திங்கள், 4 ஆகஸ்ட், 2014

திருப்பூரில் ஆறு மாதத்தில் 135ர் தற்கொலை! டாஸ்மாக் வருமானம் ஓஹோ !

திருப்பூர்:திருப்பூரில், கடந்த ஆறு மாதத்தில், 90 ஆண்கள்,39 பெண்கள் உள்பட 135 பேர் தற்கொலை செய்துகொண்டனர். வந்தாரை வாழவைக்கும் திருப்பூர், தமிழக அளவில் தற்கொலை துயரில் முதல் நகரமாக மாறிவிட்டது.
வேலைவாய்ப்பின்றி திக்கற்று அலையும் எண்ணற்ற வெளிமாநிலத்தவருக்கும் தமிழகத்தின் பிற மாவட்டத்தினருக்கும், வாழ்வளித்து, வந்தாரை வாழ வைக்கும் நகரமாக விளங்குகிறது திருப்பூர்.இதனால், நாள்தோறும் பல ஆயிரம் பேர் புதிது புதிதாக இந்நகரை நோக்கி படையெடுக்கின்றனர். அதற்கேற்ப, குற்றம் மற்றும் பிரச்னைகளும் திருப்பூரில் அதிகரித்துள்ளன. குறிப்பாக, தற்கொலைச் சாவுகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன. இனி என்ன ஜாலியாக அம்மாவின் பெயரால் "அம்மா  தற்கொலை கடைகள்"  ஆரம்பிக்க வேண்டியதுதானே ?

திருப்பூர் மாநகரில், கடன் தொல்லை, குடும்ப பிரச்னை, காதல் தோல்வி, வாழ்வில் விரக்தி உள்ளிட்ட காரணங்களால், கடந்த 2013ல், ஆண்கள் 147 பேர், பெண்கள் 152 பேர், சிறுவர்கள் ஆறு பேர், சிறுமியர் 16 பேர் என மொத்தம் 321 பேர் தற்கொலை கொண்டனர்.நடப்பு ஆண்டில், கடந்த ஜனவரி - ஜூன் வரை, 90ஆண்கள், 39 பெண்கள், 4 சிறுமியர், 2 சிறுவர்கள் என, மொத்தம் 135 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை துயரில் தமிழக அளவில், திருப்பூர் மாவட்டம் முதலிடம் வகிப்பதாக போலீஸ் ஆவண புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற துயரங்களை தடுக்க, திருப்பூர் கலெக்டர் தலைமையில், சமூக நலத்துறை, மருத்துவத் துறை, தொழிலாளர் நலத்துறை, போலீஸ், தொண்டு நிறுவனத்தினர், தொழில் அமைப்புகள், தொழிற்சங்க பிரதிநிதிகளை கொண்ட 'தற்கொலை தடுப்புக்குழு', கடந்த 2010ல் அமைக்கப்பட்டது. இருப்பினும், தற்கொலை சாவுகள் குறைந்தபாடில்லை.இதுகுறித்து, மனநல டாக்டர் ஒருவர் கூறியதாவது: திருப்பூர் நகரில் தெருவுக்கு தெரு மதுக்கடைகள் உள்ளன. தொழிலாளர்களுக்கு பொழுது போக்கு அம்சங்கள் எதுவும் இல்லாததால், பலரும் குடி பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இவர்கள், தங்களது குடும்பத்தை சரிவர நடத்த முடியாத அளவுக்கு சமூக, பொருளாதார பிரச்னைகளில் சிக்குகின்றனர்.
வாரம் முழுவதும் உழைத்து ஈட்டும் வருவாயில், பெரும்பங்கை மதுவுக்கு செலவிடுவோரின் குடும்பங்களில், பண பற்றாக்குறை பிரச்னைகள் உருவெடுக்கின்றன. குழந்தைகள் கல்வி பயில, உணவுக்கு பணமின்றி சிரமப்படுகின்றனர். அதை ஈடுகட்ட கடன் வாங்கி, வட்டி செலுத்துகின்றனர்.ஏற்கனவே, நிதி பிரச்னையில் இருக்கும் குடும்பம், மீண்டும் வட்டிக்காரர்களின் பிடியில் சிக்கி, பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறது. ஒரு கட்டத்தில் அமைதியிழந்து கணவன் - மனைவி பிரச்னை ஏற்பட்டு குடும்பம் பிரிகிறது. மன உளைச்சலில் கொலை, தற்கொலைகள் நிகழ்கின்றன.தவிர, குடிபோதையில் தன்னிலை மறந்து சண்டையிடும்போது, கொலைகளும் நிகழ்கின்றன. தற்கொலைகளை தடுக்க வேண்டுமெனில், வெறுமனே கவுன்சிலிங் மட்டும் போதாது. அந்த குடும்பத்தின் பொருளாதார பிரச்னைகளையும் தீர்ப்பதாக இருக்க வேண்டும். மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு, குடும்ப பிரச்னைகளை தீர்ப்பது என்பது, காயம் ஒரு பக்கம் இருக்க, மருந்து ஒரு பக்கம் தடவுவதாகவே இருக்கும்.
மக்களை, குடிபோதைக்கு அடிமையாக்கும் அரசு, அதிலிருந்துவிடுபட முயற்சிப்போரை, விரும்புவோரை மீட்டு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ ஆலோசனை மற்றும் குடிமீள் பயிற்சி மையங்களை மாவட்டம் தோறும் நிறுவ வேண்டும். அதற்கான, கடமையும், பொறுப்பும் அரசாங்கத்துக்கு உண்டு.இவ்வாறு, மனநல டாக்டர் தெரிவித்தார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக