வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

1,442 பெண்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை ! வீரமணி !

தமிழ்நாட்டில் அரசுப் பெண்கள் பள்ளிகளில்கூட போதுமான எண்ணிக்கையில் கழிப்பறை வசதியில்லை என்றும், தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி கழிப்பறை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,>தமிழ்நாட்டில் 15 சதவிகித - அரசுப் பள்ளிகளில் அதாவது 5,720 அரசுப் பள்ளியில் - கழிப்பறை வசதிகள் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (மத்திய கல்வி அமைச்சகம்) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது!இதில் - அதாவது 5,720இல் 1442 பள்ளிகள் - பெண்களுக்கான பள்ளிகள் என்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியதாக இருக்கிறது! தமிழ்நாட்டில் மொத்தம் 37,002 அரசு பள்ளிகள் உள்ளன.பெண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியில்லையா?

இதில் 1,442 பெண்கள் பள்ளிகளிலும் 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை என்ற அவலம் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.<2013-2014->

தனியார் நடத்தும் பள்ளிகளிலும்கூட போதிய கழிப்பறை வசதிகள் இருக்கின்றனவா என்பது பற்றிய ஆய்வு செய்து  - தமிழக அரசு அதனையும் கண்காணிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.

அரசுப் பள்ளிகளில் 90 விழுக்காடு நிதி சம்பளம் கொடுப்பதற்கே செலவிடப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும் அதுதக்க சமாதானமாக (இக்குறைபாடுகளை நீக்கிட) ஆகாது. உடனடியாக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கல்வியைப் பொதுப் பட்டியலில் வைத்து அதிகாரம் செய்ய முன் வந்துள்ள மத்திய அரசு, இதற்கெனவே மாநிலங்களுக்குத் தனி நிதி உதவி (மான்யமாக) தந்திட உடனே முன்வர வேண்டும்.

கடந்த ஜூலை 30ஆம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் - விதி 110ன் கீழ் ஓர் அறிக்கை வெளியிட்டார் முதல்வர் அவர்கள். அதில், அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவிகிதம் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் இருக்க வேண்டுமென்று கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதில் 2047 பள்ளிகளில், கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டும் முரண்பட்ட தகவல்களாக அமைவது - ஏனோ?

எப்படி இருந்தபோதிலும் உடனடியாக கழிப்பறைகள் அமைக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் முழு நேர துப்புரவுப் பணியாளர் ஒருவரும் நீர் வசதியும் ஏற்படுத்தித் தரும் பொறுப்பைக் கண்காணித்து, “பள்ளி சுகாதாரப் பிரிவு” ஒன்றையேகூட ஏற்படுத்தினால் பிள்ளைகளின் நலவாழ்வு பாதுகாக்கப்பட வசதிகள் ஏற்பட்டு, இந்தியாவிற்கு தமிழ்நாடு இதிலும் வழிகாட்டி மாநிலமாக அமையக் கூடும் அல்லவா?

இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார். nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக