறை சுண்டல் வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது. அவ்வப்போது ஆட்சியில் இருந்த வர்கள் சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டிய அளவுக்கு சத்துணவு சாப்பிடும் ஒவ்வொரு குழந்தைகளுக்குமான காய்கறி செலவில் மட்டும் ஏனோ அக்கறை காட்ட மறந்து விட்டனர்.
அதிசயம்
கடந்த 1984-ம் ஆண்டு ஒதுக்கப் பட்ட காய்கறி செலவினமும், மளிகைப் பொருட்கள், உணவு அளவீடுகளும் எவ்வித மாற்றமும் இல்லாமல், 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு விலைவாசி ஏற்றம் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில், அரசின் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் செலவுகளை உயர்த்தாமல் திட்டத்தை செயல்படுத்திவரும் அதிசயம் நடந்து வருகிறது.
எவ்வளவு?
தமிழகத்தில் பல லட்சம் குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். இவர்களில் ஆறாம் வகுப்பு முதல் 10- ம் வகுப்பு வரையில் பயிலும் குழந்தைகளுக்கு 150 கிராம் அரிசி, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு 100 கிராம் அரிசி, பருப்பு 15 கிராம், ஆயில் 00.3 சதவீதம், உப்பு 1 சதவீதம், பாசிப்பயிறு 20 கிராம், தாளிப்பு செலவு ஒரு மாணவனுக்கு (கடுகு, உளுந்து, கருவேப்பிலை) 7 பைசா, கீரை, காய்கறி என்ற கணக்கீட்டின் வகையில் ஒரு மாணவனுக்கு 81 பைசா அரசு ஒதுக்கீடு செய்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் காய்கறி செலவை, இன்றைய சூழ்நிலையில் ஒப்பிட்டு பார்த்தால் 100 மாணவ, மாணவியருக்கு வெறும் 81 ரூபாயில் காய்கறி வாங்கி, சத்துணவு அமைப்பாளர்கள் உணவு சமைத்திட வேண்டும்.
இன்றைய நிலவரப்படி உழவர் சந்தையில் காய்கறிகளின் விலைப் பட்டியலை பார்த்தால் சத்துணவு மாணவர்களின் நிலைமை தெள்ளத் தெளிவாகும்.
உழவர் சந்தையில், ஒரு கிலோ தக்காளி - ரூ.42; கத்தரி - ரூ.22 முதல் ரூ.26 ; வெண்டை ரூ.20; பாகற்காய் - ரூ.34; சர்க்கரை பூசணி- ரூ.22; அவரைக்காய் - ரூ.34; பச்சைமிளகாய் - ரூ.50; கேரட் -ரூ.56; பீட்ரூட் - ரூ.40, வெங்காயம் - ரூ.32; உருளை - ரூ.36 என காய்கறிகள் விலை உள்ளது. இதுவே வெளிமார்க்கெட்டில் உழவர் சந்தையில் விற்பனை செய்வதை காட்டிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சத்துணவு அமைப்பாளர்கள் மலிவு விலையில் கிடைக்கும் காய்கறிகளை தினம் தோறும் தேடிப் பிடித்தாக வேண்டிய இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், மார்க்கெட்டில் கழித்துக் கட்டும் காய்கறிகளையும், கூறுகட்டி விற்பனை செய்யும் பழைய காய்க றிகளையும் வாங்கி மாணவர்களுக்கு சமைத்துப்போட்டு வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக காய்கறி செலவை உயர்த்தாமல் இருக்கும் தமிழக அரசு, பல லட்சம் மாணவ, மாணவியருக்கு தரமான உணவை வழங்கும் விதத்தில் செலவுத் தொகையை உயர்த்தி தர வேண்டும் என்பது ஒட்டுமொத்த சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை.
வெரைட்டி ரைஸ் திட்டம்
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) நாகராஜ் கூறும்போது, இன்றைய காய்கறி விலையுடன், அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி போதாததாக உள்ளது என்பது உண்மைதான்.
கடந்த 1984-ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காய்கறி செலவு நிதியே இன்றளவும் அமலில் இருந்து வருகிறது.
தமிழக அரசு வாரத்தில் ஐந்து நாளும் ஒவ்வொரு வெரைட்டி ரைஸ் வழங்கும் திட்டத்தை, மானிய கோரிக்கையில் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
எனவே, இப்பிரச்சினைக்கு வெரைட்டி ரைஸ் திட்டம் அமல்படுத்தும்போது அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக