ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பிரவீன் குமார் ராஜினாமா ! அதிமுகவுக்கு ஆதரவாக 144 தடை உத்தரவு போட்டமை நிருபணமாகிறது ?

சென்னை: தமிழக எதிர் கட்சிகளின் தொடர் புகாரை அடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய பிரவீன்குமார் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பிரவீன்குமார், கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இவர் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த காலத்தில்தான், தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தல், இடைத் தேர்தல்கள் மற்றும் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தல் நடந்தது. அப்போது மக்களை தேர்தலின் போது, பொதுமக்கள் யாரும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்து செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதித்தார். இதனால் வியாபரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைத்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினார். மேலும், தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை பிரவீன்குமார் பிறப்பித்தார். இதை பயன்படுத்தி ஆளுங்கட்சியினர், சில போலீஸ் அதிகாரிகளின் உதவியோடு வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர் கட்சி தரப்பில் பகிரங்க புகார் கூறப்பட்டது. இனி என்னத்தை செஞ்சு என்னாவாக போகிறது ? கொடுத்த காசு கொடுத்ததுதான் போட்ட ஒட்டு போட்டதுதான் எல்லாம் தலையெழுத்து .
தேர்தல் ஆணையத்தின் 144 தடை உத்தரவு ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்ததாகவும், ஆளுங்கட்சியுடன் தேர்தல் ஆணையம் கூட்டணி அமைத்துள்ளது எனவும் எதிர் கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக எதிர் கட்சி சார்பில், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேர்தல் முடிவும் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே அமைந்தது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இது, எதிர் கட்சியினரை மேலும் யோசிக்க வைத்தது.

தேர்தல் ஆணையத்தின் உதவியால் தான், ஆளுங்கட்சியினர் வெற்றி பெற்றனர் என அவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். இது, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பணியில் தொடர்ந்து நீடிக்க அவர் விருப்பம் இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக தொடர்ந்து நீடிக்க விரும்ப வில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் துறையில் இருந்து விலகி, மீண்டும் வேறு எதாவது அரசு துறையில் சேர்ந்து பணியாற்ற அவர் விரும்புவதாக தெரிகிறது. சில வாரங்களுக்கு முன் பிரவீன்குமார், இந்திய தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தன்னை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு நேரிலும், கடிதம் மூலமும் வலியுறுத்தியுள்ளார்.

பிரவீன்குமாரின் கோரிக்கையை ஏற்று, அவர் அப்பதவியில் இருந்து விரைவில் விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அவ்வாறு அவர் விடுவிக்கப்படும் பட்சத்தில், தமிழகத்துக்கு புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்படுவார். பிரவீன்குமார் தேர்தல் துறையை விட்டு விலகினால், அவருக்கு மத்திய அரசின் வேறு எதாவது துறையிலோ அல்லது தமிழக அரசு அதிகாரியாகவோ நியமிக்கப்படலாம் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக