சனி, 2 ஆகஸ்ட், 2014

ஜெயலலிதா: 234 தொகுதிகளும் அ.தி.மு.க. தொகுதிகள் தான் அல்லது எனது தொகுதிகள்தான் !

சட்டசபையில்  கேள்வி நேரம் முடிந்ததும், 110 விதியின் கீழ் ஜெயலலிதா 3 அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.விவாதத்தை தொடங்கி வைத்து தே.மு.தி.க. உறுப்பினர் அருள் செல்வன் (மயிலாடுதுறை தொகுதி) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-உறுப்பினர் அருள் செல்வன்:- எனது தொகுதியில் கலை-அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.ஜெயலலிதா:- இந்த அறிவிப்பை வெளியிட்டது யாரும் நன்றி சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து அல்ல. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் அ.தி.மு.க. தொகுதிகள்தான். மயிலாடுதுறை தொகுதியை தனது தொகுதி என்று உறுப்பினர் சொந்தம் கொண்டாடுகிறார். 
2016-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், மயிலாடுதுறை தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறப்போவது திண்ணம்.

உறுப்பினர் அருள் செல்வன்:- தமிழகத்தில் எம்.ஜி. ஆருக்கு பிறகு எந்த கட்சியும் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற வரலாறு கிடையாது.

(உறுப்பினர் அருள் செல்வனின் இந்த பேச்சுக்கு அ.தி.மு.க. அமைச்சர்களும், உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- பாராளுமன்ற தேர்தலில் தனி ஆளாக நின்று அ.தி.மு.க. 44.3 சதவீத வாக்குகளை பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

(அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ், தேர்தல் கமிஷன் பற்றி கருத்து ஒன்றை தெரிவித்தார்)

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்:- தேர்தல் கமிஷன் பற்றி குறைசொல்ல உங்களுக்கு உரிமையில்லை. உள்ளாட்சி தேர்தலிலேயே உங்கள் (தே.மு.தி.க.) சாயம் வெளுத்துவிட்டது. இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 14 இடங்களில் போட்டியிட்டு 10 இடங்களில் டெபாசிட் கூட பெற முடியவில்லை.

அமைச்சர் வைத்திலிங்கம்:- தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நெஞ்சில் தைரியத்துடன் தேர்தலில் தனித்து நின்றால், 234 தொகுதிகளிலும் டெபாசிட் கூட கிடைக்காது. ஆனால், தனித்து நிற்கும் துணிச்சல் அம்மா அவர்களுக்கு மட்டும் உண்டு.

ஜெயலலிதா:- நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு, 234 சட்டமன்ற தொகுதிகளில் 217 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உறுப்பினர் அருள் செல்வன்:- அரசியல் வரலாற்றில் தோல்வியடையாத கட்சிகள் இல்லை.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்:- வெற்றி, தோல்வி வரும். ஆனால், தொடர்ந்து தோல்வி அடைந்தே வருகிறீர்களே. ஆண்டவனோடும், மக்களோடும்தான் கூட்டணி என்றீர்கள். அந்த திராணி எங்கே போய்விட்டது.

(அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் ஆவேசமாக எழுந்து சபாநாயகரிடம் பேசுவதற்காக அனுமதி கேட்டார்)

சபாநாயகர் ப.தனபால்:- நீங்கள் மிரட்டும் மாதிரி கேட்கிறீர்கள். இது முறையாகாது. இருக்கையில் அமருங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக